Wednesday, April 18, 2012

வெளங்கிரும்


வார்த்தைகள் ஒரு அடையாளம்.
சூழலை, இடத்தை, கலாசாரத்தை, மரபைக் காட்டும் அடையாளம்.
ஒரே மொழிதான் என்றாலும் வெவ்வேறு வட்டாரங்களின் சொல் பயன்பாடுகளுக்கு தனித்தன்மை உண்டு. மற்றவர் எளிதில் விளங்க முடியாதது.

’வெளங்கிரும்’ என்று சொன்னால் சட்டென்று பொருள் விளங்கி விடாது.
கன்யாகுமரி மாவட்டத்தில் இந்த வார்த்தையை சந்திக்க நேரிடலாம்.


’விளங்கிவிடும்’ என்பதுதான் சற்று நசுங்கி ‘வெளங்கிரும்’ வடிவில் நடமாடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.. வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு சிலதை இழந்து இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பாடம் நடத்துகிற ஆசிரியர் ‘விளங்கிச்சா’ என்று கேட்டால் ‘புரிந்ததா’ என்று கேட்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். ‘வெளங்கிரும்’ என்று சொன்னால்  அதன் அர்த்தம் ‘புரிந்துவிடும்’  என்று புரிந்து கொள்ள தோன்றினாலும் அதன் பொருள் அதுவல்ல.

மேன்மையடையும், உருப்பட்டுவிடும்,சிறந்து விளங்கும் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொனி அதுவல்ல. வஞ்சப்புகழ்சி குடும்பம். எதிர் கட்சி இருக்கை. நல்லவன் வேடத்தில் இருக்கும் கெட்டவன்.
’நாசமா போயிரும்’  என்பதான வாழ்த்துக்கு இணையானச் சொல். நக்கல் தொனி.

அப்பனுக்கு எதிரே மகன் ’தண்ணி’யடித்தால்‘வெளங்குவியா?’
அந்த மகனிடமே வாங்கி அப்பன் அடித்தால்..’வெளங்கிரும்’.

Monday, April 9, 2012

எல்லாருக்கும் நாப்பது. உனக்கு மட்டும் முப்பது

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தின் நுழைவாசலருகே நடைபாதையில் அந்த பாட்டி இருப்பார். மஞ்சள் பூசி குளித்த முகம். சுத்தமான கதர் புடவை.

சாக்கு பை விரித்து சப்போட்டாவும், கொய்யாவும் பரப்பி வைத்திருப்பார்.வெயில் காலங்களில் வெள்ளரி பிஞ்சு. கைக்கருகே ஒரு  அட்டைபெட்டி இருக்கும். அதற்கு மேலே ஒரு தராசு. எளிமையான தொழிலதிபர்.

பக்கத்திலே  இருக்கிற பெரிய பழக்கடையில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற  சட்டை போட்ட பழங்களையே வாங்கி பழக்கப் பட்டது.அதுதான் அந்தஸ்து என்று புத்தியில் ஏற்றப்பட்டிருந்தது. ஏதோ ஒரு நாளில் நல்ல பழங்களாக எடுத்துக் கொள்ள விரும்பி நானே அந்த கடையில் பொறுக்கியெடுத்த போது கடைக்காரன் கடுப்புடன் வெடித்தான் “ வந்துட்டாரு தொர.. நவுரு.. நவுரு” 
சுய கௌரவத்தின் கன்னத்தில் அறை விழுந்தது. வெளியேறிய போது மெழுகு பூசிய பழங்களும் கசந்தன.
அதன் பிறகான ஒரு நாளில்தான் பாட்டியின் பரிச்சயம்.
”வீட்டு தோட்டத்தில விளைஞ்சது மக்களே.. ஒரு கிலோ போடட்டா..” என்பாள்.
”ஒரு துண்டு தின்னு பாக்கியா”  கனி தனி சுவையாய்தான் இருக்கும்.
”எல்லாருக்கும் நாப்பது. உனக்கு மட்டும் முப்பது. எத்தனை கிலோ வேணும்” சொல்வதற்குள் தராசை தூக்கி எடை போட தயாராகி விடுவாள்.

