Thursday, June 16, 2011

ஊரையே அலற விடனும்டா


புத்தாண்டு வரப் போகிறது. சரி தானாக வந்து விட்டு போகட்டும் என்று ஒரு இளைஞனால் அப்படி எளிதில் விட்டு விடமுடியுமா? அப்புறம் ஊருக்குள்ள தெனாவட்டா திரியிறது அர்த்தமில்லாம போயிரும்ல. வரவேற்க யாருமே இல்லைன்னு புதுவருசம் திரும்பி போய்விட்டால்... என்ற கவலை இருக்கதானே செய்யும். அதனால பொழுது போறமாதிரி ஏதாவதுசெய்தே ஆக வேண்டுமென்பது சமுதாய கடமையாக இருந்தது. என்ன செய்வது.. என்ற ஆலோசிக்கதான் அன்று கூடியிருந்தோம். ரோட்டொரமா.. குட்டியா பாலம் இருக்குமே.. எங்க ஊருல அத கலுங்கு’ன்னு சொல்லுவோம்.. அங்க.

இனிமேலும் நாம சோம்பேறியா, வெட்டியா இருக்கக்கூடாது என்று ஞானம் பெற்ற அருள்மணிதான்  எங்களை கூட்டியிருந்தான். புத்தாண்டும் அதுவுமாய் கையில் பணம் புரள வேண்டும். அதற்கும் ஒரு வழி பண்ண வேண்டும் என்ற அவன் ஆழ்மன கிடக்கையை அப்போது அவன் வெளிக்காட்டவில்லை. அவன் எப்பவுமே அப்படிதான். தான்தான் என்று காட்டிக் கொள்ளவே மாட்டான். ரொம்ப அடக்கமானவன்.

அவன்தான் தொடங்கினான். “இந்த புதுவருசத்த அமர்களபடுத்தணும்டா..”
“எப்படி.”
“தடபுடலா கொண்டாடனும்.”
“டெய்லி ஆறு மணிக்கு மேல நீ கொண்ட்டடுறியே.அப்படியா.”
“சே.சே.. ஊரே அசந்து போணும்.”என்றான்.
விஜயகுமார் “இப்பவே அசந்துதான் கிடக்கு மாப்பிள.” என்று ஏளனமாய் சிரித்தது அவனுக்கு உறைக்கவில்லை. தடைகளைக் கண்டு தளர்ந்து விடக் கூடியவனா அவன். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவானா..

ஏதோ ஒரு ரகசிய திட்டம் தீட்டுவது போலவே ஆலோசனைகள் நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு விழாவுக்கும் இப்படி ஒரு அவசர கூட்டம் நடைபெறுவதே வாடிக்கையாகிவிட்டது. கோலப்போட்டி,  நடனப்போட்டி, இசைக்கச்சேரி, பட்டிமன்றம் என்று சீசனுக்கு தகுந்த மாதிரி ஒரு அமர்களம் இருக்கும். இந்தமுறை...

உருப்படியாய் ஒரு பயலும் ஆலோசனை சொல்லவில்லை என்ற உண்மை மெல்ல புரியவர, கடைசியாக அவனே சொன்னான் “பிரமாண்டமா ஒரு  நாடகம்  நாமளே போடுவமா?” என்றபோது எல்லாவனும் சம்மதித்து தொலைத்தார்கள். அவன் கலைஞன். அவனுக்கு இப்படிதான் ஆசைவரும் என்ற பிரமையை ஏற்படுத்தினான். கபடி போட்டி வைக்கலாம் என்று சொன்ன சுவாமிதாஸின் கோரிக்கையை பொங்கலுக்கு ஒத்தி வைத்தான்.

நடிகனாகவும் ,இயக்குனராகவும் வேண்டும் என்று உள்ளூர ஆசை எல்லவனும் வைத்திருப்பான்கள் போலிருக்கிறது. அந்த நிமிசத்திலிருந்து [அப்துல் கலாம் அந்த காலத்தில் சொல்லியிருக்கவில்லை என்றாலும்கூட] கனவு காண ஆரம்பித்து விட்டது தெரிந்தது.  எல்லார் கண்ணிலும் ஒரு காதல் பாட்டு நடனமாடிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு கதைகள் பிரசுரமாகியிருந்ததால் போனால் போகிறது என்று என்னிடம் கதை எழுதச் சொன்னார்கள்.

