Thursday, August 20, 2009

சின்னவங்க

டாக்டர். இனி நீங்கதான் இவளுக்கு ஏதாவது பண்ணணும்” நுழைந்ததும் நுழையாததுமாக நான் கத்துவதைப் பார்த்து டாக்டர் என்னவோ நினைத்திருக்க வேண்டும்.
பொருட்காட்சியில் வைத்த ஏதொ ஒரு வஸ்துவை பார்க்கிற மாதிரி என்னை மேலும் கீழும் பார்த்தார்.
அவசரமாய் புன்னகைத்தேன்.
அவர் சொல்லுமுன்னே அவர் மேசைக்கு முன்னே போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து சாய்ந்து கொண்டேன். என் மனைவியையும் உட்காரச் சொன்னேன். அவள் பல்லை கடித்துக் கொண்டு முறைத்தாள்.இப்போது அவள் முகத்தை பாருங்கள்.பேய் பிடித்தவள் மாதிரி இல்லை?
“டாக்டர் இவளை நீங்கதான் எடுத்து சொல்லணும்” எனக்கே தெரிந்தது. முறையில்லாமல் துவங்குகிறேன்
“சரி சொல்லுங்க. இவங்க யாரு.”
“ஷீலா.. என் மனைவி..”
“ம். அவங்களுக்கு என்ன” என்ற போது ஷீலா எதுவோ சொல்ல வாய் திறந்தாள். நான் அவளுக்கு முந்திக்கொண்டு ஆரம்பித்தேன்.
பால்காரனின் மணியோசையில் ஷீலா எழுந்து போனதும் எனக்கு
உறக்கம் போய்விட்டது. படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து பொதிந்த ரோஜா போல தூங்கும் என் மகளை தட்டிக் கொடுத்தேன்.
‘அப்பா நான் எப்படிப்பா இருக்கேன்.’
‘என் கண்ணு என்னையே போல இருக்கேடா’
‘எல்லாரும் ஏம்பா அப்படி சொல்றாங்க’
‘என்ன சொல்றாங்க’.
‘என் கண் அப்படியாப்பா இருக்கு.’
‘எப்படி’
‘பேய் முழிக்கிற மாதிரி’
‘அப்படி யாரு சொன்னா’
‘எல்லாரும்.... அம்மாகூட.. ‘
ஓ! காயப்படுத்தியிருக்கிறாளா.
‘ஏண்டி.குழந்தைகிட்ட இப்படிதான் பேசறதா. அது மனசு எவ்வளவு கஷ்டபடுது பாரு. விவரம் கெட்டவளே. இனிமே இந்த மாதிரி நடந்துகிட்டேன்னா எனக்கு கெட்ட கோபம் வரும்’அநியாயத்துக்கு கத்துவேன்.அதிகம்தான். ஆனாலும் அந்த குழந்தையின் மனதுக்கு இதமளிக்க இது தேவைதான் என்று தோன்றியது.
ஆரம்பத்தில் அவளிடம் அதிர்ந்து பேசியதேயில்லை. என் கோபம் லேசாக வெளிப்பட்டாலே நாலு நாளுக்கு அழுது தீர்ப்பாள்.இப்போது மாறிவிட்டோம். முடிந்தவரை போராடிவிடுவது என்ற மூர்க்கம் அவளிடம் வந்திருக்கிறது. நானா விடுவேன். என் மகளின் சந்தோசத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டும்.கெட்ட கோபம் வரும் என்று அவளிடம் சொன்னதை அடிக்கடி மெய்ப்பிக்க வேண்டி வந்தது.
“சுசி எழுந்திரும்மா” என்றுதான் ஆரம்பிப்பாள்.
குழந்தையின் ஆழ்ந்த தூக்கத்தில் அது எட்டாமல் போகவே, “எழுந்திரு குரங்கே. மணி ஏழாச்சி. இனி எப்ப குளிச்சி கொண்டாடி, ஸ்கூலுக்கு அனுப்பி, எப்ப நான் ஆபீசுக்கு போறது.”
நிறைய தடவை செய்வது போல் இப்போதும் குறுக்கெ வருவேன்.குழந்தையிடம் அதிகம் அலுத்துக் கொள்ளாதே என்பேன்.எரிந்து விழுவாள்.
“உங்களுக்கென்ன. ஜோரா குளிச்சி,சாப்பிட்டு, போயிருவீங்க. நான்ல அவஸ்தை படணும்.”நானும் கத்துவேன். அவளும் விடமாட்டாள்.
குழந்தை மிரண்டுபோய் உட்கார்ந்திருக்கும்.அந்த சமயம் பார்த்துதானா பக்கத்து வீட்டு வாண்டு வரணும். சரியான வாலு. இன்னிக்கு என்ன புகாரோ...?
“ஆண்டி சுஜி இல்ல என் செடியை பிடுங்கி எறிஞ்சிடிச்சி.”ஷீலா சாப்பாட்டில் கல் அகப்பட்ட மாதிரி பதறுவாள். சமர்த்தாய் படித்துக் கொண்டிருந்த சுஜியை இழுத்து வந்து புகார் கொடுத்த வாண்டு ரசித்து சிரிப்பதுவரை மாறி மாறி அறைந்து.....இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு என்னால் எப்படி இருக்க முடியும்.
“ஏண்டி எருமை மாடே குழந்தையை இந்த அடி அடிக்கிறியே. தாங்குமா...”நான் மூர்க்கமாய் ஆரம்பிப்பேன்.
