Tuesday, September 28, 2010

இதுதாண்டா ஆப்பு.

சொர்க்கத்திலிருந்த ஒருவனுக்கு மிகவும் அலுத்து போய் விட்டது. ‘என்ன இது உற்சாகம் இல்லாத,அமைதியான ஒரே மாதிரியான வாழ்க்கை!’ என்று சலிப்பு.

சொர்க்கத்திலிருந்து ஒரு நாள் மெல்ல எட்டிப் பார்த்தான்.
அங்கு தூரத்தில் ஒரு இடத்தில் நல்ல வெளிச்சத்தில்,பயங்கர கொண்டாட்டமாயிருந்தது. பார்ட்டி, டான்ஸ் என்று ஏரியாவே கலகலத்துக் கொண்டிருந்தது.

விசாரித்தால் அதுதான் நரகம் என்றார்கள்.ஓ.. நரகம் இவ்வளவு ஜாலியாக இருக்கிறதா? நான் அங்கேதான் போவேன் என்று சண்டை போட்டுக் கொண்டு விடாபிடியாக அங்கே போனான்.
ஜாலியாக இருக்கலாம் என்று போனவனை இரண்டு கிங்கரர்கள் அலேக்காக தூக்கிக் கொண்டு ஆயில் சட்டியில் போட்டார்கள்.

 ‘என்னடா இது அநியாயம்?’

‘அதுவா .. அதுதான் நாங்க லேட்டஸ்டா அறிமுகப் படுத்தியிருக்கிற விளம்பரம்.’
[ஒரு விளம்பர நிறுவன ஏட்டில் எப்போதோ படித்தது.]

Monday, September 27, 2010

உண்மையிலேயே மறந்திட்டியா...?

எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் மறதி மறதியாய் வருகிறது. சேமித்து வைத்த ஞாபகங்கள் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

மருந்து வாங்க வேண்டுமென்று அப்பா சொன்னது வண்டி ஏறும்வரை ஞாபகத்தில் இருந்தது. திடீரென்று முன்னால் சென்ற ஆட்டோ சிக்னல் போடாமலே வலதுபுறம் திரும்பி என் வண்டியை நிலைகுலைய வைத்ததும் அது மறந்து போயிற்று. வேறேதேதோ எண்ணங்கள் என்னை எங்கெல்லாமோ இழுத்துக் கொண்டே போய்..... ஆயிற்றா.. நான் பாட்டுக்கு போய்க் கொண்டே இருந்தேன். சர்குலர் பஸ் மாதிரி டவுனை ஒரு சுற்று சுற்றி  வந்திருக்கிறேன் போலிருக்கிறது. என்னையறியாமலே வீடு வந்திருக்கிறது. மருந்துக்காகவே காத்திருந்த அப்பா முனகிக்கொண்டே போனார் ‘ நமக்கு ஒண்ணுன்னா யாரு பாக்கிறா..”

ஓங்கி தலையில் அடித்துக் கொண்டாயிற்று. தப்பாகிப் போச்சே என்று நாக்கை கடித்துக் கொண்டாயிற்று. இனி ஒருமுறை இப்படி நடக்கக் கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டும். பலமான தீர்மானம்தான்.

“சமைக்க காய்கறி இல்ல. வாங்கிட்டு வந்திருங்க.” வீட்டுக்காரி. சொல்லியிருந்தாளாம்.
எப்படி விழிப்புடன் இருப்பது என்ற யோசனையில் இருந்த எனக்கு அவள் சொன்னது காதில் விழுந்திருக்க வில்லை. ஏதோ குரல் ஒலிக்கிறதே என்றாவது மறுபடியாவது கேட்டு தொலைத்திருக்கலாம்.

வீட்டுக்கு வெறுங்கையோடு வந்து நின்றபோது கிடைத்த வரவேற்பை பார்த்தபோதுதான்..  ஆஹா. தப்பு ஒண்ணு நடந்திருக்கோ என்று எண்ணம் வந்தது.  அவ்ளுக்கு முகத்தில் எண்ணை ஊற்றி தாளிக்கலாம் போல் வெப்பம். நாற்காலி எட்டிபோய் விழுந்தது.அடுக்களையில் பாத்திரங்கள் ஓசையுடன் இடம்பெயர்ந்து உட்கார்ந்தன. எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.

இது ஞாபக மறதியா. இல்லை கவனக் குறைவா என்ற ஆலோசனையில் மண்டை வெடித்தது.

இது ஒரு நோய் என்று யாரோ சொன்னபோது பயமாய்தான் இருந்தது..மருத்துவம் பார்த்துக் கொள்ளலாமோ என்று ஒரு சமயம் வந்த நினைப்பு  வழக்கம்போல மறந்து போயிற்று.

ஒருவிதத்தில் .மறதி  சௌகரியமானதுதான். நேற்று சண்டை போட்டவனைக் கூட இன்று கைகுலுக்குகிறேன். பகையே மறந்து போகிறதே.  நடந்த துயரங்களும் அவ்வப்போது மறந்து போவதால் கவலைகள் கூட இல்லை..  இதெல்லாம் கொடுப்பினைதானே..

