பத்திரிகையில் முழுபக்க அளவில் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். சுவரொட்டிகள், பதாகைகள் எல்லாவற்றிலும் சொல்லிவைத்த மாதிரி அதே வாசகம் - வாழ்த்த வயதில்லை.
மேற்படி வாசகத்தை கண்டுபிடித்த மகானுக்கு முறையாக ராயல்டி வழங்கப்பட்டிருக்குமானால்.. அவனும் ஸ்விஸ் பாங்கில் கணக்கு வைக்குமளவுக்கு பெரும்புள்ளி ஆகியிருப்பான். தப்பிவிட்டான்.
அந்த விளம்பரங்களின் வலது ஓரத்தில் வாழ்த்தியவரின் புகைப்படம். உற்று பார்த்தால், அவர் வயதுக்கு வந்து முக்கால் நூற்றாண்டு கடந்திருக்கும் போலிருக்கிறது. பிறகு ஏன் அப்படி சொல்கிறார். கிழவனும் குழந்தையைப் போல்தான் என்று மரபு கடைபிடிக்கப்படுவதால், அப்படி சொல்லிக் கொள்கிறாரா. இல்லை.. இல்லவே இல்லை. தமிழில் வாழ்த்துகளுக்கு அவ்வளவு தட்டுபாடு.
ஆளும் கட்சி, எதிர்கட்சி பாகுபாடில்லாமல்.. இந்த வாக்கியம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் வேறுவழியில்லாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
ஆனாலும் உடனடியாய் சுதாரித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். புதிய புதிய வாழ்த்துகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். என்னைக் கேட்டால் இதற்காக ஒரு கூட்டுகுழுவையே நியமித்துவிடலாம் என்பது தாழ்மையான அபிப்பிராயமாக இருக்கும்.
ஏனென்றால் வாழ்த்து கேட்கிறவர்களுக்கு மகிழ்சியும்,சொல்கிறவர்களுக்கு பல சலுகைகளும் சகாயங்களும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே வாழ்த்துவதற்கு பெருந்தன்மையான மனசுதானே வேண்டும் வயதுக்கு வரவேண்டுமா என்றெல்லாம் யோசிக்காமல் புதிய புதிய வாழ்த்துகளை அறிமுகப்படுத்துங்கள்..
என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி.வணக்கம்.

0 பகிர்வுகள்:
Post a Comment