நாமே தொட்டு பழங்களை தேர்ந்தெடுக்க நினைத்தாலும் ஏற்கெனவே பட்ட அடியில் விலகியே நின்றேன்.
ஆனால் பாட்டி நமக்காக நல்ல பழ்ங்களை,பெரிய காய்களாய் தேர்ந்தெடுத்து தராசில் போடுவாள். சிலதை எடுத்து பார்த்துவிட்டு ’இது ஆகாது ’ என்பதாய் ஒதுக்கி வைப்பாள். சிலசமயம் பக்கத்து அட்டை பெட்டியில் மறைவாய் வைத்திருக்கும் பழங்களை எடுத்து கரிசனையாய் தருவாள். ’பிள்ளையளுக்கு கொண்டு குடு’ என்று எடை போட்ட பின்னும் ஒன்றிரண்டை சேர்த்து தருவாள். சினேகமாய் சிரிப்பாள்.

அரைகிலோ வாங்கபோன என்னிடம் ரெண்டு கிலோ விற்ற பாட்டி மார்கெட்டிங்கில் எந்த பட்டமும் பெற்றதாக தகவலில்லை.
பாட்டியின் வியாபாரம் சில மணி நேரத்துக்குள்ளே முடிந்து போய்விட்டது. கடையை காலி செய்து விட்டு கிளம்பி விட்டாள்.

பாட்டியின் வியாபாரம் சில மணி நேரத்துக்குள்ளே முடிந்து போய்விடும். கடையை காலி செய்து விட்டு கிளம்பி விடுவாள்.

பாட்டியின் சொந்த தோட்டம் வீட்டுமனையாக கூறுபோட்டு விற்கப்படாதிருப்பதாக.
நடைபாதை  நகர நிர்வாகத்தால் விரட்டியடிக்கப்படாமல் இருப்பதாக.
அவள்  ஆரோக்கியம் நீடித்திருப்பதாக.
நாளையும் பின்னும் பல நாளும் அவள் வந்து போயிருக்க.... பிரார்த்தனை செய்கிறது மனசு.

Tuesday, April 3, 2012

சிலுவை மரம்.
அதிகார வர்க்கம் சிலுவைக்கு கையளித்தபோது.. ஏறக்குறைய அவர் அனாதையானார்.

ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நின்றது அவர் செய்த குற்றம்.
ஆதிக்க வெறியர்களின் வஞ்சகத்தை உரித்துக் காட்டியது பெரும் பிழை.
எளியோரின் உரிமை வாழ்வுக்கு குரல் கொடுத்தது மாபெரும் சதி.

எப்படி பொறுக்க முடியும்.
ஒரு தச்சனின் மகனுக்கு எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல். எமக்கு நிகராக  நீயாக முடியுமா..?
ஆணையிடுகிற அமைப்பையே கேள்விக்குள்ளாக்கினால்.. விட்டு விட முடியுமா..?

எனவே வெறுப்பின் முள்முடிகளாலும் பழிவாங்கும் ஆணிகளாலும் துளைத்தெடுத்தோம்.

நிருபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் மேல் சிலுவையை தூக்கி வைத்துவிட்டு பிலாத்துகள், தங்கள்  கயமைத்தனத்தை கைகழுவிக் கொண்டார்கள்.

அவர் கொடுத்த ‘ அழைப்பை’ அடுத்த கணமே ‘ஏற்றுக் கொண்டு’  பின் தொடந்தவர்களே இப்போது ஆளுக்கொரு திக்கில்.

உடன்வந்தோரும் நெருக்கடிகளுக்குப் பயந்து மறுதலிக்கவே செய்தார்கள்.

வழிந்த இரத்த வியர்வையை வலிந்து துடைக்க வந்த வீரமிக்க பெண்டிர் விதிவிலக்கு.

முடியாட்சிகள் போய் குடியாட்சிகள் வந்த பின்னும் வரலாறுகள் மாறவே இல்லை.
சகிப்புத்தன்மையும்,  நீதிக்காக போராடும் குணமும் கொண்டோரை அப்போதிலிருந்தே  சிலுவையில் அறைவதே நமக்கு பழக்கமாயிருந்திருக்கிறது.

உயிர்ப்பு, மூன்றாம் நாள்தான் என்பது தெரியாமலே வாழ்க்கை போய்கொண்டேயிருக்கிறது.
[புகைப்பட உதவி: google images]

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More