திடீரென்று தோள்பட்டை உலுக்கப்பட நிமிர்ந்து உட்கார்ந்தேன்.எதிரே வீட்டுக்காரி கோபமாய் அல்லது வெறுப்பாய் கத்தினாள். “உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கா. எவ்வளவு நேரமா கூப்பிடறது. சே..”
ஜெயராஜ் வந்திருந்தான்.
“வாப்பா. என்ன விசயம்’ வந்தவன் உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு தூக்கம் வந்தது. “அப்புறம்?’
“இல்ல. நேத்தைக்கே கேட்டிருந்தேனே. மறந்து போச்சா.”
“என்ன கேட்ட?”
“அடப்பாவி. உண்மையிலேயே மறந்திட்டியா. ஒரு கட்டுரை எழுதி கேட்டிருந்தேனே.. என் மகனுக்கு.. பேச்சுப் போட்டிக்கு..”
“ஆங்.. கேட்டிருந்தேயில்ல.. அது.. வந்து.. என்ன தலைப்பு?”
“அப்ப நீ இன்னும் எழுதலை..”
“அது வந்து.. ஏகப்பட்ட வேலையா.... மறந்து போச்சு.”
“என்னடா சொல்ற.. நேத்திக்கும் இன்னிக்கும் லீவுதானே. அதனாலதானே உங்கிட்ட எழுதிக் கேட்டிருந்தேன்.”
“என்னா லீவு.. ஒரு நேரம் ஓய்வு கிடைக்க மாட்டேங்கு தெரியுமா..?
ஜெயராஜ் வெறுப்பாய் எழுந்து போனான். ம்ஹும்.. எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..
எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. அவன் போனபிறகு   திடுமென ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது. “பாவி போன மாசம் ஆயிரம் ரூபா கடன் வாங்கியிருந்தானே. கேட்காமல் விட்டு விட்டேனே”
அப்போ நான் நலமாகத்தான் இருக்கிறேன் போலிருக்கிறது.
  

வீட்டுக்கு வரச் சொல்லுங்க


அல்போன்ஸ்க்கு கல்யாணம் ஆனபோது ‘சாகப் போற வயசில இவனுக்கு இது தேவையா?’ என்றுதான் அலுவலகத்தில் பேச்சு அடிபட்டது.

மனுசனுக்கு ஐம்பது வயதிருக்கும். தலையில் முக்கால் வழுக்கை.  பின் மண்டையிலிருந்து  முடியையிழுத்து முன்னுக்கு கொண்டு வந்திருப்பார். குட்டை கத்தரிக்காய் மாதிரி இருப்பார். அதிகாரிகளிடம் பணிவு காட்ட இன்னும் குனிவார். எழுத்து படிக்க தடித்த லென்ஸ் கண்ணாடி போட்டிருப்பார்.

ஊரிலுள்ள புறம்போக்கு நிலத்தையெல்லாம் வளைத்துப் போட்டு கள்ளிச் செடியை நட்டு வேலி உண்டாக்கி சில நாள் விடுவார். பிரச்சனை எதுவும் இல்லை என்றதும் அதில் மரச்சீனி நட்டு போடுவார். பிறகு அங்கே மறைவாய் ஒரு குடிசை போடுவார். பின்னொரு நாளில் யாராவது ஒரு பெண்ணுடன் அங்கே வந்து சல்லாபிப்பார்.

அப்படிப் பட்ட மனுசனுக்கு கல்யாணம் என்றால்....

“அது இவனா பண்ணிகிட்டதில்ல. ஊர்காரனுக மிரட்டி கட்டி வச்சதாம். எசகு பிசகா அந்த பொண்ண தொடப்போய்.. மாட்டிக்கிட்டாராம்...” பிரான்சிஸ் விசயத்தைப் போட்டு உடைத்தான்.  ஆக  மனுசன் குடும்பஸ்தன் ஆனது சில நாள் நகைச்சுவையாய் கிசுகிசுக்கும் செய்தியாகிப் பொனது அலுவலகத்தில்..

கோயில் திருவிழா சமயத்தில் மனைவியுடன் வீட்டுக்கு வந்திருந்தார். கேட்டில் வந்து நின்ற போது எனக்கு அடையாளமே தெரியவில்லை. முழுக்க மொட்டை போட்டு மீசை மழித்திருந்தார். யாரோ பிச்சைக்காரன் என்றுதான் நினைத்தேன்.

பெயர் சொல்லிக் கூப்பிட்டதும்தான் உற்றுப் பார்த்தேன்.. கிட்டே போனபோது குடித்திருக்கிற வாசம் வீசியது.

“கோயிலுக்கு வந்தேன். அப்படியே பார்த்திட்டு போலாம்னு....”