அவள் அதை கவனிக்க மாட்டாள். ‘பேக்கு முழிக்கிற முழியை பாரு. செய்றதை செய்திட்டு அப்பாவி மாதிரி.... பாரு இத்தனை அடிபட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வருதா. கல்லுளி மங்கன். எனக்குன்னு வந்து பொறந்திருக்கே.”
“ஏண்டி ஆவேசப்படற. இப்ப என்ன நடந்து போச்சி.”
“ நீங்க சும்மா இருங்க. புள்ளைன்னா ஒழுங்கா இருக்கணும்.ஸ்கூலுக்குப் போனா மானம் போகுது. ஒரு இழவும் படிக்க மாட்டேங்குதாம் . மக்கு மாதிரி முழிச்சிட்டு நிக்குதாம். ஏண்டி முறைக்கிற.... படி.... படியேண்டி... சவமே.... கழுதை உன்னை உதைச்சாதான் சரிவரும்.”
“படி படின்னு கத்தற ஒரு நாளாவது உட்காரவச்சி படிச்சி குடுத்திருக்கியா...”
“ஆமா நீங்க மட்டும் என்னவாம்”
“ நானா.. நான் நாள் முழுக்க ஆபீஸ்ல உயிரை விட்டுட்டு இங்க வந்து நிம்மதியா இருக்கலாமுன்னா.... “
“ நாங்க மட்டும் என்னா ஆபிஸ்ல ஓடிபிடிச்சி விளையாடிட்டா வாரோம்.”
இது இப்படியே வளர்ந்து பெரிதாகி, நாங்களேஅடித்துக் கொள்ள, சுஜி பசியோடு இருந்த இடத்திலேயே சுருண்டு தூங்கியிருப்பாள்.
எனக்கு இரவெல்லாம் தூக்கம் வராது. ஷீலா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்.
ன்று என் ஆபீஸ் நண்பனின் திருமணத்துக்கு போயிருந்த போதுதான் விபரீதம் உணர்ந்தேன்.விழாவுக்கு வந்திருந்த சுஜியையொத்த சிறிசுகள் எல்லாம் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க இவள் ஒரு பூந்தொட்டியின் முன் நின்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.எனக்கு முதல் முறையாக அது வினோதமாகப்பட்டது. ஓசையில்லாமல் அவள் பின்னே போய் நின்றேன்.
சுஜி செடியைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தாள்.” ஏய். என்னா முறைக்கிற. கண்னை நோண்டிருவேன். அசையாம நில்லு.. சொன்னா கேட்க மாட்ட. கொன்னுடுவேன்..”
நான் அதிர்ந்து போய் நிற்கிற வேளையில் அசையும் அந்தச் செடியை வேரோடு பிடுங்கி காலுக்கு கீழே போட்டு நசுக்க...வீட்டுக்காரம்மா ஓடி வந்தாள். “இது யார் புள்ள. இப்படி பண்ணிட்டதே குரங்கு....”
ஷீலாவும் வந்தாள். “சனியன். வந்த இடத்திலயும் கையை காலை வச்சிட்டு சும்மா இருக்கக் கூடாது. எழவு இதோட ஒரே தொல்லையாப் போச்சி.” என்ற போது ஓங்கி அவளை அறைந்து விட்டேன்.
“ வாயை மூடு.... எல்லாம் உன்னால வந்த வினைதான்.”
எல்லோரும் என்னை தரக்குறைவாகப் பார்ப்பதை உணர்ந்தேன். ஷீலா எதிர் பார்த்திருக்க மாட்டாள்.அவமானத்தில் குன்றி விட்டாள்.
ஆனாலும் என்ன. ஒரு குழந்தையிடம் இதமாக நடந்து கொள்ள முடியாத இவளை....
டாக்டர் என் ஆவேசத்தை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
” இப்ப சொல்லுங்க டாக்டர். இவளுக்கு மன நிலை சரியில்லைதானே”
“இப்படிதான் டாக்டர் இவர் கண்டதுக்கெல்லாம் கோபப்படறார். பொது இடத்தில எப்படி நடந்துக்கறதுன்னு தெரியலை. இவரோட நடவடிக்கையால குழந்தையும் பாதிக்கப்படுது.” ஷீலாவும் தன் பங்குக்கு சொல்ல..
விடுவேனா நான். “ குழந்தையை சும்மா சும்மா நச்சரிச்சா.. பாவம் அது என்ன செய்யும்..அதுக்க மனசும்...”
“நல்லயிருக்கே கதை. நீங்கதான்... ...” என்று தொடங்கி அவளும் கத்த
எல்லாவற்றையும் கொட்டி கவிழ்த்து நீண்டு கொண்டே போன சண்டைக்கு இடையில்தான் கவனித்தேன்.டாக்டரைக் காணவில்லை. சுஜியையும்.
பதறிக்கொண்டு எழுந்து வெளியே வந்து பார்த்தால்....அந்த கிறுக்கு டாக்டர் பொறுப்பில்லாமல் சுஜியுடன் தோட்டத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்.

