Monday, November 28, 2011

பாம்பு


 செக்கசெவேலென்று குருதிபடிந்த போர்களம் போல் காட்சியளித்தது வானம். வெட்டுண்டு உருண்டு விழும் தலைபோல் கதிரவன் ,மேற்கில் விழுந்து கொண்டிருந்தான். போதையேறி தடுமாறிக் கொண்டிருப்பவனைப் போல கடற்பரப்பு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. விம்மி புடைக்கும் அந்த கடல் மார்பில் பாய்மர படகுகள்  உரசிக் கொண்டிருப்பது நிழற் சித்திரமாய் ரசிக்க வைக்கிறது.

அந்த அழகை ரசிப்பார் யாரும் இல்லை இப்போது. சொன்னதையே சொல்லும் குடிகாரனைப்போல கரையில் திரும்ப திரும்ப வந்து மோதும் அலைகளோடு விளையாட யாருக்கும் ஆர்வமில்லை. எங்கும் துக்கம் தோய்ந்த முகங்கள்.பயம் நிரம்பிய விழிகள். கூடபுரம் மக்கள் தங்கள் நிம்மதியை தொலைத்து பல ஆண்டுகளாயிற்று. எல்லாம் அந்த புதரால் வந்த வினை.

கூடபுரத்தின் குடியிருப்புகளை ஒட்டிதான் அந்த புதர் இருந்தது. அடர்த்தியான உயரமான புதர். உள்ளே என்ன இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு காடு மாதிரி விரிந்து கிடந்தது. சிலர் வருவதும் போவதும் ரகசியமாய் நடந்து கொண்டிருந்தது. அதன் அருகே செல்ல யாரும் விடப்படவில்லை. ஏதோ ஓர் ராஜாங்க விசயம்.யாரும் நெருங்க துணியவில்லை.

இப்படி இருக்கையில்தான் சில நாட்களுக்கு முன்பு நாய் ஒன்று அந்த புதரைப் பார்த்து நீண்ட நேரமாய் குரைத்துக் கொண்டிருந்தது.  ‘என்னடா  இது   நம்  நாய்  இப்படி  விடாம  கத்திக் கொண்டிருக்காதே’  என்ற ஐயத்தில் நாயின் சொந்தகாரனான உதயவர்மன் புதரை எட்டிப் பார்த்தான். புதருக்குள்ளே ஏதோ அசைவது மாதிரியிருந்தது. எட்ட நின்று உற்று  பார்த்தவனுக்கு மூச்சே நின்றுவிட்டது சிலகணம்.

 உள்ளே சுருண்டு மடங்கி பசியோடு பாம்பு ஒன்று படுத்துக் கிடந்தது. ராட்சச பாம்பு. சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பாம்பு எதிரே நாயைக் கண்டதும் உற்சாகமாகி, பிரமாண்டம்மான வாயைத்திறந்து கத்திக்  கொண்டிருந்த நாயை ‘லபக்’என்று விழுங்கி பெருமூச்சி விட்டது. உதயவர்மன் பயந்து அலறிக் கொண்டே ஊருக்குள் ஓடினான்.

சத்தம் கேட்டு கூட்டம் கூடியது. ‘அந்த புதரில் ஆபத்து இருக்கிறது.  ஆபத்து ’ என்று கத்தியவனை மற்றவர்கள் பொருட்படுத்தவே இல்லை.
‘கிறுக்குத்தனமா எதையாவது உளறிக் கொண்டிருக்காதே. மன்னர் காதில் விழுந்தால் தொலைந்தோம். பேசாமலிரு. மன்னரிடம் சொல்லி நாம் முறையிட்டு பார்ப்போம்’.
அதற்குள் புரவிகளில் வந்த காவலர்கள் கூட்டத்தை விரட்டியடித்தனர். கூட்டம் பயந்து மிரண்டு ஓடி கலைந்தது.

அதன் பிறகு, மக்கள் வீடுகளில் வளர்க்கிற கோழி ,ஆடு,மாடு போன்ற பிராணிகள் காணாமல் போகத் தொடங்கியதிலிருந்து அனைவரின் நிம்மதியும் கரைந்து போனது. யாரும் மூச்சுவிடவே பயந்தார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் தின்று கொழுத்துக் கொண்டிருந்தது பாம்பு.