உள்ளே அமர வைத்தேன். அவர் மனைவியும் இவரை மாதிரியே குட்டையாக இருந்தாள். இவர் சொன்ன இடத்தில் உட்கார்ந்தாள். தொடைக்கிடையே கையைச் செருகிக்கொண்டு சிரித்தபடியே இருந்தாள்.

குளிர் பானம் குடித்து விட்டு  எழுந்து உள்ளே போக எத்தனித்தவளை இழுத்து முன்னறைக்கு கொண்டு வந்து உட்கார வைத்தார். இவர் முறைப்புக்கு, அவள் மேலும் சிரித்தாள்.

‘சரி கிளம்புறோம்’ என்றபடி சட்டென்று புறப்பட்டார்.

அடுத்த சில தினத்தில் மாரடைப்பில் ஆள் போயே விட்டார்..

ஆறேழு மாதங்களுக்குப் பின் ஒரு நாள் அவர் மனைவி அலுவலகம் வந்தாள். என் முன்னால் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார்.

‘என்ன’ என்றேன்.
‘என் வீட்டுக்காரரை பாக்கணும்’ என்றாள்.
எனக்கு திகைப்பாயிருந்தது.
‘அவரு ஒழுங்கா வேலைக்கு வராரா. வந்தா வீட்டுக்கு வரச் சொல்லுங்க.’

கையில் பிளாஸ்டிக் பை வைத்திருந்தாள். பழைய துணிகள், காகிதங்கள் என்று அதில் நிரம்பியிருந்தன.

‘ரூபாயெல்லாம் இங்க வச்சிருக்காருன்னு சொன்னாங்க ..எடுத்திட்டு வரச் சொல்லுங்க. நான் வரட்டா?’

பதிலை எதிர்பாராமல் பையை தூக்கிகொண்டு விறுவிறுவென நடந்து போனாள்..

Saturday, September 25, 2010

என்னை யாருன்னு நினைச்சே

கோவா நோக்கிய பயணம்.திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பிய நேத்திராவதி எக்ஸ்பிரஸில் மேல் படுக்கையில் படுத்திருந்தேன்.[முன்பதிவு இருக்கைகளில் கேரளவாசிகள் தயக்கமில்லாம்ல் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.]

 நள்ளிரவு. பயணிகள் ஆழ்ந்த தூக்கத்திலிருக்க. நிசப்தத்தை கிழித்தபடி  ரயில் போய்கொண்டிருந்தது. திடீரென்று ‘ நில்லுடா’ என்று எழுந்த குரல் என்னையும் எழுப்பியது.

கழிப்பறை பக்கம் விளக்கு வெளிச்சத்தில் டிக்கெட் பரிசோதகர்   நோஞ்சான் ஒருவனை சுவரோடு அழுத்திப் பிடித்திருந்தார். “டாய். நீ என் மேலே.... என்.. மேலேயே கைய கைய வச்சிட்டியா. என்னை யாருன்னு நினைச்சே.” அவன் எகிறினான்.
 “நீ யாராயிருந்தா என்ன. முதல்ல டிக்கெட்ட காட்டு.”
பரிசோதகர் பிடியை கொஞ்சம் தளர்த்த... அவன் துவண்டு கீழே விழுந்தான்.தடுமாறி அவன் எழுந்த விதத்திலிருந்தே அளவுக்கதிகமாக குடித்திருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
“ என்கிட்டயே டிக்கெட் கேப்பியா. நான் ஆர்.எஸ்.பி [இரயில்வே பாதுகாப்பு போலிஸ்], அறியாமோ மோனே.” தள்ளாடி எதிர் சுவரில் மோதிக்கொண்டான்.
“சரி உன் கார்டை காட்டு.”
“கார்டு. உங்க அப்பன்கிட்ட போய் கேளு.” என்றவன் செல்பேசியை எடுத்து ஏதேதோ எண்களை தட்டி விட்டு “என்னை அடிச்சிட்டயில்ல. இப்ப பாரு.. ---- மவனே “ என்றபடி போனில் எதுவோ கத்திக்கொண்டிருந்தான். யாரும் எட்டிப் பார்க்கவில்லை.

டிக்கெட் பரிசோதகர் “உன்ன மாதிரி ஆயிரம் பேர பார்த்திருக்கேன். இங்கெயே இரு.இப்ப வாரேன்” என்று பெட்டியினுள் புகுந்து இருட்டில் காணாமல் போனார்.
இவன் பீடியை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்து இழுத்து விட்டான்.

பக்கத்தில் ஸ்டேஷன் வந்து ரயில் நின்றதும் மறுபுற கதவைத் திறந்து எதிர் நடைபாதைக்குப் போனான். குறுக்கே வந்தவர்களை இடித்து தள்ளிக் கொண்டு விழுந்து புரண்டு போலீஸ் அறைக்குள் நுழைந்தான்.கையிலிருந்த பெட்டியை தூக்கி வீசினான்.வெளியே வந்து கத்தினான்.”இப்ப வாடா. பார்த்திருவோம்”
 ரயில் கிளம்பி விட்டது.

