Friday, October 9, 2009

வலை


பேருந்திலிருந்து இறங்கி ஆட்டோவுக்காக திரும்பிய போதுதான் இடிக்கிற மாதிரி அவள் வந்து நின்றாள்.
இவன் எதிர்பார்க்கவில்லை.
‘மாலதி நீயா?’ என்ற கேள்வி உள் நாக்கினிலே ஒட்டிக்கொள்ள, இரையை கண்டுவிட்ட மிருகம் போல மனம் கும்மாளமிட்டது ‘மாட்டிகிட்டியா’.
மாலதி விழிகள் விரிய, “ நம்பவே முடியலை.... நீங்களா?” கூவினாள். “பார்த்து எவ்வளவு நாளாச்சி. எப்படியிருக்கீங்க.”
இவன் கேள்வியை உதாசினப்படுத்தினான். ‘அப்படியே செத்து போயிருவேன்னா நினைச்சே.’ மனசுக்குள் ஆத்திரம் அலைமோதியது.
“என்ன பேசமாட்டேங்கிறீங்க. கோபமா?” என்றாள்.
பதில் பேசாது மார்புக்கு குறுக்கே கைகட்டி அவள் விழிகளை ஊடுருவினான்.
தடுமாறினாள்.கண்ணில் குபுக்கென்று நீர் நிறைய சரேலென்று தலை குனிந்தாள். கைகுட்டையால் கண்ணை ஒற்றிக்கொண்டாள்.
‘மனசு குத்துதில்ல. அழு. நல்லா அழு.’ மனசு குரூரமாய் சிரித்துக் கொண்டது
“வீட்டுக்கு வாங்களேன்.பக்கத்திலதான்.”
கேட்காத மாதிரி பெட்டியை தூக்கிக் கொண்டு ஆட்டோவுக்காக திரும்பினான்
“தமிழ் தெரு ஏழாம் நம்பர்.கண்டிப்பா வாங்க. நிறைய பேசணும் “ என்றவள் அவசரமாய் கடந்து போனாள்.
இவனுக்கு நினைவுக் குளத்தில் கல்லெறிந்த மாதிரியாயிற்று.
வீட்டுக்கு வந்தால் உற்சாக வரவேற்பு. வாசலில் எதிர் கொண்ட அம்மா, “ரொம்ப பயந்துட்டியா” என்று சிரித்தாள். அப்படியானால் ‘மதர் சீரியஸ்’ என்றுவந்த தகவல் பொய்யா..
“ நீதான் ஆறு வருசமா ஊருக்கு வராம இருக்கியே. எப்படி வரவைக்கிறதாம்.”
ஏமாற்றமாயிருந்தது. வெறுப்பும் கோபமும் எழுந்தது. போனில் தகவல் சொல்லாமல் தந்தி அனுப்பிய போதே யோசித்திருக்க வேண்டும்.
அறைக்கு வந்து கட்டிலில் மல்லாந்து படுத்தான்.
நினைவு அடுக்குகளில் தூசி போல் படிந்திருந்த மாலதி மெல்ல எழுந்தாள். நிமிசத்தில் விஷ்வரூபமாகி அறையெங்கும் வியாபித்தாள். மின்விசிறி சுழற்சியில் அலைஅலையாக சிதறினாள்
.
மின்விசிறி இல்லாமல் அந்த பிஸ்கட் கிடங்கின் உள்ளே இருக்க முடியாது புழுக்கம். இவன் எழுந்து வெளியே வந்து நின்றான்.
இவனுக்கு கால் நீட்டி சௌகரியமாய் உட்கார்ந்து கொள்கிற வேலைதான்.பழைய சினிமாக்களில் வில்லனின் இருப்பிடம் மாதிரி கூரை முட்ட அடுக்கப்பட்ட பிஸ்கட் பெட்டிகள்.உள்ளே ஒரு ஆள் நுழைகிற அளவுக்கு ஒரு சந்து.சன்னலோரமாய் ஒரு இருக்கை. உள்ளே வருவதையும் வெளியே போவதையும் கணக்கு வைக்கிற வேலைதான். காலையும் மாலையும் சிலமணி நேர பரபரப்பு.பகல் முழுக்க வேலையே இருப்பதில்லை.எப்போது பிணம் விழும் என்று காத்திருக்கிற வெட்டியான் போல்.... ‘ஹாஆஆஆஆஆவ்வ்வ்வ்’ இப்படிதான் கொட்டவி கொட்டவியாக வந்து தொலைக்கிறது.
