Monday, January 31, 2011

குமரி சங்கமம் சாதித்தது என்ன?

2011 ஜனவரி மாதம் முழுவதும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழா  நாகர்கோயில் S.L.B. பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. மூன்று நாள் கொண்டாட்டம்.

 நாகர்கோயில் நகரம் இதற்கு முன் பார்த்திராத ஒரு நிகழ்வு. மண் சார்ந்த கலைகள். பிரமாண்டமான மேடை. திறந்தவெளி திடல் நிரம்பி வழிகிற கூட்டம். ஜெகத் இருந்தார்; கனிமொழி வந்தார்; சுரேஷ் ராஜன் கலந்து கொண்டார். எழுத்தாளர் பொன்னீலன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் வந்திருந்தார்கள் என்பதையெல்லாம் விட்டுவிடுவோம்.     நிகழ்சி லோகோவில் சாதி குறியீடுகள் வெளிப்படுத்தியிருந்த நெருடலையும் மறப்போம். ஆதிக்க சக்திகளின் வயித்தெரிச்சல் விமர்சனங்களையும் புறம் தள்ளி விட்டு இப்போது உள்ளே நுழைவோம்.
இதோ, பள்ளியின் வாசலில் நமக்கு தாரை தப்பட்டை முழங்க பிரமாதமான வரவேற்பு. எட்டடிக்கு மேல் உயரத்தில் பொய்கால் கட்டிய மனிதர்களும் பொய்கால் குதிரைகளும்,விலங்கு வடிவங்களும் நமஸ்கரித்து நம்மை உள்ளே விடுகிறார்கள். வாசல் தாண்டியவுடன் இருபுறம் இருபுறமாக பிரிந்து உள்ளே செல்லும் சாலைக்கு இடைப்பட்ட மையத்தில் பரந்த தளம் ஒன்று இருக்கிறது. அதன் எல்லைகளில் உயர்ந்திருந்த  மரக்கிளைகளில் ஊஞ்சல்கள் கட்டி தொங்க விடப்பட்டிருக்கின்றன. சிறுவயதில் விடுமுறை காலங்களில்  ஊஞ்சல் கட்டி அதில் ஆடி லயித்திருந்த தருணம் நினைவுக்கு வர ஒரு ஆட்டம் ஆடிவிட்டுப் போவோமா…?குழந்தையாய் மனம் குதூகலிக்கிறது. ஐயய்யோ.. ஏக்கத்தோடு சிறுவர்கள் காத்திருக்கிறார்கள். நகர்ந்து விடுவோம்.

 திடலின் இன்னோரு மூலையில் ஒரு கூட்டம். ஒரே ஆரவாரம். எட்டிப் பார்த்தால் என்ன. வேண்டாம் எட்டாமலே தெரிந்தது.உறியடி விளையாட்டு.உயரத்தில் கயிற்றில் தொங்க விடப்பட்டிருந்த பானையை கண்ணைக் கட்டிக் கொண்டு அடிபார்க்கலாம்.. அப்படிதான்… விடாத…  ஓங்கி அடி.. ம்ஹூம்.. கயிற்றை யாரோ ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணை வேறு கட்டி தொலைத்து விட்டார்களா.. ஒரு மண்ணும் தெரியவில்லை என்று வெளியே வந்தால் அடுத்து வந்த சிறுவன் பானையை அடித்து சிதறடித்து.. உலகக் கோப்பை ஜெயித்த மாதிரி முஷ்டி மடக்கிக் காட்டினான்.சரி விடுங்க பாஸ். நமக்கு தோதான இன்ணொண்ணு இருக்கு. அதை டிரை பண்ணுவோம். கடற்கரையில் குதிரை சவாரி பண்ணுகிற மாதிரி.. வில்வண்டி சவாரி. ரெட்டை மாட்டு வண்டி. சும்மா ஏறி உட்கார்ந்தா போதும். அப்படியே ஒரு ரவுண்டு… ஆகா.. சுகமாகத்தான்யா இருக்குது.
சரி வண்டில இடம் கிடைக்கலையா. நாமளே வண்டி ஓட்டி பாத்திர வேண்டியதுதான். அதற்கும் ஒரு ஏற்பாடு இருக்கு. நுங்கு வண்டி.

[ சின்ன வயசில இந்த வண்டி ஓட்டறதில தெருவுல ஒரு சர்வதேச தடபுடலோடு போட்டி நடத்தியதை ஓரமா கொஞ்சம் ப்ளாஷ்பேக்ல ஓடவிட்டு பார்த்துகிடுங்க]


வெட்டப்பட்ட இரண்டு நுங்கை எடுத்து குறுக்கெ அச்சு மாதிரி ஒரு கம்பை செருகிக்கொண்டால் வண்டி ரெடி. இப்ப கவண் மாதிரி அமைப்புடன் கைப்பிடி நீண்ட  இன்னோரு கம்பு. அதுதான் ஸ்டீரிங். சரி அந்த கவணை அச்சில செருகி மெள்ள ஓட்டுங்க பார்ப்போம்…. அப்படிதான்.. கவண் கம்பு அச்சை விட்டு விலகக் கூடாது.. ஈசியா இருக்கா.அந்த பக்கம் போயிராதீங்க. யானை இருக்கு. அது கூட இருபது முப்பது பேர் கயிறு இழுத்து போட்டி நடக்குது. ரொம்ப நெருங்கிப் போனா யானை கலைஞ்சிரபோகுது.