Friday, September 24, 2010

துர்தேவதைகளும் துயரங்களும்.

நாகர்கோயில் - திருவனந்தபுரம் தெசிய நெடுஞ்சாலையில்  எங்கள் ஊர் பகுதியில் விபத்துகள் தினசரி வழக்கங்களாகி விட்டன.

சாலையை கடக்கவே முடியாத வாகனப் பெருக்கம்.

எப்பொழுதும் ஒரு துயரம் அந்த சாலையில் காட்சிக்குப் படுகிறது.ஏதோ ஒரு துர்தேவதை சாலையின் நடுவே படுத்து கிடப்பது போலவும்,விபத்துகளை துரிதமாய் நடத்திக் கொண்டிருப்பது போலவும் தோன்றுகிறது.

விபத்துகளுக்கு காரணம் வேகமா... வாகன நெருக்கடியா... அகலப்படுத்தாத சாலையா...

மிகவும் கவனமுடன் செல்வதாக நினைத்து ஓரமாய் சென்றாலும் பின்னால் வருகிற லாறி அடித்து போட்டு விட்டு சென்று விடுகிறது.
 நேற்றைய நிகழ்வு அப்படிதான்.ஓய்வு பெற்ற பேராசிரியர் அவர்.வலதுபக்க சாலைக்கு திரும்புவதற்காக,இடது ஓரமாய் சாலையை விட்டிறங்கி, வண்டியை நிறுத்தி பின்னால் எந்த வாகனமாவது குறுக்கிடுகிறதா என்று முன்னெச்சரிக்கையாய் கவனித்தார். ஆனால் அவர் துரதிஷ்டம் பின்னால் வண்டி வரவில்லை. முன்பக்கமாய் ஓவர்டேக் செய்த டெம்போ இவரை மோதி இழுத்துக் கொண்டு போனது.

இத்தனை எச்சரிக்கையாய் நடந்து கொண்ட போதிலும் அடுத்தவனின் அஜாக்கிரதையே நம்மை பலி வாங்கி விடுகிறதே. தப்பு செய்யாதவனை தண்டித்த மாதிரி இது என்ன கொடுமை. சொல்லி வைத்த மாதிரி அந்த சாலையிலேயே விபத்து சிகிட்சை பிரிவுகளைக் கொண்ட எலும்பு முறிவு மருத்துவமனைகள்... வரிசையாய்... உயரமாய்...

பக்கத்து வயல்வெளிகளை வாங்கி கட்டிடங்களாய் கட்டி கால் ஒடிந்தவனை படுக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

செல்போனை கழுத்துக்கும் காதுக்கும் இடையே கொடுத்துக் கொண்டு கவனம் சிதறி கனவனும் மனைவியுமாக இன்று லாரிக்கிடையில் நசுங்கிக் கிடந்ததை கான சகிக்கவில்லை. வீட்டில் ஆறு வயதுக்கு மிகாத இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராம்.வீட்டில் தேடிக் கொண்டிருக்கிற குழந்தைகள் ஒரு கணம் நினைவில் வந்து போனார்கள்.

இவற்றை விட பெரிய அதிர்ச்சி...  
...... விபத்து நடந்த பகுதியில் சட்டென்று உருவாகி விடுகிற போக்குவரத்து நெரிசல்.அவசரமாக போகத்துடிக்கிற மனிதர்கள். பணி,பள்ளி,மீட்டிங்,ஆஸ்பத்திரி என்று அவரவர்களுக்கு ஒரு அவசரம்.எப்போ டிராபிக் கிளியராகும் என் வேலையை நான் பார்க்க ஓடிவிடவேண்டும் என்று துடிக்கிற.. எரிச்சல்.

 இன்னொருபுறம் துளியாய் விழுந்து நிறையும் நீர் போல சிறு கூட்டம்.சிலர் மௌன சாட்சிகளாய்.. சிலர் பரபரப்பு செய்தி சேகரிப்பவர்களாய்.. வெகு சிலரே, ‘தூக்கு,ஆட்டோ பிடி,ஆஸ்பத்திரி போ.’ என்று பதறியடித்து உயிர் காக்கும் துடிப்புடன்..

அதே நேரம் மோதிய பெரிய வண்டியின் டிரைவரை நையப்புடைக்கும் ஒரு பாரம்பரியமும் காணமுடிகிறது. மனித தவறே இல்லையாயினும் இந்த மனித தண்டனைகள் நிறைவேற்றப்படுவது அவசியம் என்கிற நிலையே நீடிக்கிறது.