இதில் அடிக்கடி மின் தடை வேறு.. அதனால் வெளியே வந்து நின்று வாய் பார்ப்பது ஒரு உபதொழிலாயிற்று.
அது, ஏதோ ஒரு சாமர்த்தியசாலி அடுக்கடுக்காய் கட்டிப்போட்ட வணிக மையம். மேலும் கீழுமாய் இருபத்து எட்டு கடைகள். இம்மாதிரி இடங்களில் எங்கே நுழைந்து எங்கே வெளியேறுவது என்று பலருக்கு குழப்பமாக இருக்கும். அவ்வளவு இடுக்கு முடுக்கான இடங்களிலும் ஏதாவது ஒரு கடைக்கு வாடகை விடப்பட்டிருக்கும்.
“எக்ஸ்கியூஸ் மீ” குரல் வந்த திசையில் திரும்பினால் மஞ்சள் நிற தாவணியில் அவள் நின்றிருந்தாள். இவனைத்தான் கூப்பிட்டாள்.
அவள் மீது விழுந்த பார்வையை திருப்பி எடுக்க முடியவில்லை.பேரழகி இல்லை. ஆனாலும் வசீகரம். கிறங்கி போய் நின்றான்.
“மாடிக்குப் போற படிக்கட்டு எங்க இருக்கு?”
சுய நினைவுக்கு வந்து இவன் பதில் சொல்ல வாய் திறந்த நேரம் பார்த்து மறுபடி கொட்டாவி வந்து தொலைத்தது. ஹாஆஆஆ....
ஒரு நகைச்சுவையை ரசிப்பது போல் அவள் சிரிக்க இவனுக்கு வெட்கமாய் வந்தது. ஒருகையால் வாயை பொத்திக் கொண்டு மறுகையால் வழியை சுட்டினான். அவள் சத்தமாய் சிரித்துக் கொண்டு கடந்து போனாள்.
இனிப்பை கண்டுவிட்ட எறும்பு போல அவளைச் சுற்றியே மனம் அரிக்கத் தொடங்கியது.
புழுக்கமாய் இருந்த போதிலும் நாற்காலியில் வந்து உட்கார்ந்து அவசரமாய் கனவு காண ஆரம்பித்தான்.
மறுநாளும் ஜன்னலோரம் கொட்டாவி விட்டபடி இவன் இருக்க, எட்டிப்பார்த்து “குட் மார்னிங் கொட்டாவி ஆபிசர்” என்று கிசுகிசுத்துவிட்டு ஓடி போனாள்.இவன் திகிலடைந்தான்
அப்புறம் தினசரி அந்த ஜன்னல் வழியாக ஒரு பார்வையை தூக்கி எறிந்து விட்டு போவாள்.அணுகுண்டு வீசப்பட்டது மாதிரி இவன் அதிர்ந்து போய் கிடப்பான்.
யார் இவள்.எதற்கு தினசரி வருகிறாள்.மாடியில் இருக்கும் ஏதாவது கடையில் பணியாற்றுகிறாளோ? விசாரிக்கவேண்டும்.
எங்கே போகிறாள் என்பதையாவது தெரிந்து கொள்ளலாம் என்ற நினைப்பில் மாடியேறி ஒருநாள் மேலே போனான். மதிய வேளை. ஆளரவமற்றிருந்தது. ஒரு டெய்லர் கடை, நிதி நிறுவனம், மருந்து ஏஜன்சி இன்னும் என்னவெல்லாமோ கடைகள் மேலேயிருக்க....