Thursday, August 13, 2009

செய்தி

ஊருக்கு நெற்றிப் பொட்டு போலிருந்த அந்த கிணறுதான் எதிர்பட்டது.

"ஏண்டி களுத்தில ஒரு தேங்காபூமாலை போட்டிருந்தியே.எங்கடி கானோம்."

"எக்கா கேட்டியா.தீபாவளிக்கு எடுத்த புடவை சாயம் போகுதுக்கா.மலிவு விலைன்னு சொல்லி நம்மை ஏமாத்திட்டான்..."

"ஏ!காமாட்சி எப்படி வந்த.மாமியாகாரி வீட்ல நல்லா வச்சிருக்காளா?.."

"ஏ...இவளே...உன் மச்சான்காரன் வந்திருக்கானாமே..என்ன கொண்டு வந்தான்..."

-கலவையான இந்த குரல்கள் கேட்கவில்லை;கிணற்றடி வெறுமையாயிருந்தது.கப்பிகளின் உரசல் இல்லை.சப்தம் இல்லை...-

இவன் தயங்கி தயங்கி நடந்தான்.-பள்ளிக்கூட திண்ணையில் யாரும் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கவில்லை.ஆச்சரியமாயிருந்தது. எங்கே போனார்கள் எல்லோரும்...

"தம்பி இப்பதான் வர வழியா?"-கேட்டவனை இவனுக்கு அடையாளம் தெரிந்தது.பாண்டியன்.இவன் வீட்டு சலவைக்காரன்.

"படிப்பெல்லாம் முடிஞ்சிப் போச்சா?"

"இல்ல லீவ் விட்டுருக்காங்க."

இவன் பட்டணத்தில் 'பெரிய படிப்பு' படிப்பவன்.தன் அந்தஸ்த்துக்கு அதுதான் மதிப்பு என்பது இவனது அப்பாவின் கணிப்பு.


"ஊர் என்ன துடைச்சிப்போட்ட மாதிரி இருக்கு..."