விபத்துகளில் பெரிய வேதனை இன்னொன்றும் இருக்கிறது.அடிபட்டவர் உடம்பில் எங்கோ ஒரு மூலையில் உயிர் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கும்.ஆனால் நினைவு இருக்காது. உடல் மனம் எல்லாம் ஒடிந்து கிடக்கும். எப்போது நினைவு வரும் அல்லது எப்போது மரணம் வரும் என்று தீர்மானிக்க இயலாத துரதிஷ்டம் நேர்ந்துவிடும். யாருக்கும் விடிவு தராத அந்த சூழ்நிலை எத்தனை கொடுமை.லட்சங்கள் கரையும்.விமோசனம் இல்லை என்று தெரிந்தும் மருத்துவம் பார்க்காதிருக்க முடியுமா?கற்பனை பண்ணி பார்க்க முடியாத இந்த நிலையை பலர் அனுபவித்துக் கொண்டிருப்பதுதான் கொடுமையான நிஜம்,

சரி எல்லா பாதைகளையும் ஒருவழிப் பாதையாக்கிவிட்டால் என்ன? அப்போதும் விதி மீறல்கள் எழாதா. விபத்தே நடக்காதா? உத்தரவாதமில்லை.வாகன ஓட்டிகளுக்கு பொறுப்பைவிட, ஓய்வை விட,வேகமும் முக்கியமாய் எதிர்பார்க்கப் படுகிற விசயமாகி விட்டது.
அரசு பேருந்தை சராசரி வேகத்தில் ஓட்டிச் செல்கிற ஒரு டிரைவரைப் பார்த்து பயணிகள் சலித்துக் கொள்கிற காட்சிகளை அடிக்கடி பார்க்க முடிகிறது.

“செத்தவன் கையில வெத்தலய கொடுத்த மாதிரி இவனுக்கு எவன் வேலை குடுத்தான்.”

“மாட்டு வண்டி ஓட்டறவனை பஸ்க்கு டிரைவரா வச்சா இப்படிதான்”
கேட்கிறோம்தானே.

 இன்னொன்று, இரவில் வாகனம் ஓட்டுவது.எதிரே வரும் ஓட்டுனருக்கு கண்ணுக்கெதிரேதான் வெளிச்சம் அடிக்கிறார்கள். எதிர் ஓட்டுனர் சாலையோரம் மூடப்படாத பள்ளத்தை இந்த வெளிச்சத்தில் எங்ஙனம் காண்பார்....

ஒருமழை அடித்தால் போதும் ஊதி வெடித்து குண்டும் குழியுமாகும் சாலைகள்... நடைபாதை விட்டிறங்கி சாலையில் நடக்கும் பாதசாரிகள்...

யோசனை மண்டையை பிளக்க இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். அதிகம் போக்குவரத்து இல்லாத கிராமத்து சாலை. இருபக்கமும் வயல்கள்; புதர்கள்.
ஒரு திருப்பத்தில் சட்டென்று கறுப்பு கார்.. அதுவும் வேகம். சுதாரிப்பதற்குள்
அது நடந்தே விட்டது..
‘ட்டங்’ என்று ஒரு சத்தம்.வண்டி ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்.விரலில், முழங்கையில், கணுக்காலில் சிவப்பு திரவம். கார்காரன் கத்தினான். ‘டர்னிங்ல ஆரன் அடிசிட்டு வர மாட்டியா. இப்படி தலைதெறிக்க மாதிரி வார.’

Thursday, September 23, 2010

தூக்கிருவோமா அவனை.

அது ஒரு குறுகலான தெரு. எதிரே வருகிற காருக்கு ஒதுங்க நினைத்து ஓரமாக நகர்ந்தால்.. போச்சு.....சாக்கடையில்தான் போய் விழு வேண்டியிருக்கும். அந்த இடுமுடுக்குக்கிலும் கார்களும் ஆட்டோக்களும் போய் வந்து கொண்டிருந்தன.. வண்டி பழுது நீக்க அங்கே இருந்த ஒர்க்சாப் வந்திருந்தேன்.

மாலை வேளை.... தெருவில் நடமாட்டம் நிறைந்திருந்தது.

தெருவின் இடப்புறமிருந்து  உச்சபட்ச வேகத்தில் ஒரு லான்சர் கார்.. சிறுத்தைபோல சீறிக்கொண்டு..வந்தது. காரின் கறுப்பு கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்தன. உள்ளே ஓசையுடன் துடித்துக் கொண்டிருந்த பாட்டு வெளியே ஊடுருவி நெஞ்சில் அறைந்தது.
அது வந்த வேகத்தில்  எதிரே வந்த சைக்கிள் காரன் சாக்கடைக்குள் சரிந்தான். வேட்டோசையில் அலறி எழும்பும் பறவைகள் போல பாதசாரிகள் சாலையோரமாய் சிதறினர்.

“எழுவுடுத்த பய..  இப்படியா வண்டி ஓட்டுவான்..”

வண்டி சரக்கென்று பிரேக் அடித்து வலதுபுற காம்பவுண்டுக்குள் நுழைந்து. ஒர்க்சாப்பில் வந்து நெரித்தபடி நின்றது. வேறெதுவும் இனி உள்ளே போவதற்கு இடமின்றி.