என்கே நுழைவது, நுழைந்து என்ன கேட்பது என்ற தயக்கத்தில் கிலி பிடித்து,பதட்டமாய் கீழே இறங்கினான்.
மாலையில் கீழே வந்தவள், “என்னைதானே பாக்க வந்தீங்க” என்றாள். இவன் பேயறைந்தவன் மாதிரி விழித்தான்.
“இல்ல..இல்ல..” என்று சொன்னது இவன் காதுக்கே கேட்கவில்லை.போய்விட்டாள்.கடந்தது தெரியாமல் வெகு நேரம் உறைந்து போய் நின்றான்.
இரவில் தூக்கம் வரவில்லை. மதயானை புகுந்த விளைநிலம் போல மனசு நிம்மதி இல்லாது போயிற்று.
பின்னொரு நாளில் ரொம்பவும் பழகியவள் மாதிரி, “பஸ்சுக்கு சில்லறை இல்லப்பா ஒரு ஐம்பது காசு குடேன்” என்றாள். அவள் அப்படி உரிமையோடு கேட்டது இவனுக்கும் பிடித்து போயிற்று.
“திரும்ப தந்திருவேல்ல” என்றபடி எடுத்துக் கொடுத்தான்.
“சீ போடா கஞ்சப் பயலே” என்று அவள் பதிலுக்குச் சொன்னபோது கொபம் வரவில்லை. சந்தோசமாகவே இருந்தது.
அன்று படபடப்பாய் வந்தாள். “ கண்ணாடி சார் ஒரு பத்தாயிரம் தரமுடியுமா உங்களால”
அவ்வளவு பணம் இவனிடம் ஏது. இல்லை என்பதை எப்படி நேரடியாய் சொல்வது.... “தந்தா எனக்கு என்ன தருவ...” என்றான்.
அவள் வெடுக்கென்று நகர்ந்தாள். முகத்தில் கோபம் தெறிக்க விரைந்தாள். இவனுக்கு நடுக்கமாயிற்று. தப்பாக புரிந்து கொண்டாளோ....
இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு நோஞ்சானோடு வந்தாள்.ஜன்னல் வழியாக இவனைக்காட்டி “ நல்லா பார்த்துகங்க. இவர்தான்.” என்று எதற்கோ அடையாளம் காட்டினாள்.இவன் முகம் பாராமல் திரும்பி போனாள். இவனுக்கு எதுவும் புரியவில்லை.அவ்வளவு தரக்குறைவாகவா நடந்து கொண்டேன். தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
மாலையில் அந்த நோஞ்சான் இரண்டு பேரை கூட்டிவந்தான்.
“என்னடா பெரிய இவனா நீ” வந்தவன் மிரட்டலாய் கேட்க இவனுக்கு நா உலர்ந்தது.
“ராஸ்கல் யாருகிட்ட விளையாடுற. பொணமாயிருவ”
முதலில் புரியவில்லை. முட்டாள்கள் ஆள் மாற்றி வந்து பேசிக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றியது.
“மாலதிகிட்ட இனி தொந்தரவு செஞ்ச... மவனே கையை காலை ஒடிச்சிபுடுவேன்.” என்றபடி மேஜையில் ஊன்றியிருந்த வலது கையை நச்சென்று இடித்தான்.விரல்கள் நசுங்கி வலியில் உயிர் போயிற்று. ‘அம்மா’ என்று அலறினான்.இன்னொருவன் முதுகில் ஓங்கி குத்தினான். நிலை தடுமாறி விழுந்ததில் முன்னாலிருந்த கதவில் போய் ‘ணங்’ கென்று மோதினான். தலை சுழன்று கொண்டு வந்தது.
அதன் பிறகு நினைவு வந்து இவன் பார்த்தபோது கடைக்கு வெளியே தெருவில் கிடந்தான். சுற்றி கூட்டம். “தின்னு கொழுப்பெடுத்து ஏண்டா இப்படி திரியறீங்க.” யாரோ கெட்ட வார்த்தை சேர்த்து திட்டினார்கள்.
