Sunday, August 1, 2010

அந்த ஆறாவது குட்டி


வழக்கமாக நடைபெறுவதுதான். இம்முறையும் அதிகாலையில் விழித்து பார்த்தபோது வாசலருகே கண்விழிக்காத குட்டிகள். ‘ம்கும்..க்கும்’ என்று முனகியபடி ஆறு நாய்குட்டிகள்.

வஞ்சிக்கப்பட்ட தெரு நாய் ஒன்றின் குட்டிகள். ‘கொழுக்மொழுக்’ கென்று அழகாய் இருந்தன.அதில் ஒரு குட்டி மட்டும் கொஞ்சம் நோஞ்சானாக இருந்தது. கடைசி குட்டி போலிருக்கிறது.
என் மகனுக்கு அந்த குட்டிகளிடம் ரொம்ப பிரியம்.அழுக்கோடு இருந்தாலும் மடியில் எடுத்து வைத்து ‘செல்லக்குட்டி’ என்று கொஞ்சுவான். முத்தம் கொடுப்பான். ‘குளிருதாம்மா’ என்று கோணிப்பை எடுத்து மூடுவான்.

எப்போதாவது வரும் தாயிடம் பால் குடிக்க அவைகளுக்குள் அவசர போராட்டம் நடக்கும். அந்த போராட்டத்தில் அந்த கடைசிக் குட்டி பின் தங்கி விடும். இவன் அதை தூக்கி பால்குடிக்க உதவி பண்ணுவான். ‘அப்பா நாம இத வளக்கலாம்பா’ பலமுறை அவன் வைத்த கோரிக்கை, இன்னும் பரிசீலிக்கப் படாமல் இருப்பதில் என் மேல் ஏக வருத்தம். தூக்கத்தில் ‘செல்லக்குட்டி அங்க போகாத..அண்ணன்கிட்ட வா மக்களே’ என்று உளறினான்.

எல்லா குட்டிகளும் ஓரளவு வளர்ந்து நடமாடிய பின் ஒரு நாள்...

அலுவலகம் புறப்பட கதவை பூட்டிக் கொண்டு கிளம்புகையில் அந்த கடைசிக் குட்டி பதறிக்கொண்டு ஓடிவந்தது. ‘ அவ்.வ்..வ்’ என்று ஓலம்..திடீரென்று இடதுபுறம் ஓடியது.. அங்கிருந்து வலப்புறம்.. ஓலம் நிற்க வில்லை. எதிர் வீட்டு வாசலில் போய் குரைத்தது. இன்னொரு குட்டி ஓடிவந்து அதை நக்கியது. ‘என்னடா ஆச்சி’ என்று விசாரிக்கிற மாதிரி....

என் முன்னே வந்து நின்று ஏக்கமாய் ஏறிட்டது. என் கால் விரலை நக்கியது. கீழே விழுந்து புரண்டது.. வலது காலை பற்களால் கடித்து காட்டியது ஏதோ முறையிடுகிறதோ.. ஏதோ ஒரு ஆபத்திலிருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று இறைஞ்சுவது மாதிரி.. யாசகம் கேட்கிற மாதிரி அந்தப் பார்வை... என்னை நகர விடாமல் செய்தது.

குனிந்து அதன் தலையை தடவினேன். வலது காலைத் தூக்கி என் கையில் வைத்தது. ‘க்கும்..க்கும், என்று அரற்றியது. அது தந்த காலை மெதுவாக சுரண்டினேன். காயங்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதித்தேன். எதுவும் தென்படவில்லை.ஆனால் அது சாந்தமாயிற்று. காலடியில் சுருண்டு படுத்தது. முனகல் குறைந்தது. ஒருமுறை கண்ணைத்திறந்து என்னை ஏறிட்டு விட்டு அப்படியே தூங்கியது. நிம்மதியாய் அலுவலகம் கிளம்பினேன்

மாலை வீட்டுக்கு வந்த போது... பள்ளியிலிருந்து வந்திருந்த மகன் கவலையோடு உட்கார்ந்திருந்தான். “அப்பா அந்த ஆறாவதுக் குட்டி செத்துப் போச்சிப்பா” என்றான் மிகுந்த துயரத்தோடு.

பதறிப் போனேன்.. ஐயய்யோ ஒரு உயிரை காப்பற்ற முடியாமல் போனேனே.. ஒரு பெரிய பாரம் போல் துயரம் என் நெஞ்சில் வந்து உட்கார்ந்தது. கடைசி நேரத்தில் அது என்ன சொல்ல வந்தது.

“அந்த புதர்ல போய் விளையாடியிருக்கும் பாம்பு ஏதாவது கடிச்சிருக்கும்’ பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.

என்னால் அந்த செல்லக் குட்டியின் கடைசி பார்வையை இப்போதும் மறக்க முடியவில்லை..
__________________

0 பகிர்வுகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More