ஓட்டுனர் இருக்கையை விட்டு [கதவை திறந்தபடி] வெளியே வந்தவன் காரின் உயரம் கூட இல்லை. மீசை முளத்திருக்கவில்லை. ஓட்டுனர் உரிமம் வாங்கியிருக்கும் வாய்ப்பு இல்லை. பின் சீட்டில் அவனையொத்த இன்னும் நாலைந்து பேர். உயர் நிலை பள்ளியில் இருப்பவர்களாயிருக்க வேண்டும்.

வெளியே வந்தவன் பானெட்டை திறந்து காட்டி எதையோ சரி பண்ண சொல்லிவிட்டு வாசலருகே வந்து நின்றான். கார் சாவியை விரலில் வைத்து சுழற்றிக் கொண்டிருந்தான்.
பக்கத்து பள்ளியிலிருந்து அந்தவழியாக மாணவிகள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

“லேய்.மாப்ள. அவன்கிட்ட என்னப் பத்தி சொல்லிப்பாரு. அப்படியே ஒண்ணுக்கு போயிருவான்” டிரைவர் தம்பி தொடங்கினார்.

“இல்ல மக்கா நான் பாக்கேன்னு தெரிஞ்சபிறகும் அவ பின்னாலெயே இவனும் போறான் மக்கா..”

“அதான் சொல்றேன். தூக்கிருவோமா. அவனை..”டிரைவர் தம்பியின் குரலில் ஏரியா அதிர்ந்தது.

“பிசிக்ஸ் வாத்தியார் இருக்கானே. அந்த கேணயனுக்கு சொந்தகாரன் மக்கா இவன். அதான் பாக்கேன்.”
“எவனா இருந்தா என்னல. இப்ப போவோமா. நான் தூக்குறேன் பார் அவனை. . எவன் கேட்கிறான் பாத்திருவோமா...”

ஒர்க்சாப்காரன் நிமிர்ந்து என்னை பார்த்தான். லேசாக சிரித்தான். பிறகு வேலையில் கவனமாகி விட்டான். கேட்டுக்கேட்டு சலித்திருப்பானோ.. தம்பி சலம்பல் யாரைக் கண்டும் கலங்காமல் வீராவேசமாய் தொடர்ந்து கொண்டே இருந்தது.

டிரைவர் தம்பிக்கு வில்லனாகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக யாரிடமாவது பரிந்துரைக்க வேண்டும்..

Tuesday, September 7, 2010

என் புதிய தோழி.


வேதனை நிறைந்த முகங்கள். வலிகளின் குரல்கள். பயமும் கவலைகளுமாக காத்திருப்புகள்.

காத்திருந்த அந்த மருத்துவமனை சூழ்நிலையில் என் கவனம் கலைத்தது ஒரு கொலுசொலி.

குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டு ஒரு சுட்டிக் குழந்தை. எந்த கவலையுமின்றி விளையாட்டு ஒன்றே குறியாக.. நாற்காலிகளை கவிழ்த்துப் போட்டது. ஏறிக் குதித்தது. ‘என்னை பிதி பார்ப்போம்’ என்று அம்மாவை விட்டு விலகி ஓடியது. தெறித்து தெறித்து அது ஓடிய ஓட்டம் விழுந்து விடுவாள் போல் மனசு பதைத்தது. ஆஆஹஹஹா ஹா.... என்று சத்தமாய் சிரித்தது. ஜன்னல் கம்பிகளில் ஏறித்தொங்கியது.
அவள் உலகம் தனியாக.. களிப்புள்ளதாக இருந்தது. அதனுள் நுழைய அங்கிருப்பவர்களால் இயலாததாயிருந்தது.

இயல்பாகவே குழந்தைகளிடம் கொள்ளை பிரியம் எனக்கு. அந்த கொள்கை அடிப்படையில் அவளிடம் நட்பு பாராட்டத் தோன்றியது. பிறகு என்ன.. புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான பூர்வாங்க வேலையை தொடங்கி விட வேண்டியதுதானே..

எழுந்து நடந்து சென்று போகிற போக்கில் ,செல்லமாய் அவள் தலையை தடவிக் கொண்டு பேசாமல் என் இருக்கையில் வந்து அமர்ந்தேன். குழந்தை தலை சாய்த்து, ஆச்சரியாமாய், விளங்காதன்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சரி கவனத்தை என்பக்கம் திருப்பியாயிற்று.

சில நிமிடங்கள் உறைந்து இருந்தவள், நான் பார்ப்பதறிந்ததும் உதறிக் கொண்டு ஓடினாள்.

வராண்டாவின் இந்த முனையிலிருந்து அந்த முனை வரை ஒடி விளையாடியவள் இம்முறை எனக்கு மிக அருகாக வந்து கடந்து போனாள். ஆனால் உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பதாக பாவனை காட்டிக் கொண்டாள். என் புன்னகைக்கு புறமுதுகு காட்டினாள். [சிரிப்பு பார்க்க சகிக்கலையோ....?]

