Friday, September 2, 2011

அடுத்த ஞாயிற்றுக் கிழமை.


வள் முகம் பார்த்த
மூன்று தினத்திற்குப் பின்னும்
பெய்து கொண்டிருக்கிறது
வெளியே தெரியாமல் மழை.

உற்சாக துள்ளலோடு கவிதையை எழுதிவிட்டு நிமிர்ந்த போது வெளியே நிஜமாகவே மழை தூறிக் கொண்டிருந்தது.

ஜன்னலருகே போய் நின்று வெளியே வெறித்தேன். ‘சட்சட்’ என்று தரையில் பட்டுத்தெறிக்கும் துளிகள் ஒன்றாகக் கைகோர்த்து ஒரு பயணம் தொடங்கியிருந்தன. புழுதியடங்கி மண் வாசம் கிளர்ந்து நாசிக்கு பரவியது. தென்னை மர மூட்டில் கட்டியிருந்த ஆடு அங்கும் இங்கும் கயிற்றை இழுத்துக் கொண்டு கத்தியது.  அம்மா முந்தானையை தலைக்குப் போட்டுக் கொண்டு மழையிலேயே நனைந்தபடி, ஆட்டை அவிழ்க்க.. அது அம்மாவையும் இழுத்துக் கொண்டு ஓலைக் குடிசைக்குள் ஓடியது. கறுகறுவென்று அடர்ந்த மயிரை சிலமுறை உதறி உலர்த்திக் கொண்டது ஈரத்தை.

ஒரு குதிரைக்குட்டி மாதிரி இருந்தது ஆடு. அடர்த்தியான கரு முடி. காளைகளுக்கு இருப்பது மாதிரி பிடறியில் சிலுப்பிக் கொண்டு திமிள். நல்ல தேக்கு கட்டை போல் உறுதியான கால்கள். கம்பி துண்டு மாதிரி மேல்   நோக்கி வளர்ந்த கொம்புகள் உட்பக்கம் சற்றே வளைந்திருந்தது. எந்த நேரமும் தொண்டையை இறுக்கி கனைத்துக் கொண்டே இருந்தது. கட்டி போட்டு நல்ல தீனி போட்டதில் மத மதப்பாக இருந்தது.

அம்மாதான் இந்த ஆட்டை குட்டியாக வாங்கி வந்தாள். அந்தோணியார் குருசடியில் காணிக்கையாக வந்த இந்த குட்டியை ஆயிரத்து ஐனூறு ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து வந்தாள். உனக்கு ஒரு நல்லது நடந்தா அதே கோயில்ல  இந்த ஆட்ட வெட்டி அசனம் குடுக்கனும்டா. என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

வீட்டிலேயே கட்டிப் போட்டு நல்ல புல்லும், தளையும் வெட்டி வந்து கொடுப்பாள். கஞ்சி தண்ணியில் தவிடு பிசைந்து தாகம் தணிக்க வைப்பாள். அதனால்தானோ என்னவோ அது அம்மாவிடம் மட்டும் கொஞ்சம் அடங்கி இருக்கும். தினவெடுத்து திரிகிற ஆடு. மற்றவர்கள் யார் போனாலும் முட்ட வரும் அல்லது வன்புணர்ச்சிக்கு எத்தனிக்கும்.

நாட்டில் எதுஎதுவோ பற்றாகுறை என்று அறிந்திருக்கிறேன். பெண்களுக்கும் பற்றாகுறை என்பதை சமீப காலமாகதான் உணர்ந்தேன். அதனாலேயே அம்மா சொன்ன நல்லது  நடக்காமல் இழுத்தடித்துக் கொண்டேயிருந்தது.

முன்தலை முடி மெல்ல மெல்ல எல்லைகளை விரித்துக் கொண்டே போகிறது. கறுத்த நெற்றியும், பெரிய விழிகளும் ஒரு தகுதி இழப்பின் குறியீடுகளாக மாறிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

என்னோடு சேர்ந்து ஆட்டுக்கும் வயசாகிக்கொண்டே போவதில் அப்பாவுக்கு வருத்தம். நல்லா முத்திப் போச்சின்னா கறி நல்லாயிருக்காதாம். அதுக்குள்ள வேண்டுதல் நிறைவேற வேண்டுமென்று அவர் தனியாக வேண்டிக் கொண்டார்.

ஒத்தைக்கொரு பிள்ளை, கை நிறைய சம்பாத்தியம். என்ன குறை என்று நினைக்கத்தோன்றும். ஆனாலும் ஏதோ ஒரு குறை இருக்கிறது போல. அந்த நல்ல காரியம் எனக்கு தள்ளிக் கொண்டே போனது.