சற்று நேரத்தில் முதலாளி வந்தார். “ராஸ்கல் .படிச்சவன்,பாவமாச்சேன்னு வேலைக்கு வச்சா பொண்ணுகளையா நாசமாக்க பாக்கிற. மருவாதியா ஓடிபோயிரு நாயே.. என் கடை பேரையே கெடுத்திட்டியே பாவி....”
ஆக வேலை போயிற்று.
ராட்சசி இப்படி பழிவாங்கி விட்டாளே. மனசில் ரணமாய் தங்கிற்று.
வீட்டில் அப்பா முதல் கடைசி தங்கை வரை கடித்து குதறினார்கள். “பொறுப்பத்த நாய்.கொஞ்சமாவது குடும்ப நிலமை தெரிஞ்சா இப்படி நடக்குமா.... சே.. என்ன கேவலத்த உண்டாக்கிட்டு வந்து நிக்குது நாயி....”
யார் கண்ணிலும் விழிக்க பிடிக்க வில்லை.அறையை விட்டு வெளியே வரவே பயம்.
நல்லகாலம் பாண்டிச்சேரி மாமா வேலை தேடி வைத்திருப்பதாக கூப்பிட அன்று கிளம்பியவன்தான். ஆறாண்டுகளுக்கு பின் இன்றுதான் ஊர் வந்திருக்கிறான்.அதுவும் ஒரு பொய் தந்தியை நம்பி. வந்திறங்கியதும் அவள் முகத்தில்தான் முழிக்க வேண்டுமா.
அவள் வீட்டுக்கு அழைத்த போது இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்றுதான் வந்துவிட்டான்.ஆயினும் அவளிடம் நறுக்கென்று ‘நாலு வார்த்தை’ கேட்டால்தான் மனசு ஆறும் என்று தோன்ற இதோ கிளம்பி விட்டான்.
வாங்க தம்பி உட்காருங்க.மாலதியை வரச்சொல்றேன்” முதிய பெண்மனி ஒருவர் அமர வைத்து விட்டு உள்ளே போனார்.
இன்று நேருக்கு நேராக கேட்டுவிட வேண்டும்.இத்தனை நாள் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த அத்தனையும் கொட்டிவிட வேண்டும்.ராட்சசி என்னவெல்லாம் பாடாய் படுத்திவிட்டாள்.
அந்த விசாலமான முன்னறையில் என்ன செய்வது என்று தெரியாமல் வெறித்துக் கொண்டிருந்தான்.அறையைச் சுற்றி கண்களை சுழல விட்டான். வலது மூலையில் அகலத்திரை டி.வி. அதன் மேல் பிளாஸ்டிக் போன்சாய். இடது பக்க சுவரில் சந்தண மாலையிட்ட ஒரு பெரிய புகைப்படம். [புகைப்பட முகம் எங்கோ பார்த்த மாதிரி நினைவு.] கீழே எப்பொதும் எரிந்து கொண்டிருக்கிற மின்விளக்கு. உட்கார நாலைந்து மோல்டட் நாற்காலிகள். அவ்வளவுதான். ஹால் பளிச்சென்றிருந்தது.
“கண்ணாடி சார்,எப்ப வந்தீங்க. மறந்திட்டீங்களோன்னு நினைச்சேன்” என்றபடி மாலதி வந்தாள்.தலை கலைந்து தூக்க கலக்கத்திலிருந்தாள்.
இவனுக்கு கோபம் வந்தது ‘எப்படி மறக்க முடியும் மறக்கிற மாதிரியா பண்ணியிருக்கிறாய்.துரோகி’
“இன்னும் நீங்க மாறவேயில்லை. ஒரு வார்த்தை பேசறதுக்கே ரொம்ப யோசிக்கிறீங்க.”
“ ஆமா அதில நீ சாமர்த்தியசாலிதான். வேஷம் போடவும், வசனம் பேசவும் உனக்குதானே நிறைய தெரியும்” இவனது குரலுக்கு மிரண்டாள்.
“என்ன... சொ..ல்..றீ..ங்க..”