பணியிலிருந்த நர்ஸிடம் போய் உட்கார்ந்தாள்.அவள் கையிலிருந்த ஸ்டெத்தை வாங்கி கழுத்தில் மாட்டிக்கொண்டாள். பக்கத்தில் அழகுக்காக வைத்திருந்த பூவுக்கு இதயத்துடிப்பை பரிசோதித்தாள். நர்ஸின் கன்னத்தில் வைத்துப் பார்த்தாள். அந்த நர்ஸ் இவள் இதயம் பக்கத்தில் வைத்துக் காட்ட “அய்ய்ய்ய்ய்..” என்று குதூகலித்தாள். காதிலிருந்து பிடுங்கிப் போட்டாள். துள்ளிக் குதித்து நோயாளிகளின் ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்தாள். இந்த எல்லா காரியங்களுக்கிடையிலும் அவப்போது என்னையும் பார்த்துக் கொள்வாள். அப்படி ஒரு தருணத்தில் கை தூக்கி விரலசைத்து ‘வா’ வென்று அழைத்தேன். வெடுக்கென்று தலையை திருப்பிக் கொண்டாள்.

அவள் அம்மா களைப்புடன் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.

 நான் வேண்டுமென்றே திரும்பி உட்கார்ந்தேன். சற்று நேரம் கடந்த பின் ஓரக்கண்ணால் பார்த்தேன். பெஞ்சில் ஏறி கீழே குதித்து விளையாடிக் கொண்டிருந்தாள். குதித்த பின் சாகசம் செய்த மாதிரி தனக்குத்தானே கைதட்டினாள். குதித்து நிமிர்கிற போது பார்வை என்னிடம் வந்தது.
“இங்கே வா” என்றேன்.
“போடா”
திடுக்கிடலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாக்கை துறுத்திக் கொண்டு கண்களை முறைத்து பயம் காட்டினேன்.

அவள் இப்போது என்னை முறைத்துக் கொண்டு நின்றாள்.அவள் அம்மாவையும் என்னையும் மாறிமாறிப் பார்த்தாள். ஆள்காட்டி விரலை எச்சரிக்கும் விதமாக நீட்டி “கொன்னுபோடுவேன்.. நாய்..” என்றாள்.

பளிச்சென்று அவள் அம்மா எழுந்து வந்து குழந்தை கன்னத்தை அழுத்தி கிள்ளினாள்.”குரங்கு என்ன பேச்சு பேசற..” தலையில் குட்டினாள். என்ன கவலையில் இருந்தாளோ. அல்லது நான் என்ன நினைப்பேன் என்று நினைத்தாளோ. தேவதைகளின் பேச்சு நமக்கு ஆசீர்வாதங்கள் என்பதை உணராமல் அழும் குழந்தையை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு நகர்ந்தாள். ஏமாற்றமாயிருந்தது.

அம்மா தோளில் முகம் புதைத்திருந்தவள் என்னைப் பார்க்கவே இல்லை என் பார்வை அவளையே பின் தொடர்ந்தது.

வராண்டாவின் முனை சென்று மறையும் கடைசி நொடியில் குழந்தையின் கை மட்டும் என்னை நோக்கி அசைந்தது ‘டாட்டா’

இப்படியாகத்தான் எனக்கு தோழிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Wednesday, September 1, 2010

நான் இந்த வண்டில வரல...