என்னோடு சுற்றித்திரிந்த நண்பர்கள் எல்லோருக்கும் சடசடவென கல்யாணமாக எல்லாவனுக்கும் போய் மொய் வைத்தாகி விட்டது.இப்போ மிச்சமிருக்கிற என்னைப் பார்த்து “  நீ எப்படா சாப்பாடு போடப் போற” என்று ஆளாளுக்குக் கேட்டு வெறுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில ஒருத்தன் பொன் பண்ணி “மாப்பிள. எனக்கு பொண்ணு பொறந்திருக்கு. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க. உன்னையெ மாப்பிள்ளையாக்கிகிறேன்.” என்றான். பாவி.

என்ன ராசியோ தெரியலை நான் போற இடமெல்லாம் முட்டு சந்தாதான் ஆகிப் போகுது.
“மாப்பிள்ளை என்ன ஒல்லி பிச்சான் மாதிரி நெடு நெடுன்னு இருக்கான்.எங்க வீட்டு வாசப்படியெல்லாம் இனி இடிச்சி மாத்தமுடியாதுப்பா. நீங்க வேற இடம் பாருங்க” என்று நக்கலாக முதல் மறுப்பு வந்த போது மறுகிப் போனது மனசு.

அப்புறம் சித்தி “ நல்ல பொண்ணு, பெரிய குடும்பம், ஒருதடவை பார்த்திட்டு வந்திருவோம்” என்று கூட்டிப் போன இடம் நன்றாகதான் இருந்தது. பொண்ணு என்னைப் பார்த்து உதடு சுழித்ததில் கிறங்கிதான் போனேன். ஆனால் கல்யாணத்தை எப்போ வைக்கலாம் என்றபோது ‘கொஞ்ச நாள் போகட்டும் பொண்ணு படிச்சிட்டு இருக்கு ‘ என்றார்கள்.
கொஞ்ச நாள் போனதும் ‘பொண்ணுக்க தங்கச்சி படிச்சிட்டு இருக்கு’ என்றார்கள். புரிந்து போயிற்று.

“அதுகளுக்கு உன்னை புருசனா அடையிறதுக்கு கொடுப்பினை இல்ல மக்கா.. விட்டு தள்ளு” என்றாள் ரெண்டு நாளைக்குப் பிறகு வந்த சித்தி.

“ஒத்தைக்கொரு பிள்ளைன்னா.. மனுசன் இல்லியா.. ஒத்தையா வளரதுக விட்டுக் கொடுக்காதாம், அடம் பிடிக்குமாம், அனுசரிக்காதாம்.. எந்த மடையன் சொன்னான். கிறுக்குப் பயபுள்ளய. அதையும் நம்பிகிட்டிருக்கு..” தனக்குத்தானே அங்கலாய்த்தாள் சித்தி.

அப்பாவின் பாதி நாள் வேலையே தெரிந்தவர்களிடம் தெரிந்த பெண்ணைப் பற்றி விசாரிப்பதுதான் என்றானது.

வெளி  நாட்டிலிருக்கும் அமரன் சாட்டிங்கில் ஆச்சரியமா கேட்டான்.     ”என்னாடா  இன்னுமா அப்படியே இருக்க”
“விடுங்க பாஸ். இன்னும் கொஞ்ச நாள் சுதந்திரமா இருக்கேன்” என்று சாமாளித்தாலும்  இவர்களென்ன நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லையென்றால் உலகமே அழிந்து விடுகிற மாதிரி கவலைப் படுகிறார்கள் என்று தோன்றியது.

அலுவலகத்தில் இறுக்கமான நேரங்கள் கலகலப்பாக மாற்றப் படுவதற்கு என் பிரம்மச்சரியம்தான் பயன்படுகிறது.

தாமரைச் செல்வன் தத்துவம் கூட சொல்வார்.” தம்பி. கல்யாணம்கிறது, புதுப்படம் போட்ட சினிமாத் தியேட்டர் மாதிரி. வெளியே இருக்கிறவன் டிக்கெட் வாங்க முண்டியடிக்கிறான். உள்ளே இருக்கிறவன் என்னடா படம் இதுன்னு வெளிய ஓடத் துடிக்கிறான். இதான் வாழ்க்கை”

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிற ஜானகி மேடம் கூட கலாய்க்கிற அளவுக்கு போய் விட்டது நிலமை.

இவை எல்லாவற்றுக்கும் முடிவுகட்ட வேண்டும் என்றுதான் அடுத்த பார்த்த பெண்ணை கட்டிக்கொள்ள கண்ணைமூடிக் கொண்டு சம்மதித்தேன்.

அவள் இரண்டு மூன்று முறை போன் பண்ணியதும்.. அடடா முழுசா பார்க்காமல் போய்விட்டேனே.அவள் எப்படி இருப்பாள் என்று ஆவல் உந்த, அடுத்த முறை போன் செய்த போது “எங்காவது வெளியே போயிட்டு வருவமா” என்றேன். பிகுபண்ணாமல் சம்மதித்தாள்.