எல்லாம் அடித்து தின்றபிறகு இனி ஆளையும் அடிக்கலாம் என்று நம்பிக்கை அதற்கு வந்ததும் ஒரு நாள் ‘புஸ்ஸ்ஸ்ஸ்ஸெ’ன்று தலையை உயர்த்திக் கொண்டு சீறியது. சந்தோசத்தை வெளிக்காட்டிய அந்த பிரமாண்ட சீற்றம் ஊரையே உலுக்கிப் போட்டது. நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த குடிமக்கள் அந்த சத்தத்தை கேட்டதும் அலறியடித்துக் கொண்டு வீதிக்கு வந்தார்கள். கூட புரத்தில் ஏதோ நடக்கப் போகிறது என்பதற்கு எச்சரிக்கை மணியாக இருந்தது அந்த சத்தம்.

‘புக்கிசிக்கி’ என்ற தூர தேசத்து யாத்திரிகனின் பயணக் குறிப்புகளும் மக்களிடம் பரவத் தொடங்கியிருந்த காலம் அது.அவரது குறிப்பில் இது போன்ற பாம்புகள் மிகவும் கொடியன என்றும், அது இருந்த இடத்திலிருந்து பல காத தூரத்துக்கு விசத்தை கக்கி எதிரிகளை அழித்து விடும் என்பதும் அது விடும் மூச்சு காற்றில் புற்பூண்டுகள் கருகிவிடும் என்பதும் வாழிடங்களை விட்டு மற்ற உயிர்களை துரத்திவிட்டு,பலுகிபெருகி நிலமெங்கும் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆக்கிவிடும் என்னும் உண்மைகளும் வெளிவந்தவண்ணமிருந்தன.

மற்ற பகுதிகளில் விரட்டியடிக்கப்பட்ட இந்த பாம்பை இந்த இடத்தில் மட்டும் விட்டு வைக்க என்ன காரணமிருக்கும். என்ற ஐயம் எல்லோரிடமும் எழுந்தது. 

பாம்பின் அந்த சீற்றத்தைக் கேட்டதுமே உதய வர்மனுக்கு , தான் எதிர்பார்த்த ஆபத்து நெருங்கிவிட்டது என்பதை தெரிந்து போயிற்று.  “ இந்த புதர் நமக்கு வேண்டாம்” என்று கூச்சல் மக்களிடம் மனங்களிலும் குரல்களிலும் எழுந்தன.

மெதுவாக தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு சூழ் நிலையை உன்னிப்பாக கவனிக்கத்தொடங்கினான் உதய வர்மன். காட்டின் மையத்தில் பாம்பின் தலை தெரிந்தது.பிரமாண்டமான தலை. ஒன்றல்ல இரண்டு தலை. இரண்டு பாம்புகளோ. அப்படிதான் இருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டான்.

குடிமக்கள் தவிப்பும் பயமுமாக கத்திக் கொண்டேயிருந்தார்கள். இன்னும் விழித்துக் கொள்ளாமல் போனால் நமக்கும் நாயின் நிலைதான் என்று திகில் அவர்கள் முகங்களில் விரவி கிடந்தது. எனவேதான் அந்த பாம்பை அடித்து துரத்தி விடவேண்டுமென்று புதரைச் சுற்றி கூடியிருந்தார்கள்.  அரண்மனை காவலர்கள் அவர்களை ஒரு படையாக வந்து சூழ்ந்தார்கள்.

 “அது அரசாங்கமே வளர்க்கிற பாம்பு. தூர தேசத்திலிருந்து கொண்டுவந்து விட்டிருக்கிறோம்.அதை விரட்டக் கூடாது. நமது சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாப்புக்காக அந்த பாம்பை நாம் மன்னர் வளர்க்கிறார். கஜனாவில் பாதியை அதற்கு செலவழித்திருக்கிறோம். அது இங்கு இருப்பதை அறிந்தாலே எதிரிகள் பயந்து ஓடிவிடுவார்கள். ஆகவே பேசாமல் அதை வளரவிடுங்கள். கலைந்து போய்விடுங்கள்’ என்று எச்சரித்தார்கள்.                 [தொடரும்]Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More