அந்த கூட்டத்தில் தெரியாதனமாக மாட்டிக்கொண்டேன்.
மாலை நேரத்தில் ஜான்சன் தொலைபேசியில் கூப்பிட்டான். “வீட்டுலதானே இருக்க”
“ஆமா. “ என்று தெரியாதனமாக சொல்லிவிட்டேன்.
“அங்கேயே இரு.இப்ப வரேன்.”
விளக்கு வைக்கிற நேரத்தில் புத்தம் புதிய காரில் வந்து தெருவை மிரள விட்டான். காரில் அலறிய பாட்டுக்கு போட்டியாக நாய்கள் குரைத்தன.
அவன் நண்பன் புதிய கார் வாங்கியிருக்கிறானாம். அதை ‘கொண்டாடி’ விட்டு வந்திருக்கிறார்கள். என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டுமாம். மெனக்கெட்டு வந்திருக்கிறான்.
வந்தவர்கள் வீட்டை இரண்டாக்கினார்கள்.
அவன் நண்பன் வெளிநாட்டில் வேலையிருப்பதாகச் சொன்னான். அவன் என் மனைவியைப் பார்த்து உங்கள் பெயர் A யிலிருந்து C க்குள் தொடங்கும் சரியா? என்று கேட்டு அசத்தினான். முகத்தைப் பார்த்தே அவன் கணித்தவைகளைக் கேட்டு எல்லோருக்குமே இலவச ஆரூடம் கேட்கும் ஆசை வந்துவிட்டது.
நண்பர்களின் உற்சாக [பான] கலகலப்பில் நேரம் போனதே தெரியவில்லை. தெரு கலைத்து போட்ட மாதிரி ஆகிவிட்டது. பக்கத்து வீடுகள் தொந்தரவு பொறுக்க முடியாமல் எட்டிப் பார்த்தன.
“சரி. நேரமாயிட்டது. கிளம்பு. சாரைக் கொண்டு அவர் வீட்டில விட்டுட்டு வந்திருவோம்.” ஜான்சன் விரட்டினான். அவன் சொன்ன ஊருக்கு போக இருபது கிலோமீட்டர்களாவது போகவேண்டியிருக்கும்.
மணி பதினொன்று. தயங்கினேன்.
“இங்க இருந்து என்ன பண்ணப் போற. வா சும்மா ஜாலியா..”
இப்படிதான் மாட்டிக்கொண்டேன்.
வெளியே நல்ல இருட்டு. லேசான சாரல் மழை.
வெர்சா காரில் 6 பேர் இருந்தோம்.
அந்த நண்பனின் நண்பன் செல்பேசி எடுத்து யாரையோ கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான். பத்து நிமிசம் பேசியதில் பாலன்ஸ் தீர்ந்ததும் நிறுத்தினான். வெளி நாட்டுக்கு பேசினானாம்.
திடீரென்று கூடவந்த மற்றோரு நண்பன் உற்சாகத்தைக் காட்டுவதற்காக ‘-------‘ என்று கெட்ட வார்த்தையை கூவினான்.
வெளி நாட்டு நண்பருக்கு வந்ததே கோபம். “எனக்கு இப்படி கெட்ட வார்த்தையெல்லாம் பேசுறது பிடிக்காது.” என்றார். முதலில் கூவியவர் மறுபடியும் வேண்டுமென்றே கத்தினார்.
“லேய்.அறிவு இருக்கால உனக்கு. குடிச்சா இப்படிதான் கெட்டவார்த்தை பேசணுமா. அதான் பிடிக்காதுன்னு சொல்றேன்ல.. நான் சொன்ன பிறகும் நீ எப்படி பேசலாம். நிறுத்து நிறுத்து. வண்டிய நிறுத்து.”
ஓட்டிக் கொண்டிருந்த ஜான்சன் ஓரமாய் நிப்பாட்டினான்.’ யேய் இவனே பேசாமா இருக்க மாட்டியா” என்று கத்தியவனை திட்டிக்கொண்டு  நண்பரை சமாதானப் படுத்த திரும்பினான்.
 நண்பரோ அதற்குள் கார் கதவை திறந்துகொண்டு வெளியே இறங்கினார்.” நீங்க போங்க நான் இந்த வண்டியில வரல..”
 நொந்தபடி வெளியே இறங்கினோம். வெளியே ஒருவரை ஒருவர் தெரியாத அளவுக்கு இருட்டு. இவன் எங்கே போனானோ. கார் வெளிச்சத்தில் பக்கத்தில் குளம் என்பது தெரிந்தது. தாமரை படர்ந்திருந்தது.
ஜான்சன் கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை. பின்னால் வந்த லாறி வெளிச்சத்தில் சாலையை கவனித்ததில் மனித உருவமே தென்படவில்லை. “இவன் எங்கல போய் தொலஞ்சான். தண்ணி வாங்கி தந்துட்டு ராத்திரி பூரா வேலை வாங்கிருவான் போல இருக்கே.”
கெட்ட வார்த்தை சொன்னவனை ஆளாளுக்கு வறுத்தெடுக்க அவன் போதை இறங்கினான்.
இரண்டு பேர் சாலையின் வலதும் இடப்பக்கமுமாக சிறிது தூரம் நடந்து போய் தேடியாயிற்று. ம்ஹூம்.. அதற்குள் எங்கே போயிருப்பான்.
ஒருவேளை காரில் இருந்து இறங்கியதில் தடுமாறி விழுந்து குளத்துக்குள் விழுந்திருப்பானோ.. அந்த நினைப்பிற்கே ஒரு நிமிடம் மூச்சே நின்றது.. வேறு வழியில்லை. குளத்தில் இறங்கி பார்த்து விட வேண்டியதுதான்.
காரை சற்று பின்னால் நகர்த்தி ஹெட்லைட்டை போட்டு.. குளத்தில் லேசாக வெளிச்சம் விழ... ஒருவன் பான்ட் சட்டையை கழற்றி குளத்தில் இறங்க தயாரான போது-
கார் கதவைத் திறக்கும் ஓசைக் கேட்டது.
திடுக்கிட்டுத் திரும்பினால் காரருகே ஒரு உருவம். ஒருவரையொருவர் கையை பிடித்துக் கொண்டோம். பயம் எல்லொருக்குள்ளும் இருப்பது நடுக்கத்தில் தெரிந்தது.
“அங்க என்னல பண்ணிட்டு இருக்கீங்க வாங்க போவோம்” குரல் அவன்தான் என்று உறுதிபடுத்திய பிறகுதான் நிம்மதி வந்தது.
பாவி ஓசைப்படாமல் குளக்கரையை நாறடித்து விட்டு வந்திருப்பது பிறகுதான் தெரிய வந்தது..

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More