" நடங்க தம்பி.வீட்டுக்கு போவோம்.எல்லாரும் அங்கதான் இருப்பாங்க..."-இவன் வீட்டில் கூடியிருக்கிறதென்றால் ஏதாவது பஞ்சாயத்து பண்ணுகிற விசயமாயிருக்கும்.

"ஏன். என்ன நடந்தது?"

"இந்த பய பழனிசாமி தெரியுமில்ல..அவனை மேல வீட்டுகாரர் ஆளை வச்சி அடிச்சிருக்கார்.பய இப்ப சாககிடக்கான்.."

-மேல வீட்டுகாரர் அந்த பகுதியின் பிரபலமான ஆளுங்கட்சிகாரர்.

"அவ்வளவு தூரம் அடிச்சானா..எதுக்காம்...?"

"மேல வீட்டுகாரர் மக கூட ஏதோ பேசினானாம்.சினேகமோ என்னவோ.."-வீடு வந்து சேர்ந்தபோது வீட்டின் முன் நிறைய கூட்டமிருந்தது.எல்லோரும் சத்தமாய் பேசிக் கொண்டிருந்தார்கள் .

"பயலுகளுக்கு கொஞ்சமாவது குடும்ப நிலை தெரியணும்...வெள்ளையும் சொள்ளையுமா இருந்தா உடனே லவ்வு... நாறபயலுவ.."

"அட இவனுக பாட்ட்டுக்கு லவ் பண்ண வேண்டியது.. நாமல்ல கிடந்து சாக வேண்டியதா இருக்கு. நாலு எழுத்து படிச்சதும் இழவுகளுக்கு தலகால் புரியாது போல இருக்கு..."

"என்னய்யா இது. நடந்ததையே பேசிட்டு இருந்தா எப்படி. இனி ஆக வேண்டியதை பார்ப்போம்."

"ஆக வேண்டியது என்ன.இவன் குடும்பத்தையே ஊரை விட்டு துரத்துங்கன்னு மேல்வீட்டுகாரரே சொல்லிட்டாரே."

"மேல் வீட்டுகாரர் கிழிச்சார்.யாருல அவன்.அறிவுகெட்ட மூதேவி.எவனோ என்னவோ சொன்னானாம்..இவனுகளை ஊரை விட்டு துரத்தணுமாம்.ஊரு என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா... நினச்ச நேரம் விரட்டறதுக்கு..."

"ஏ..சும்மா கிடப்பா..பிரசங்கம் பண்ணாம.."

" நீ சும்மாயிருல...அவர சொல்ல நீ யாருல..அவரு மவன் வயசு இருக்குமால உனக்கு."


"ஒருத்தன் உசிருக்கு போராடிக்கிட்டிருக்கான். நீங்க மாறி மாறி சண்டயா போட்டிட்டு இருக்கிய.." இவனது குரலுக்கு ' இதென்ன புது சத்தம்' என்று திரும்பி பார்த்தார்கள்.இவனை அடையாளம் கண்டு கொண்டவர்கள் லேசாக சிரித்து வைத்தார்கள்.


."லேய்.அண்ணாச்சி மவன் வந்திருக்காண்டோய்." -இவனது அப்பாவை அண்ணாச்சி என்றுதான் கூப்பிடுகிறார்கள்.
"சரி தம்பி என்ன சொல்ல வர.."
"இதுக்கு நாம நியாயம் கேட்கணும் அப்படிதானே."

"ஆமா அதுக்குதானே கூடியிருக்கோம்."

"அதுக்குமுன்ன பழனிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயாகனும்.பய செத்து போயிருவான் இப்ப.."

-அப்போதுதான் எல்லோருக்கும் அதை பற்றிய உணர்வு வந்தது. நேரம் இருட்டத் தொடங்கிய வேளையில் காரியங்கள் விரைவாக நடந்தன.வேலப்பனின் மாட்டு வண்டியில் பழனியை தூக்கிப் போட்டுக் கொண்டு,முக்கியமான சிலரோடு வண்டி புறப்பட்ட ஐந்தாவது நிமிடம் அந்த குரல் கேட்டது..."தீ..தீ.."-இவன் அதிர்ந்து போய் குரல் வந்த திசைக்கு திரும்ப தெரு கோடியில் ஓலை கூரையை சரேலென்று தீ தாவிக்கொண்டிருந்தது.