அப்புறமென்ன..அதிர்வேட்டுதான்..மளமளவென திட்டங்கள். ’ஊரையே அலற விடனும்டா’

சரி செலவுக்கு பணம். ‘அத நான் பார்த்துகிடறேன். நீங்க அதப் பற்றி கவலையேபட வேண்டாம்’ பொறுப்பை அருள் ஏற்றுக் கொண்டான். அதற்கும் ஆடுமாதிரி தலையாட்டியாயிற்று. அடுத்த நாள் காலையிலேயே நூறாம் பக்க நோட்டை வாங்கிக் கொண்டு வீடு வீடாக ஏறி இறங்குவதை பார்த்த போதுதான் அவனது சதி திட்டம் புரிந்தது.  

இரவுகளில் இன்னும் கதையே அகப்படாத நாடகத்துக்கு  பயிற்சி என்று கூப்பிடுவான்.கட்டு கட்டாய் பீடியை வாங்கி புகைத்துக் கொண்டே திட்டங்களை தயாரிப்பான். கையில் நல்லா பணம் புரண்டதுபோல.. வகைவகையாய் நொறுங்கு தீனி வாங்கி வந்து தருவான். பின் போதை தலைகேறியதும் மட்டையாவான்.  

தெருவில் போக்குவரத்தை மறித்து பெரிய மேடை எழுப்பினான். நடிக்க பெண்களை ஏற்பாடு செய்தான். அவளை கட்டிபிடிச்சி ஒரு சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆட எல்லோருமே வாய்ப்பு தேடினார்கள்.. நடிகர் கனவு கொண்ட பல பேரை ஜென்ம சாபல்யமடைய தயாராக்கினான். அதிர அதிர ஒலிபெருக்கி வைத்தான். அதில் ஒன்று உயர்ந்த தண்ணீர் தொட்டியின் உச்சத்தின் கொண்டு வைத்தான். அது பாடிய பாடலில் ஊர் ரெண்டு பட்டது. புத்தாண்டு அந்த ஓசையைக் கேட்டு வழி தவறாமல் வந்து சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஆனா எங்கேயும் நல்லது நடக்க விடக் கூடாதுன்னு கங்கணம் கட்டிகிட்டு சிலபேரு நினைப்பாங்களே. அப்படி எவனோ நினச்சதன் அறிகுறியாக போலிஸ் வந்து நின்றது. எவண்டா அது பாட்டு போடறவன். போலிஸ் பெர்மிட் வாங்கினியா என்று பாட்டு போட்டுக் கொண்டிருந்தவனை ஓங்கி ஒரு அறைவிட, அவன் இரண்டு முறை சுழன்றான். அவன் சுழன்று நிற்பதற்க்குள் மற்றவர்கள் எப்படி மாயமானார்கள் என்று தெரியவில்லை.
அப்பாவியாக மாட்டிக் கொண்ட என்னை ஏற இறங்க பார்த்தார் அதிகாரி. பயலுக்கு சாமர்த்தியம் போதவில்லை என்று தெரிந்து போயிருக்க வேண்டும். “அரை மனிக்குள்ள இடத்த காலிபண்ணிரணும் இல்ல... எல்லாவனையும் பிடிச்சி உள்ள போட்டிருவேன்,போடு கையெழுத்த’’ என்று ஒரு அறிவிப்பு ஆனையை தந்து என்னுடைய முதல் ரசிகராய் கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்.

1 பகிர்வுகள்:

ஊரையே அலர விடனும்’னு உங்கல மட்டும் அலர வச்சுட்டாரே!!!


இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகண போட்டோக்கள் 15-06-2011

http://faaique.blogspot.com/2011/06/normal-0-false-false-false-en-us-x-none.html

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More