Wednesday, January 19, 2011

சுற்றுலா துறையா.. தமிழ் மையமா....?

 நடத்துவது சுற்றுலாத்துறையா, தமிழ்மையமா என்ற சர்ச்சை ஒருபுறம் சூடுபிடித்துக் கொண்டிருக்க.. குமரி மாவட்டத்தில் குமரி சங்கமம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

பொதுவாகவே விழாக்கள் மனிதர்கள் கூடும் கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. உறவுகளை வளர்க்கும் இடமாகவும், ஒருமிப்பைப் பேணும் வாய்ப்பாகவும் கண்டிருக்கிறோம்.

திறமையை வெளிப்படுத்தவும் கலைகளை ரசிக்கவும் கோயில்களின் திருவிழா மேடைகள் பயன்பட்ட காலம் போய் கலைகளே ஒரு திருவிழாவாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

குமரி சங்கமத்தின் ஒரு துளியாக கடந்த 18 ம் தேதி குலசேகரத்தில் காணிமக்களின் கலைவிழா நடந்தது. ஹோமியோபதி மருத்துவ்க் கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது.

வரவேற்பு வளைவே மலைபிரதேசத்துக்குள் நுழைந்த உணர்வைத் தந்தது. தென்னை, பாக்கு குலைகளாலும், தழைகளாலும் அமைக்கப்பட்ட வளைவு.செண்டைமேள வரவேற்பு. உள்ளே செல்ல.. வரிசையாய் பாரம்பரிய கருவிகள், பயன்பாட்டு பொருட்கள், கைவினை பொருட்கள், பயிர்கள், தானியங்கள், மூலிகைகள், என்று காட்சி விருந்து.

 நிகழ்சி மைதானம் செல்லும் வழியெங்கும் உருவாக்கப்பட்ட மர இலை வீடு [குடிசை] கோயில், கொட்டடி, காவல் குடில் ,எரிகுழி, வேலி, குருத்து ஓலை தோரணம் என்று ஒரு மலைபிராந்தியம் அந்த காங்கிரீட் சோலையை அன்னியமாக்கியிருந்தது. பக்கத்தில் இருந்த மரத்தின் உச்சியில் ஏறுமாடம் ஒன்று கீற்றுகளால் வேயப்பட்டிருந்தது. தரையிலிருந்து அதில் சாய்த்து வைக்கப்பட்ட மூங்கிலின் கணுக்களில் காலூன்றி சர்வசாதாரணமாக குடிலுக்கு ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஜெகத் கஸ்பார் வெள்ளை கதர் ஜிப்பாவும், ஜீன்சும் போட்டு ஒட்டடைக் குச்சி மாதிரி இருந்தார். பொது வாழ்க்கைக்கு வந்து விட்ட உள்ளூர் பிரபலங்கள் அவரைச் சுற்றி கதைத்துக் கொண்டிருக்க.. அவர் செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். வந்தவர்களுக்கு அறிமுகமாய் கைகொடுத்துக் கொண்டிருந்தார்.

 நிகழ்ச்சி, நிர்மாணிக்கப்பட்ட குடிசைக்கு முன்னால் நடந்தது. முறையான பயிற்ச்சி இல்லாத அந்த கலை நிகழ்ச்சி இயல்பாய் நடந்தது. செண்டை மேளம், மரவுரி நடனம், விளக்குக் கட்டு நடனம், தழை நடனம், காணி மக்களின் பாட்டு, அவர்கள் மொழி உரையாடல் என்று அறிந்திராத அம்மக்களின் வாழ்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அப்போதுதான் அமைச்சர் சுரேஷ்ராஜன் வந்து சேர்ந்தார்.

ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுசூழலை ரசித்தபடி அவர்  இருக்கைக்கு  வந்துசேர பதினைந்து நிமிடங்களாயிற்று. அதுவரை நிகழ்ச்சி நின்றுபோனது. பிறகு நிகழ்ச்சியின் இயல்பு நிலை மாறிப் போனது.

அமைச்சருக்கு தோல்கிரீடம் சூட்டப் போவதாக சுரேஷ் சாமியார் காணி, அறிவிப்பாளாரிடம் தன்னை முன்னிறுத்தும்படி கேட்டுக் கொண்டார். அமைச்சரிடம் ஒட்டிக்கொண்டு வம்படியாக இருக்கை ஒன்றை ஆக்கிரமித்தார்.வேசம் கட்டிய ஒரு வயதான காணி மூலம் ரோடு வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுக்கச் செய்தார். நிகழ்சிநிரல்படி இருபது அம்ச கோரிக்கை மனு அளிக்க ஏற்பாடாகியிருந்தவர் கோபத்தில் வேறுவேலை பார்க்க போய்விட்டார். பிறகு ஆளாளுக்கு மனு கொடுக்க நிகழ்ச்சி அரசிலலாகிப் போனது. காணி மக்களின் கோலோச்சும் அமைப்புகள், குழுக்கள்,குழப்பங்கள் பரசியமானது.

சுற்றுலாத்துறையும், தமிழ் மையமும் இணைந்து நடத்துவதாக இன்னமும் ஜெகத் பேசும்போது சொல்லிக்கொண்டாலும், அமைச்சரைத்தவிர சுற்றுலாத் துறையின் எந்த ஜீவனும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. தமிழ் மையமும் அதற்கு துணையாக முரசு கலைகுழுமமும்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தது; பட்டுவாடா பண்ணிக் கொண்டிருந்தது.

மக்களை ஒருங்கிக்ணைத்துக் கொண்டுவந்த ‘டிரைபல் டெவலப்மென்ட் சொசைட்டி’ யின் அமைப்பாளர் சிஸ்டர் ஸ்டெல்லாவுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவர் தனியாக அமைச்சருக்கு விடுத்த கோரிக்கையில் அவரது பகுதியில் ‘இயற்கை சுற்றுலா’வாக்கச் கேட்டிருந்தார். அமைச்சர் எதற்கும் பதில் சொல்லவில்லை என்பது வேறு விசயம்.

பிறகு மலையக மக்களின் உணவாக கல்சட்டியில் சுட்ட இறைச்சியும், கிழங்கும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. அருமையான ருசி. அந்த உணவை அனைவரும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுருக்க வேண்டுமாம். அந்த நேரத்தில் அமைச்சரிடம் அவர்கள் கொரிக்கை மனுவை அளித்து அதற்கு சில பதில்களாவது பெற்றிருக்க வேண்டுமென்பது TDS அமைப்பின் எதிர்பார்ப்பு. ஆனால் நிரல் கண்டமேனிக்கு மாற்றப்பட்டதில் அந்த அமைப்பின் செயல்பாட்டாளர் அருள் சினம் கொண்டது தெரிந்தது. “இது நம்மளுக்கு நடத்தின விழா இல்ல. பெரிய மனுசனுகளுக்கு நடத்தினது. கஷ்டப்படுயது நாம. பேரெடுக்கது இவனுவ.” என்று பொருமித் தள்ளினார்.

அமைச்சர் பரிவாரங்களுடன் புறப்பட, ஜெகத் டெல்லி செல்ல [என்றுதான் தகவல்] பறக்க..
அடுத்த நிகழ்ச்சி நிரலை தொடர விரும்பாமல்..  நிகழ்சி முடிக்கப்பட்டுவிட்டது.
பார்க்கவந்தவர்கள் பெரும்பாலும் கொட்டாவிவிட்டபடி கலைய..கலைஞர்கள் சப்பாடு பொட்டலம் தேடிப் போனார்கள்.

 [தலைப்பு புகைப்பட உதவி:timescontent.com]
  

0 பகிர்வுகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More