வந்தவளை பைக்கில் எற்றிக் கொண்டு முட்டம் போனேன். தோளில் கைபோட்டு முதுகில் சாய்ந்து வந்தாள். பாறைகள் நிறந்த முட்டம் கடலில் பிரமாண்டமான அலைகள் எழும்புவது பார்க்க பரவசமாக இருக்கும். மதிய நேரத்தில் ஆளே இருக்காது. நாங்கள் போனபோது ஐஸ் வண்டிகாரன் மட்டும் இருந்தான். பைக்கை ஓரம் வைத்து விட்டு இறங்கி நடந்து அமைக்கப்பட்டிருந்த காங்கிரீட் குடிலில் போய் அமர்ந்தோம். கடல் மூர்க்கமாய் இருந்தது.

பேசினேன்.பேசினோம்.அவள் எல்லாவற்றுக்கும் சிணுங்கலாய் சிரித்தது எனக்கு பிடித்திருந்தது. சந்தோசமாய் உணர்ந்தேன்.

மெல்ல எழுந்து அவள் கையை கோர்த்துக் கொண்டு நடந்து கடலலையில் கால் நனைத்தோம். கரைக்கு வந்த அலைகள் திரும்பிப் போகும்போது காலுக்குக் கீழே மண்ணைப் பறித்து நிலைதடுமாற வைத்தது. அம்மாதிரியான தருணங்களில் அவள் என்னை சாய்ந்து அணைத்துக் கொண்டாள். எனக்கு உற்சாகமாகிப் போனது.

நீர்பரப்பில் எட்ட இருந்த ஒரு வட்டப் பாறையில் அலை மோதி உயரமாய் எழுந்து, பூவானமாய் சரிந்து விழுந்தது. அதைப் பார்த்த போதுதான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது. அந்த அலையின் பின்னணியில் இவளை வைத்து ஒரு புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும்.

கையிலிருந்த செல்போனில் நல்ல காமிரா இருந்தது.

தயங்கிய அவளை நீரில் நடந்து பாறையில் ஏற்றி விட்டேன்.’அப்படியே நில்லு.ஒரு நிமிசம்’ என்று சொல்லி அலை எழும்ப காத்திருந்தேன்.
 நான் எதிர்பார்த்தபடியே பிரம்மாண்டமாய் ஒரு அலை புரண்டு வந்து கம்பீரமாய் மேலெழும்ப.. நான் படமெடுக்கும் வினாடிகளுக்குள் அவளையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போனது.

“பாவி.. பாவி.. சும்மா இருந்த பிள்ளைய கூட்டிட்டுபோய் அநியாயமாய்   கொன்னு போட்டியே. உருப்படுவியா நீ… நாசமா போயிருவா..”

சாபம் பெற்ற கொலைகாரனாகிப் போனேன்.

அந்த ரணம் இலகுவில் ஆறவில்லை.
இனி பெண் பார்ப்பதற்கென்று எங்கேயும் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன்.

அம்மா போகாத கோயிலில்லை. வேண்டாத தெய்வங்களில்லை.

“ இன்னும் எத்தனை காலத்துக்குதான் அதையே நினைச்சிட்டு இருப்ப. இப்படி உசிரோட உருகிஉருகிப் போறதை பாக்க முடியலை மக்கா” அம்மா வருந்தினாள். மெல்ல மெல்ல ஒவ்வொரு நாளும் என் மனசை வருடித் தேற்றினாள்.

பின்னொரு நாளில் “நாம தேடிப் போகலை. நம்மளை தேடி வந்திருக்கு. கடவுளா பார்த்து அனுப்பியிருக்காரு. இந்தா பாரு.” என்று ஒரு புகைப்படத்தைக் காண்பித்தாள்.

“உனக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் நாங்க இத முடிச்சிரலாம்னு இருக்கோம். ஞாயிற்றுக்கிழமை ஆட்டை அடிச்சி கோயில்ல அசனம் குடுக்கப்போறோம். அன்னிக்கே அவங்களையும் வரச் சொல்லி பேசி முடிச்சிருவோம்” என்றார் குடும்பத்தோடு வந்திருந்த சித்தப்பா.

 நான் பேசாமலே இருந்தேன். என் முன்னால் வைக்கப் பட்ட புகைப்படத்தை பார்த்தேன். பார்க்கப் பார்க்க பரவசமானது. உற்சாகத்துள்ளலோடு கவிதை வந்தது. எழுதியபோது மழையும் வந்தது.


ட்டின் ஆயுள் தீர்மானிக்கப்பட்ட  அடுத்த ஞாயிற்றுக் கிழமை.
  