"மேல வீட்டுகாரர் வீட்டில மாடு மேய்ப்பானே அவன்தான் கொளுத்திட்டு ஓடினான் .. நான் பார்த்தேன்.."-கூட்டம் அவசரமாய் கலைந்து கிடைத்த பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு ஆற்றுக்கு ஓடி.. நீர் இறைத்து...மண்ணை அள்ளிப் போட்டு...

- நான்கு வீடுகள் சுத்தமாய் கருகி..ஒரு பெண் குழந்தை பாதி வெந்த பின் தான் தீ அணைக்கப்பட்டது.

-எல்லோருக்கும் இப்போது ஆவேசம் இருந்தது.-இதை விடக்கூடாது.-கோபங்களை சுமந்து கொண்டு மேல்வீட்டுகாரர் வீட்டுக்கு புறப்பட்டார்கள்.மாடுமேய்ப்பவன் அங்கேதான் இருப்பான்.இவனும் போனான்.

வாசலில் தடுத்தவன்,"ஐயா இல்லை.பேசாம திருப்பி போயுருங்க.." என்று உறுமினான்.

"அவர வரச்சொல்லு.இல்லேன்னா மாடு மேய்க்கிறவனை வெளிய விடு..""முடியாது.." என்று அவன் மறுத்துக் கொண்டிருக்கையிலே பின்னால் கார் ஹாரன் கேட்டது.காரிலிருந்து மேல்வீட்டுக்காரர் இறங்கினார்.

"என்னல..என் வீட்டு முன்ன உங்களுக்கு என்ன சோலி"-அவரை கண்டதும் இவனைதவிர மற்றவர்கள் ஆவேசமாய் திட்ட..'எதுக்கும் போலிஸில் ஒரு கம்பிளெய்ன்ட் கொடுத்திருக்கலாமோ' என்று இவனுக்குத் தோன்றியது.

" நாய்க்கு பிறந்த பயல்களா...என் வீட்டுக்கு முன்ன வந்து என்னையே பேசறேளா..உங்கள..." மேல்வீட்டுகாரர் முடிக்கும் முன் கூட்டத்திலிருந்து ஒரு செருப்பு அவர் மேல் வந்து விழுந்தது.


"எல்லோரும் கொஞ்சம் சும்மா நிக்கிறீங்களா.."இவன் குரலுக்கு யாரும் செவிமடுத்ததாகத் தெரியவில்லை.-மேல்வீட்டுகாரர் அந்த குரலுக்கு சட்டென்று திரும்பி,இவனைப் பார்த்ததும் உறுமினார். "இதுக்கெல்லாம் நீதான் காரணமா" என்ற புரிதலுடன் அவர் வீட்டிற்குள் நுழைய...-இவன் கூட்டத்தினரால் உதாசினப்படுத்தப்பட்டான்.

" இந்த மனுசன் தான் தீ வைக்க சொல்லி அனுப்பியிருப்பான்." ஜனங்கள் தீ வைத்தவனை பழிவாங்கும் வெறியுடன் முன்னேற...-பின்னாலிருந்து ஒரு குரல் எதிரொலித்தது. " போலீஸ்..போலீஸ் "-திரும்பி பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள்.

-மேல் வீட்டுகாரர் இப்போது வெளியெ வந்தார். " பாருங்க சார்.ஊரே திரண்டு வந்து என்னை அடிக்க வருது.எங்க '--' கட்சிகாரங்களுக்கு பாதுகாப்பே இல்லாமப் போச்சி.."


-கடைசி வாக்கியத்தில் அந்த காவல் அதிகாரி உஷரானார். கூட்டத்தைப் பார்த்து, "மரியாதையா ஓடிருங்க.." என்றார்.