“ஆகா என்னா நடிப்பு. ஒண்ணுமே தெரியாத மாதிரி. இத்தனை நாள்ல மறந்திருவேன்னு நினைச்சியா.”
பயத்தில் நடுங்கினாள் “நான்... நான்.. அப்படி என்ன தப்பு செய்தேன்”
“அது நான் கேட்க வேண்டிய கேள்வி. ஆள் வச்சி அடிக்கிற அளவுக்கு உனக்கு என்ன பண்ணினேன். என் வாழ்க்கையே நாறடிச்சிட்டியே.”
அவள் பேயைப் பார்த்த மாதிரி அரண்டு போயிருந்தாள்.
“சே எப்படிப்பட்ட பொம்பளை நீ... இப்படி நடப்பேன்னு கனவுல கூட நான் நினக்கலை.”
மாலதி விழிகள் பளபளக்க, சரேலென்று எழுந்து உள்ளே ஓடினாள்.
“என் மருமக ஏன் இப்படி ஓடறா.” என்றபடி அந்த முதிய பெண்மணி காபியுடன் வந்தார். இவனுக்குள் கோபம் அடங்க மறுத்தது.
இயல்பாய் பேச யோசிக்க வேண்டியிருந்தது.
“உங்க மருமகளா..”
“ப்ச்.... வீட்டுக்கு விளக்கேத்த வந்த பொண்ணு... அவ வாழ்க்கையே இருட்டாக்கிட்டு நிக்கிறா.” அத்தை ஏனோ பெருமூச்செறிந்தார். “எல்லாம் என்னால வந்த வினை.” சற்று நேரம் சுவற்றிலிருந்த விளக்கை வெறித்தார்.
இவன் குழப்பமாய் விழித்தான். அத்தை தொடர்ந்தார்.
“என்ன சொல்றது.... எல்லாம் என் பண திமிரு. நான்தான் பாவி. ஆஸ்பத்திரியில கிடந்த அவ அப்பனை காப்பத்திறேன்னு பணத்தைக் காட்டி அவ வாழ்க்கையை கெடுத்திட்டேன்.”
இவனுக்கு எரிச்சலாயிற்று. இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறாள்.
“....சொந்தம்தானேன்னு நினைச்சி வலிப்பு வரவனை வலுக்கட்டாயமா கட்டிவச்சேன்... ப்ச்.... ஒரு நிமிசம் கூட நிலைக்காம போச்சி. இப்ப. இவ முகத்தைப் பார்க்கதான் எனக்கு தெம்பில்லை.” அழுகையை அடக்க அத்தை நிரம்ப சிரமப்பட்டார்.
இவனுக்கு இப்போது மெள்ள பொருள் விளங்க.. “நீங்க என்ன சொல்றீங்க..” என்று அதிர்ச்சி காட்டினான்.
“ என்னத்தை சொல்ல.. அந்த பாவிப்பய...,” என்று தொடங்கிய அத்தை பாதியில் நிறுத்திவிட்டு சுவரிலிருந்த புகைபடத்தை பார்த்து குலுங்கி குலுங்கி அழுதார்.
எதிர்பாராமல் எங்கேயோ மோதிக் கொண்ட மாதிரி உணர்வு. சூழ்நிலையின் இறுக்கம் புரியாமல் நடந்து கொண்டதற்க்கு தன்னைத்தானே நொந்து கொண்டான்.
அத்தை தந்த காபி ஆறியிருந்தது.
கனமான மௌனம் சுமையாய் அழுத்த, “ நான் இதை எதிர்பார்க்கவில்லை” என்றான்.
அத்தை கண்ணீரை துடைத்துக் கொண்டார். “எதிர்பார்க்கிற எதுதான் நடக்குது. எல்லாம் காலத்தின் விளையாட்டு. அது விரிச்ச வலையில போய் விழுறதே நம்ம வேலையாப்போச்சி”
அத்தை ஒரு ஞானி போல பேசிக்கொண்டிருக்க இவன் எழுந்து அந்த புகைப்படத்தினருகில் போய் நின்றான் அஞ்சலி செலுத்துவது போல.
