ஆரம்பப் பள்ளி. ஐந்தாம் வகுப்பில் எனது அடுத்த இருக்கையில் ஆறுமுகம் இருந்தான்,களிமண் பாண்டம் செய்வது அவன் குடும்ப தொழில். அந்த குடும்பத்திலிருந்து பள்ளிக்கு வந்த முதல் வாரிசு அவன். விடுமுறை நாட்களில் பானை வியாபாரத்திற்கு அம்மாவுடன் போய் விடுகிறவன். வயதுக்கு மீறின கனத்த குரல். கறுத்த மேனி.
ஆசிரியர் கணக்கை எழுதிப் போட்டுவிட்டு எங்கள் நோட்டில் அதை செய்து காட்டச் சொன்னார். சாதாரண கழித்தல் கணக்கு. ஆனால் எனக்குதான் அது கசந்தது. அவரவர் நோட்டில் கணக்கை செய்து விட்டு மூடிவைத்து விட வேண்டும். ஆசிரியர் வந்து ஒவ்வொரு நோட்டாக வாங்கி பார்த்து,சரி என்றால் ‘குட்’ என்பார். தவறென்றால் ஒன்றும் சொல்ல மாட்டார். கம்பை எடுத்து விளாசி தள்ளி விடுவார்.
இது தினசரி நடக்கிற கூத்துதான். அறுமுகம் முதல் ஆளாய் செய்து முடித்து விடுவான். படிப்பு அறிவை விட அவனுக்கு பட்டறிவு அதிகம். வியாபாரத்துக்கு போய் கல்லாபெட்டியில் உட்கார்ந்த அனுபவத்தில் கூட்டலும் கழித்தலும் அவனுக்கு அத்துபடி.
எனக்கோ இந்த கடன் வாங்குகிற சமாசாரம் புரிபடவில்லை.[இப்போது மட்டுமென்ன வாழ்கிறது.!!!] ‘ஒருமுறை காட்டேண்டா’ ஓரக்கண்ணால் ஆறுமுகத்தை கெஞ்சினாலும் பயபுள்ள காட்டித்தர மாட்டான். பிறகு என்ன. வாத்தியாரின் பிரம்புக்கு வேலைதான்.[மாணவரை அடிக்க தடை அப்போதே இருந்திருந்தால்..?]
இப்படி தினசரி அடிவாங்கி வலி பொறுக்க முடியாமல் கால்களுக்கிடையில் கையை வைத்துக் கொண்டு கதறுவதை பார்த்து என்ன நினைத்தானோ..
அன்று விடை தெரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்க ஆறுமுகம் சட்டென்று என் நோட்டை வாங்கிக்கொண்டு அவனதை என்னிடம் தந்தான்.
வாங்கிப் பார்த்த ஆசிரியர் என்னை மேலும் கீழுமாய் சந்தேகப் பார்வை பார்த்துவிட்டு “பரவாயில்லையே” என்றார். [அவருக்கும் சாமர்த்தியம் போதவில்லை. எழுத்தை வைத்தே கண்டு பிடித்திருக்க வேண்டாமோ..?]
அடுத்து ஆறுமுகத்தின் நோட்டை பார்த்தவருக்கும் அதே சந்தேகம்தான். ஆனாலும் என்ன. சட்டம் தன் கடமையை செய்ய வெண்டுமல்லவா. துடிக்க துடிக்க எனக்காக அன்று ஆறுமுகம் அடிவாங்கியது ஏனென்று இப்போதும் புரியவில்லை.

1 பகிர்வுகள்:
கோர்த்து விட்டுடீங்களே தல..உங்க பக்கதுல இருந்ததுக்கே இந்த நிலமையா???/
Post a Comment