 சித்தப்பாமார்கள் , அத்தைமார்கள்,மற்றும்  நண்பர்கள் எல்லாம் வந்து சேர..
சமையல் வேலை தடபுடலாக நடந்தது. சாமியார் வந்து ஜெபம் செய்து தீர்த்தம் தெளித்து ஆட்டை மந்திரித்தபோது ஆடு கடைசி இலையை அசைபோட்டுக் கொண்டிருந்தது.

கிடாவை வெட்ட வந்தவன் நன்றாக குடித்திருந்தான். ஆட்டை இழுத்து நடப்பட்ட குட்டை கம்பில் கட்டியபோது, அது எதையோ உணர்ந்திருக்கும்.. ‘ம்ஹேஏஏஏஏ..’ என்று அடிக் குரலில் கதறியது.

“ஆமாண்ணே பொண்ணு வீட்ட்டுகாரங்ககிட்ட பனிரெண்டு மணிக்கு வரச் சொல்லியிருக்கேன். இப்ப வந்திருவாங்க..” சித்தப்பா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

கிடாவெட்டி ஆட்டின் கதறலைப் பொருட்படுத்தாது அதன் நான்கு கால்களையும் இழுத்து கீழே தள்ளினான். அது திமிற முடியாமல் இரண்டுபேர் அதன் கால்களை தங்கள் கால்களால் அழுத்திப் பிடிக்க.. கூரான கத்தியால் அதன் கழுத்தை சரக்கென்று கீறினான். ஆட்டின் தொண்டைக்குள்ளிருந்து ஒரு கேவல் எழுந்து நசுங்கியது. வடிந்த இரத்தத்தை அலுமினிய பாத்திரத்தில் பிடித்தான். ஆட்டின் கண்கள் மிரண்டு மிரண்டு யாரையோ தேடுவது போலிருந்தது. அதன் உடம்பு விலுக்விலுக் என்று துடித்துக் கொண்டிருக்க, மடியிலிருந்து பீடி எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்துக் கொண்டான். அதன் மரண ஓலம் என் மூச்சை அடைத்தது.

செல்வா வந்து தோளைத்தொட்டான். “ மாப்பிள.. சப்பிடறதுக்கு முன்ன நாங்க சாப்பிடணுமில்ல. எற்பாடு பண்ணு.”
“முத பந்தியில சாப்பிடப் போறீங்களா?”
“உங்கிட்ட போய் சொன்னேன்பாரு. சாப்பிடறது கடைசிப் பந்திக்கே சாப்பிடுக்கலாம்.இப்ப ஒரு ஆயிரம் ரூபா எடு” என்று பறித்துக் கொண்டு , நண்பர் கூட்டத்தையும் இழுத்துக் கொண்டு போனான்.

அப்பாவும் ,சித்தப்பாவும் எதற்கோ பரபரத்துக் கொண்டிருந்தார்கள்.
“என்னாச்சிப்பா.. ஏதாவது பிரச்சனையா?” என்றேன்.
“ஒண்ணுமில்லைப்பா” என்று நகர்ந்தார். அம்மா கோயிலுக்குள் போய் முழங்காலிட்டு வேண்டுவதைப் பார்க்க முடிந்தது.
“அண்ணே. நான் வெயிட் பண்ணுங்க இப்ப வந்திருதேன்.”  என்று சித்தப்பா வாடகைகார் பிடித்துக் கொண்டு எங்கோ கிளம்பிப் போனார்.
 நண்பர்கள் கும்மாளமாய் வந்து சேர்ந்தார்கள்.
அரைமணி நேரம் கடந்து சித்தப்பா சோர்வாய் வந்து சேர்ந்தார். அவர் முகம் ரொம்ப தெளிவாய் இருந்தது. என்னைத் திரும்பிப் பார்க்காமலே “அசனத்தை தொடங்கிருங்க” என்றார்.
“ஏன்..என்னாச்சி...”என்றார் அப்பா.
“பாவம்ணே.. அந்த புள்ளையாவது விரும்பினவன் கூட வாழட்டும்ணே..” என்றார் சித்தப்பா ரகசியமாய்.

 நான் மௌனமாய் குனிந்து சாப்பிடத் தொடங்கினேன்.
துடிப்படங்கி குழம்பாகியிருந்த ஆட்டுக்கறி, அப்பா கவலைப்பட்ட மாதிரியே முற்றி சாப்பிட முடியாமலிருந்தது.

1 பகிர்வுகள்:

ஒரு ஆணுக்கு இவ்வளவு சோதனையா???
இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் அதிகம்`னு கேள்விப்பட்டேன். எனவே, இந்தக் கதை நிஜமாக ரொம்பக் காலம் எடுக்காது...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More