Monday, July 4, 2011

ஆய்வு மாணவர்களுக்கு இவ்விடம் வழிகாட்டப்படும்


யாரும் சொல்லாமலே அதிகாலையிலே இப்பொதெல்லாம் எழுந்துவிடமுடிகிறது. விடிந்த பின்னும் தூங்கும் சோம்பேறித்தனம் இப்போது இல்லை. சில நேரம் இரவுகளில் கூட விழித்தே இருப்பதற்கு பழக்கமாகிவிட்டது. நான் மட்டும்தான் என்றில்லை. ஊரில் பலபேரிடம் இந்த மாற்றத்தை காணமுடிகிறது.

மக்களிடத்தில் ஒரு புதிய விழிப்பு உணர்ச்சி ஏற்பட்டிருப்பதன் அடையாளமாகத்தான் இதை கருத வேண்டியிருக்கிறது.
யோசித்துப் பாருங்கள். இந்த மின்வெட்டு எவ்வளவு பெரிய அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளச் சொல்கிறார்களே என்று சொன்னதை நம்பி தொலைக்காட்சியை இயக்கி அதில் வரும் செய்திகளைக் கேட்டு மன உளைச்சலுக்கோ, வெறுப்புக்கோ ஏன் ஆளாக வேண்டும் என்று அக்கறை மின் வாரியத்துக்கு இருக்காதா என்ன?  சீரியல்களைப் பார்த்து கொந்தளித்து போகும் மனசு இப்போது எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது. ஆசுவாசமாக நன் உணர்ச்சிகள் இப்போது வெளிப்படுகிறதா இல்லையா..?

இல்லத்தரசி காலையில் வேலைக்குப் போகிற அவசரத்தில் மிக்சியில் போட்டு அரைத்துக் கொண்டிருப்பாள். பாதி அரைந்து கொண்டிருக்கும்போது…. போச்சு.. அப்படியே நிக்கும். பிறகு என்ன ..! அவள் மகா சாமர்த்திய சாலி. அப்படியே தூக்கிப் சட்டியில் போட்டு எதோ ஒன்று சமைப்பாள். அவளது சாமர்த்தியம் வேறு யாருக்கும் வராது என்று மெச்சும்படியாக நிறைய புதுப் புது ஐட்டங்கள் செய்யப் பழகிக் கொண்டாள் என்பது ஆச்சரியமான விசயம்தானே. மின்வெட்டு இல்லையென்றால் அவளது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருந்திருக்குமா..?

கம்ப்யூட்டரோ டீவியோ கதியென்று வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிற பயல்கள் வெளியே வந்து ‘ஓ…இதுதான் நம்ம தெருவா ’ என்று வியந்து நிற்பது எவ்வளவு பரவசமாக இருக்கிறது. கரன்ட் வரதுக்குள்ள படித்து முடித்துவிடலாம் என்று பிள்ளைகள் ,பள்ளிக் புத்தகத்தை அவர்களாகவே எடுத்து பார்க்கிறார்கள். இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தோமா..?

பல நேரங்களில் மின்சாரம் ‘இருக்கும் ஆனா இருக்காது.’எனும் சூழலில் என்னவெல்லாம் நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது பட்டியலில் அடங்காது. குழல் விளக்கு எரியாது. [CFL லுக்கு மாறுங்களேன்பா] குளிர்சாதனப்பெட்டி இயங்காது.[பழைய உணவை நாட்கணக்காய் சாப்பிடுவதிலிருந்து தப்பித்தீர்கள்] மின்விசிறி மயங்கி விழும். மூச்சிரைக்கும். [உடல் அசுத்தங்கள் எல்லாம் வியர்வையாகி வெளியேறி புத்துணர்வு கிடைக்கிறதல்லவா.]

அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் கடுமையாக உழைக்கப் பழகிவிட்டார்கள். வீட்டுக்குப் போகச் சொல்லி அவர்களை மிரட்ட வேண்டியிருக்கிறது. [ஜெனரேட்டர் வாழ்க]

மின்சாரம் எப்ப எங்க வரும், எப்ப போவும்னு ஒரு புதிய பந்தய விளையாட்டு, கடை திண்ணைகளில் பிரபலமாகியிருக்கிறது. அது எளிதில் கணிக்கக் கூடியதா. நிறைய ஆராய்ச்ச்சி தேவைப்படுகிறது. எனவே அதை விளையாடி வென்றவர்களுக்கு டாக்டர் பட்டம் தரகோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதாம்.[ஆய்வு மாணவர்களுக்கு இவ்விடம் வழிகாட்டப்படும்]

திருடர்களுக்கு இருந்த சிரமங்கள் பெருவாரியாக குறைந்துபோய் விட்டதாக தகவல்.

ஒரு டீ’க்காக என் கையையே எதிர்பார்த்திருந்த பக்கத்து தெரு பிரெண்டு ஒருத்தன் இப்போ  இன்வெட்டர் வியாபாரத்தில் இறங்கி ஏணி வைக்காமலே பல அடி உயரத்துக்கு போய் விட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆறேழுபேருக்கு வேலை கூட கொடுத்திருக்கிறான்.

இப்படியாக வியக்கத்தக்க  மாற்றம் எல்லோருக்கும் பரவியிருக்கிறது என்பதை        நீ ங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

3 பகிர்வுகள்:

புதுசு புதுசா, தினுசு தினுசா யோசிக்கிரீங்க...

ஹா.ஹா.. சரிதான் நீங்கள் சொல்வது...

Mohamed Faaique

பட்டாபட்டி
வருகைக்கு நன்றி நண்பர்களே.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More