நெருங்கி பார்க்கையில் சட்டென்று நினைவுக்கு வந்தது. இது அவன்தான்... ஆளோடு வந்து இவனை அடித்த அந்த நோஞ்சான்தான்... இன்று உயிரோடு இல்லை என்று நினைக்க பகீரென்றாகிப்போனது.
திடீரென்று பின்னால் மெல்லிய குரல் கேட்டது. “இப்ப நான் ரெடி.உங்க கோபத்தை காட்டுங்க.” பழைய அதே புன்னகையுடன் மாலதி.
நெகிழ்ந்து போயிருந்தான்.பேச்சே எழவில்லை.சற்று நேரம் மௌனத்தில் கழிந்தது. அத்தை உள்ளே போயிருந்தார்.
“ஸாரி மாலதி .உன் நிலமை புரியாம....” துக்கத்தை விழுங்கினான்.
“பாண்டிச்சேரியில வேலை கிடைத்ததாமே.. நல்ல சம்பளமா.”
“என்னால நினைச்சி கூட பார்க்க முடியலை. நீ.. நீ.. எப்படி தாங்கிகிட்ட மாலதி.”
“அம்மா சீரியஸ்னு சொன்னீங்களே. என்னாச்சி..”
“பேச்சை மாத்தாதே. சொல்லு.”
அமைதியானாள். உள்ளுக்குள் யோசித்து வரிசைப் படுத்துகிறாள் போலிருந்தது.
“என்ன சொல்ல. விடியுற நேரத்தில மறுபடியும் இருட்டு வந்த மாதிரி எல்லாம் பொசுக்குனு போயிட்டது.”
இவன் மௌனம் காத்தான்.உள்ளுக்குள் ஆவேசம் தணிந்திருந்தது.
“முதல்ல எனக்கு இந்த கல்யாணமே பிடிக்கலைதான்.எப்படியாவது தட்டி கழிக்கணும்னுதான் பார்த்தேன். என்ன சொல்லியும் அவங்க ஒத்துக்கலை.வேற வழியில்லாம உங்களைக் கொண்டு காட்டினேன்.உங்களதான் நான்.. நான்..”
தலைகுனிந்தாள். இவனுக்கு புரிந்தது.
“... அப்படி சொல்லியும் பயனில்லாம போச்சி. அப்புறம் அப்பா ஆஸ்பத்திரி செலவு.. எங்க ஓடியும் பணம் இல்லாம போக.. அதையே எனக்கு வலையாக்கிட்டாங்க.”
இவன் அவளுக்காக இரக்கம் சுரந்தான்.
“அப்புறம் அந்த முத ராத்திரியில... வலிப்பு வந்து கையை காலை உதறிட்டு, ஏதோ சேட்டை செய்றாறோன்னு நினைச்சா... படார்னு கட்டில் விளிம்பில் போய் விழுந்தார். நடு மூக்கில இடி. பட்டுனு போயிட்டார்.. நம்பவே முடியலை. அத்தை சொல்ற மாதிரி காலத்தோட வலையில மாட்டிகிட்டேன். அவ்வளவுதான்.” சிரித்தாள்.
இவனால் சிரிக்க முடியவில்லை. எப்படி ஆறுதல் சொல்வது என்றும் தயக்கமாயிருந்தது.
திடீரென்று ஞாபகம் வந்து கேட்டாள். “ ஆள் வச்சி அடிச்சதா சொன்னீங்களே. என்ன அது.”
“ஒண்ணுமில்ல சும்மா சொன்னேன்.” இவன் எழுந்தான்.
.காலம் வலையல்ல பெண்ணே. அது காட்டாறு. எல்லா அழுக்குகளையும் அது கரைத்து இழுத்து போய்கொண்டேயிருக்கிறது. புதிதாக்குகிறது. என்று மனசுக்குள் தோன்றியது. அவளிடம் சொல்லவில்லை.


[முதலில் வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு நன்றி]

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More