குமரி சங்கமம் வைத்த வேட்டு.
கரையில் மேசைகளும் நாற்காலிகளும் பரப்பப்பட்டிருக்க… எதிரே பரந்து விரிந்த குளமும், வானளாவிய மேற்குத் தொடர்ச்சி மலையும்.

குளத்தில் தற்காலிகமாக இரண்டு கட்டுமரபடகுகள் உலவவிடப் பட்டிருந்தன. வரைவதற்கு வாகாக இருக்குமாம்.
வழக்கமாக எங்கள் ஊர் குளத்தின் கரை காலையில் குளிக்கப் போகிறவர்களுக்கு ஒண்ணுக்கு ரெண்டுக்கு போகிற இடமாகத்தான் இருந்தது. காலையில் எழுந்தவுடன் உமிகரியோ, பல்பொடியோ வைத்து பல்லை ராவிக்கொண்டே அல்லது சொக்கலால் பீடி புகைத்துக் கொண்டே ஒதுங்கிய இடம். மனுசன் நடக்க முடியாது அந்த கரையில்.
இயற்கையோடு இயைந்த இந்த பாரம்பரியத்துக்கு வேட்டு வைத்தது குமரி சங்கமம். காலையில் கடன் கழிக்கச் சென்றவர்கள் கலவரத்துடன் வேறு இடம் தேடி அலைபாய்ந்த்தார்கள்.
இன்று காலை அந்த பூர்வீகத் தலம் வெட்டி சீராக்கப்பட்டு இருமருங்கும் கொடிகள் நாட்டப்பட்டு வெண்பொடிகள் தூவப்பட்டு… கலர்கலராய் மாணவிகளும், மாணவர்களும் அலங்கரித்தார்கள். குளிக்க வந்தவர்கள் வெட்கப் பட்டுக் கொண்டே ஒப்புக்கு குளித்த மாதிரி பண்ணிக் கொண்டு கரையேறிப் போனார்கள்.
‘மேற்கு தொடர்ச்சி மலை எங்கள் மலை’ என்ற வாசகத்துடன் மலையை வரைந்து தர கூப்பிட்டிருந்தது குமரி சங்கமம் 2011. அமைப்பு குழுவினர் 100 பேரை எதிர்பார்த்து எற்பாடு செய்து வைத்திருக்க வந்து நின்றது 400 பேர்.மூக்கொழுகிய சிறுவன் முதல் வழுக்கை விழுந்த பெருசுவரை வந்து நிற்க ஏற்பாட்டாளர்கள் பிரமித்து போயிருக்க வேண்டும். அவர்களுக்கு இருக்கை வசதி, உபகரண வசதி செய்து முடிக்க திணறித்தான் போனார்கள்.
கரையில் காற்று சுழற்றி சுழற்றி அடிக்க.. வெயில் ஏறிக்கொண்டேயிருந்தது. நிழலுக்காக போட்டிருந்த சாமியானாக்கள் காற்றில் கிழிந்து தூக்கியெறியப்பட வெயிலில் போட்டியாளர்கள் தவித்தார்கள். பெண் போட்டியாளர்கள் துப்பட்டாவால் முக்காடிட்டுக் கொண்டார்கள். சிலருக்கு கைகுட்டை உதவியது. மற்றவர்கள் வரிசையாக நின்ற தென்னை மரங்களை சுற்றி இருக்கை பிடித்துக் கொண்டார்கள். காற்று படம் வரைகிறவர்களின் பேப்பரை பறக்கடிக்காமல் காப்பாற்றும் போராட்டமே மிகைபட்டிருந்தது.

குளத்தின் எதிர்கரையில் நாகர்கோயில் திருவனந்தபுரம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப் பட்டிருந்த மற்றோரு மேடையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியும், வாழ்த்துரைகளும் தொடர்ந்து கொண்டிருந்தன.
குளத்தில் தற்காலிகமாக இரண்டு கட்டுமரபடகுகள் உலவவிடப் பட்டிருந்தன. வரைவதற்கு வாகாக இருக்குமாம்.
ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் படம் வரைகிறார்களோ இல்லையோ.. மலையை, இயற்கையை உற்று பார்த்து ரசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது சுங்கான்கடையின் குளக்கரை. ஒரு வேளை குமரி சங்கமம் அதைதான் எதிர்பார்த்ததோ?





0 பகிர்வுகள்:
Post a Comment