-இவன் முன்னால் வந்து, ' சார். நீங்க நடந்த விஷயத்தை முதல்ல கேளுங்க சார்.."என்ற போது, "போலீஸுக்கே ஆர்டர் போடுறியா.ராஸ்கல்." என்று அடிவயிற்றில் படக்கூடாத இடத்தில் இடித்தார்.இவன் சுருண்டு விழுந்தான்.-

ஊரின் மொத்த ஜனமும் இப்போது முன்னோக்கி ஓடி வந்தது.-இன்ஸ்பெக்டர், நான்கு கான்ஸ்டபிள்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி,ஆளும் கட்சிக்காரருக்கு பாதுகாப்பு தராததால் ஏதும் நேர்ந்து விடுமோ என்று 'டென்சனாகி'....ஆங்கிலத்தில் ஆணையிட்டது நிறைய பேருக்குத் தெரியாது.அப்படியே நின்றார்கள்.அதன் விபரீதம் புரிந்த போது ஓட முடிந்தவர்கள் ஓடினார்கள்.

-மறுநாள் பத்திரிகையில்... ஜாதி கலவரம்..துப்பாக்கிச் சூடு..என்ற தலைப்பில் இந்த செய்தியை நீங்களும் படித்திருக்கக்கூடும்.
__________________

