Saturday, January 29, 2011

வீரம் விளைஞ்ச பொண்ணு.[வீரம் ஆண்களுக்கு மட்டுமேயானது என்ற கற்பிதங்களை நம்பிக் கொண்டிருந்த காலம் அது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலிருக்கும். இன்று ஆண்களுக்கு இணையாக பல துறைகளிலும்  பெண்கள் முன்னேறி வருவது சகஜமானது என்றாலும் அந்த கால கட்டத்தில் எனது கற்பிதங்களை பொடிபொடியாக்கி ஒரு வீரமகளாக அறிமுகத்தை துவக்கி வைத்தவள் என் எதிர் வீட்டு பெண்.]

 அவ நிகு நிகுன்னு இருப்பா. நிமிர்ந்து நடப்பா. ரெண்டோ மூணோ வர படிச்சா. படிப்பு ஏறலை. வயசான பெத்ததுகளுக்கு கஞ்சி ஊத்தணுமே.. வேலைக்கு  போனா.  நாத்து நட, களை புடுங்க, வயல் அறுக்க, இப்படி வேலை செய்ய அவ சலிக்கவேமாட்டா. சம்பளத்தில மட்டும் கறாரா இருப்பா.
கொத்தனுக்கு கையாள் வேலைக்கு போவா. புல்லுகட்டு அறுத்து விப்பா.மலையில வெறகு வெட்டி சம்பாதிப்பா. ரெண்டு ஆம்பிளைய செய்ய வேலையை ஒத்த ஆளாய் செய்வா. கூலி மட்டும் ஆம்பிளைய விட கொறைவு. அதினால வேலை எப்பவும் கிடைச்சிட்டுதான் இருந்துது.

எல்லாரையும் போல  இவளுக்கும் ஒரு கலியாணம் நடந்துது. மூணு நாலு மாசம்வரை நல்லாதான் போச்சி. என்ன சலிப்பு கண்டானோ இல்லேன்னா வந்த சோலி முடிஞ்சுன்னு நினைச்சானோ என்னவோ புருசன்காரன் இவளை கைகழுவிட்டு போயிட்டான்.ரெண்டு மூனு நாளு எங்கெல்லாமோ போய் பார்த்தா.. ஆள அட்டிரஸேயில்ல. போனவன் போனவந்தான். மாமியாகாரி வேற நச்சு நச்சுன்னு இவளை துரத்திறதிலே குறியா இருந்தா.
 இவ ஆளே அசரல. வயத்தில புள்ளையும் சுமந்துகிட்டு பழையபடி வீட்டுக்கு வந்துட்டா. அவன் வெற ஒருத்திய வச்சிருக்கானாம் அதான் வுட்டுட்டேன்னு எங்க அம்மாட்ட ஒரு நான் சொன்னத கேட்டேன்.
குடும்பம் நடத்தணுமேன்னு திரும்பவும் வேலைக்கு போக ஆரம்பிச்சா. இப்படியே குழந்தையும் பெத்து, வயசான ரெண்டு ஜீவனுகளையும் கவனிச்சிட்டு இருக்க சமயத்தில…
ஒரு நாள் அந்த புருசன்காரன் தாடியோட வந்து நின்னான்.

புது அலுமினிய பானை, பொங்க அரிசி, காய்கறின்னு கொண்டு வந்திருந்தான். ‘ஏட்டி ராணி..’ன்னு அவன் கூப்பிட்ட குரலை கேட்டு பின்னால கறிச்சட்டி கழுவிற்று இருந்தவ ஓடியேவந்தா. ராட்சசி மாதிரி வந்து நின்னா.
வெளியே ஊருகாரனுவ அவன்கிட்ட “ஏல இம்புட்டு நாளா அந்த புள்ளய விட்டுட்டு எங்கல போன?”  ன்னு கேட்டுகிட்டிருக்க… ஓடியே வந்தவளப் பாத்து பதிலே பேசமுடியாம திக்குமுக்காடிட்டு நிக்கான். என்னா ஆவேசம்.   “நடையில கால வச்ச வெட்டி முறிச்சி போடுவேன்”ன்னு அவ போட்ட சத்தத்தில ஆடிப் போனான்.
“ஏட்டி உனக்கு கிறுக்கு பிடிச்சி போச்சாட்டி”ன்னு அவன் கேட்க..
அவளுக்கு கோபம் பொத்துகிட்டு வந்துது. அவன் கொண்டு வந்த பாத்திர பண்டத்தை எல்லாம் தூக்கி தெருவில வீசி எறிஞ்சா. ‘போ அந்தால போயிரு. அந்த கேணச்சிறுக்கிக்க மடியிலே கிடந்துக்க. என் மூஞ்சிலே முழிக்காத’ ன்னு கதவை பூட்டிகிட்டு உள்ள போயிட்டா.
அவன் பரிதாபமா தெருவில குட்டி பாலத்தில இருக்கதப்பாத்து யார் யாரெல்லாமோ அவள கூப்பிட்டு சமாதானப் படுத்தப் பாத்தங்க. ஒண்ணும் நடக்கல. முடிவு எடுத்தது எடுத்ததான்னு இருந்திட்டா.
எங்க ஊரின் முத பொம்பளை கொத்தனார் அவதான். இன்னக்கும் வயசான பிறகும் வேலைக்கு போயிட்டுதான் இருக்கா. தனியா வீடு கட்டியிருக்கா.பொண்ண கட்டி குடுத்து  பேத்திய கொஞ்சுகிட்டிருக்கா. சும்மா கண்ணீர் சிந்திட்டு இருக்காம தனியா நின்னு ஜெயிச்சி அவ காட்டினதாதான் எனக்கு படுது.
  


0 பகிர்வுகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More