இதோ இந்த திரைகட்டிய குடிசை முன்னால கொஞ்சம் உட்கார்ந்து போவோமா.டெலிவிசன் திரை மாதிரி கொஞ்சம் பெருசா இருக்கா..லைட் எரியுது.படம் தெரியுது.குரல் கேட்குது.. அட.. தோல்பாவைக் கூத்து.


உச்சிகுடும்பனும் உழுவதலையனும்  ம் கதாபத்திரங்களாக.. கதை சொல்லுகிறார்கள் , காமெடி செய்கிறார்கள். பின்புறத்தை ஆட்டி ஆட்டி ஒரு மங்கை நடனமாடுகிறாள். சண்டை நடக்கிறது. சிரித்து மகிழ்ந்து நாமளும் ஒருதடவை கைதட்டுவோமே. நிகழ்சி முடிந்து கூடாரத்தை விலக்கிக் கொண்டு ஒருவர் வெளியே வர .. அப்பதான் ஆச்சரியம் வருது. இத்தனை விதமான் குரலும் ஒருவருடையதா. அத்தனை செயல்களையும் அவர் ஒருவர்தான் நிகழ்த்தினாரா. அவரது திறமை சாமன்யப்பட்டதில்லை. இன்னோரு முறை கைதட்டினா.. பாருங்க அவர் முகத்தில எவ்வளவு சந்தோசம்.
இப்படியே பொழுது இருட்டிக் கொண்டிருக்க சற்று மேலேறி பள்ளியின் இடப்புறம் அமைந்த பெரிய மைதானத்தில் வந்தோமென்றால் 

 நிகழ்சி அரங்கு. முன் வரிசையில் போய் உட்கார்ந்து கொள்ளலாம்

அந்த மேடை குமரி சங்கமம் மைய நோக்கு பாடலோடு  ஆரம்பிக்கிறது. பிறகு மூன்று நாளும் ஒரே அதிரடிதான். ஒயிலாட்டம், கரகாட்டம், பறையாட்டம், களியலாட்டம், களரி சிலம்பாட்டம்,ஜிக்காட்டம், நாட்டுப்புற பாடல்கள், காவடியாட்டம், ரப்பாங்களி, மாடாட்டம், மாட்டுக் கொம்பாட்டம், பரதம் என்று நீண்டு கொண்டே போகும் பட்டியலில் முத்தாய்ப்பாக டிரம்ஸ் சிவமணி.
குமரி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கலைக் குழுக்கள். எல்லாமே எளிய மக்களின் கலை வடிவங்கள். விளிம்பு நிலை மக்களின் திறமைகள். அந்த கலைகளை அவ்வப்போது பார்த்திருக்கிறோம்தான். ஆனால் இப்போதுதான் உற்று கவனிக்கிறோம்.

குமரி மக்களின் உணவுகளைக் கொண்டு உணவுத் திருவிழாவும் உண்டு. மூலிகைகளின் கன்காட்சியும் இருந்தது. இப்படி பட்டியல் நீளலாம்.

மேடைக்கருகே நெருங்கி அந்த கலைஞர்களை உற்று பாருங்கள். அவர்கள் ஆட ஆட , இசைக்க இசைக்க தேகமெங்கும் வியர்வை. ஒளி வெள்ளத்தில் மேனி பளபளக்கிறது. களைப்பு வந்திருக்கலாம். ஆனால் கூட்டம் ஆரவாரித்து கைதட்டுகிறபோது அவர்கள் முகத்தில் எழுகிறது பாருங்கள் ஒரு சந்தோசம். அது மேடைக்கு இன்னுமொரு வெளிச்சமாய் பிரகாசிக்கிறது. உங்கள் பதிவுக்கு ஒரு ஓட்டு கிடைக்கிறபோது எழுகிற மகிழ்சியை விட ஆயிரம் மடங்கு பெரிது அது. சிரிப்போடு மேடை விட்டு இறங்குகிறார்கள். 
 ஒரு கலைஞனுக்கு அல்லது படைப்பாளிக்கு கைதட்டல்தான் மிகப்பெரிய விருது; அங்கீகாரம். அதைப் பெறுவதற்கு வாய்ப்புகள்  வேண்டும், மேடைகள் வேண்டும். எண்ணற்ற திறமைகள் அங்கீகாரம் கிடைக்காமலே அமுங்கி போய் கிடக்கின்றன. இப்படி ஒரு மேடை அவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தையும், தன்னம்பிக்கையும் தந்திருக்கிறது.


இதுவரை எங்கள் ஊரில் சாவு வீடுகளில் செண்டை மேளம் வாசித்தவன் ஏதோ ஒரு குலத் தொழிலாகத்தான் அதை செய்தான். இந்த மேடையேறிய பிறகு இது வெறும் தொழிலல்ல மாறாக நமது அபூர்வமான கலைத் திறமை என்ற பெருமை உணர்வு வந்ததாம். மேடை விட்டு இறங்குகிற ஒவ்வொரு கலைஞனின் முகத்திலும் இந்த உணர்வு அப்பட்டமாக தெரிகிறது பாருங்கள். அதுதான் இந்த குமரி சங்கமம் சாதித்ததாக தோன்றுகிறது. இன்னொன்று, மண் சார்ந்த கலைகள் மேல் ஒரு ஈர்ப்பையும், கலை ரசனையை மீட்டெடுக்கும் ஒரு நிகழ்வாகவும் இது அமைந்தது என்றால் மிகையில்லை.

1 பகிர்வுகள்:

மிக அருமையான நிகழ்ச்சி. கலைகளை காப்பாற்ற இது போன்ற நிகழ்சிகள் தொடர வேண்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More