Wednesday, August 12, 2009

ஒருத்தீ

சரக்கென்று தீ பிடித்த மாதிரி பற்றிக்கொண்டது.அவ்வப்போது அரசல் புரசலாய் கேள்விப் பட்ட விசயம்தான்.ஆனால் நேரடியாய் யாரும் சொல்லிக் கேட்டதில்லை.
இப்போது சொர்ணாத்தா முகத்துக்கெதிரே வந்து சொன்ன போது,இவருக்கு ஆத்திரம் தீ போல பற்றிக்கொண்டது.
"உம்ம கிட்ட போய் இத எப்படி சொல்றதுனுதான் இருந்தேன்.ஆனா மனசு கேட்கலை." இப்படி சொர்ணாத்தா தொடங்கியபோதே யாரைப் பற்றி சொல்கிறாள் என்று இவருக்கு புரிந்தது.
"அவ சிலுப்பிகிட்டு என்னா ஆட்டம் போடுகா தெரியுமா?" கிழவி ஒருமுறை இவர் முகத்தை உற்று பார்த்து விட்டு தொடர்ந்தாள்."ஏண்டி அந்த பெரிய மனுசன் பேர கெடுக்கிறதுக்குன்னே வந்து வாய்சிருக்கியான்னு கேட்டா,என்ன சொல்லுகா தெரியுமா..பொம்பளை ஒருத்தி தனியா முன்னுக்கு வந்தா எனக்கு பொறுக்கலியாம்.சந்தேகப் பட்டே அவளை கொன்னு போடுகமாம்.உருபடமாட்டேன்னு வேற சாபம் போடுகா.வெட்டி போட்டிருப்பேன்.இழவை உம்ம முகத்துக்காகதான் பார்த்தேன்.சவம் என்னத்தை சொல்லுகது.அவ உம்ம மானத்தையே கப்பலேத்திருவா..."
கேட்க கேட்க இவருக்கு கோபம் தாறுமாறாய் ஏறியது."பாவி மவ. நிம்மதியா இருக்க விட மாட்டாளா இனியும் இத இப்படியே விட்டா சரிப்படாது.கேட்கிறதுக்கு ஆளில்லாத திமிரு..." தீர்மானித்து,ஆவேசமாய் எழுந்து தெருவில் இறங்க,தலை கிறுகிறுவென்று சுற்றியது.
இதே தெருவில் தான் அவள் தலைமுடியை பற்றியிழுத்து வீசி எறிந்திருக்கிறார்.புழுதியில் போய் விழுந்தவள்,அழுது புரண்டது...'இனியும் சொந்தம் கொண்டாடிக்கிட்டு இங்க வந்த உயிரோட போமாட்ட' என்ற இவர் மிரட்டலுக்கு நெஞ்சில் அறைந்து கொண்டு அவள் ஒப்பாரி வைத்தது...நேற்று நடந்தது போல் இருந்தது.
யோசேப்பு கிழவனை பெயர் சொன்னால் யாருக்கும் புரியாது. 'கமிஷன் புள்ளி ' என்றால் ' அந்த வள்ளு நாயா ' என்று பொடிசுகளும் அடையாளம் சொல்லும் அளவுக்கு பிரசித்தம்.இவன் சொத்தை அவனுக்கும், அவன் பொருளை இவனுக்கும் விலை பேசி கமிஷன் பார்க்கிற சாமர்த்தியசாலி.முதல் போடாத ' யாவாரி '
.
அன்று வழக்கம் போல அதிகாலை ஐந்து மணிக்கு இவருக்கு முழிப்பு வந்தது.எழுந்து திண்ணையில் உட்கார்ந்து முதல் வேலையாக பீடி பற்ற வத்துக் கொண்டார்.பிறகு இங்கிருந்தே எதிர் வீட்டுக்கு குரல் கொடுத்தார். " ஓய் பரசு.இன்னும் எவ்வளவு நேரம்தான் கிழவியை கட்டிபுடிசிட்டு கிடப்ப.எந்திரிச்சி வா."
இவர் குரலுக்கு எதிர் வீடு திமிலோகப்பட்டது.தெரு புரட்டிப் போட்ட மாதிரி விழித்துக் கொண்டது.கைத்தறி துண்டால் உடம்பை மூடிக்கொண்டு வந்த பரசு அலுத்துக் கொண்டார். "காலைலே உம்மோட பெரிய இழவாப் போச்சி.ஏன் இப்படி கேவலபடுத்தறேரு."
"ஆமா பெரிய பெரிய கேவலத்தை கண்டுகிட்டான்.அவசரமா சோலி இருக்கு.கிளம்பு." என்று குளத்தங்கரைக்கு 'ஒதுங்க' கிளம்பினார்.மேற்கே மண் சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கிய போதுதான் கவனித்தார்.எதிரே தூரமாய் கையில் பெட்டியுடன் இரண்டு உருவங்கள்.முதல் பஸ்ஸில் இறங்கி யாரோ வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டார்.பரசுதான் அடையாளம் கண்டு சொன்னார்."அண்ணாச்சி அது நம்ம நெல்சன் மாதிரியில்ல இருக்கு"
இவருக்கு திகைப்பாயிற்று.'அப்படியா.அந்த பய இந்த நேரத்தில எதுக்கு வரான்.' வாய் முணுமுணுத்தாலும் உள்ளுக்குள் கலக்கமாயிற்று.அருகே நெருங்க நெருங்க உறுதியாயிற்று.அவன் தான்.கூடவே முக்காடிட்ட ஒரு பெண்.இவர் முகம் சுழித்தார்.
பரசுதான் நெருங்கிப் போய் கேட்டார். "என்னா..இந்த நேரத்தில..அதுவும் சோடியா.யாரு இது."
"எல்லாம் வீட்டுக்கு போய் பேசுவம்"இவருக்கு எரிச்சல் உண்டாயிற்று.
"ஏன் இப்பவே சொன்னா என்னா"
"வேண்டாம் இதெல்லாம் நடு ரோட்டில வச்சி பேச முடியாது.வீட்டுக்கு வாரும் முதல்ல."
இவர் கோபத்தை அடக்கிக் கொண்டார்.விறுவிறுவென்று நடந்து போய் வீட்டு வாசலுக்கு குறுக்கே போய் நின்றார்.
"இவ யாருல.எதுக்கு இழுத்திட்டு வந்திருக்க.ரெண்டுல ஒண்ணு எனக்கு தெரியணும்" இவரது ஆவேச கூச்சலுக்கு தெரு கூடியதுநெல்சன் பதிலுக்கு கத்தினான்."அதான் இழுத்திட்டுதான் வந்திருக்கேன்.போதுமா?"
'கமிஷன் புள்ளி' குத்து பட்ட மாதிரி அதிர்ந்தார்.வேடிக்கை பார்த்த சனத்துக்கு சுவரசியம் கூடிற்று.'அட அப்படியா விசயம்' காது மூக்கு வைத்து செய்தி பரவிற்று.
'பொண்ணு வெள்ளையும் சொள்ளையுமா லட்சணமாதான் இருக்கா.அதான் மயங்கிட்டான்.'
'பின்னே.கேரளத்துக்காரியாச்சே.சொல்லவா வேணும்.'
"இந்த பயலுவள நம்பவே முடியலப்பா.வேலைக்குன்னு போறவனுவ பொண்டாட்டியோடல்ல வாறானுவ."
'இந்த முரடனுக்கு லவ் பண்ணக் கூட தெரிஞ்சிருக்கு பாரு."
ஆளாளுக்கு விமர்சிக்க இவருக்கு அவமானமாயிருந்தது.'பரதேசி பய சந்தி சிரிக்க வச்சிட்டான்ல.இனி வெளிய தலை காட்ட முடியுமா?இவனுக்காக லட்ச ரூபா சீதனத்தோட அந்தோனிமுத்து மகளைபேசி வச்சிருந்தேனே..இவனானாஇப்படி செய்திட்டு வந்து நிக்கிறானே..பாவி..அவ உடம்பில ஒரு பொட்டு தங்கமிருக்கா.எவளையோ பிச்சைகாரியை இழுத்திட்டு வந்து என்னையே எதுத்து பேசறான்.'
"வெளிய இறங்குல நாயே.அந்த மூதேவியோட வீட்டில கால வச்ச,தறிச்சி போட்டிருவேன்." இவரது கோபத்துக்கு தெருவே ஒரு கணம் நடுங்கியது.
அந்த பெண் மூடியிருந்த முக்காட்டை உத்றி விட்டு நெல்சனை நெருங்கினாள்."எனக்கு பயமாயிருக்கு.வேற எங்காவது போயிரலாம்."
கேட்ட இவருக்கு வெறுப்பு வந்தது.'அட சண்டாளி.வந்த கையோட பிரிச்சி கொண்டு போக பாக்கிறியா.கைகாரி'
"போ.போயிரு.அப்படியே எனக்கு பிள்ளை இல்லேன்னு வச்சிகிடுதேன்"
"ஏன்..எதுக்கு நான் போவணும். நெஞ்சை தொட்டு சொல்லு,உனக்கு நான் பொறக்கலேன்னு.அப்ப நான் போறேன்." நெல்சனும் மல்லுக்கு நின்றான்.
இவர் துணுக்குற்றார்.பாவி..பாவி..என்னவெல்லாம் பெசுகிறான்.இவனா பேசுகிறான்...இல்ல ..அந்த வேஷக்காரிதான் இவனை இப்படியெல்லாம் கெடுத்திருப்பா.
'அப்பனுக்கேத்த பிள்ளை' பரசு நினைத்துக் கொண்டார்.கமிஷன் புள்ளியை நெருங்கி காதை கடித்தார்." அண்ணாச்சி ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரை கீட்டிபுட்டீரு.இப்ப அதும் இதும் சொல்லி பயலை உசுப்பேத்திராதீரு.ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்திர போறான்.ஏதோ நடந்தது நடந்தாச்சி.இனி ஆக வேண்டியதைப் பாரும்."
"இனி என்ன என் கருமாதிதான் நடக்கணும்" இவர் முடிப்பதற்குள் நெல்சன் வாசலைத் தாண்டி உள்ளே போயிருந்தான்.'இனி என்ன.எல்லாம் ராசியாகிவிடும்' என்று ஒவ்வொருவராய் கலைய,இவர் ஏக்கம் பிடித்து போய் திண்ணையில் உட்கார்த்தார்.
நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை.இப்படி ஒரு பெண் வீட்டுக்குள் வளைய வருவதை எப்படி தாங்க முடியும்.இத்தனை நாள் கஷ்டப்பட்டு,தரகு வாங்கி சேர்த்த சொத்துக்களையெல்லாம் எங்கிருந்தோ வந்த நாய் அனுபவிப்பதா.
கனன்று கனன்று எரிந்த கோபம் அன்று நெல்சன் வேலைக்கு போயிருந்த வேளையில் வெடித்தது.அவளிடம் நேருக்கு நேர் போய் நின்றார். "சண்டாளி.நீ மனசுல என்ன நினைச்சிருக்க.ஊர் மேயுற கழுத.அஞ்சு பைசாவுக்கு வக்கில்லாத சவம்.உனக்கு வேற எவனும் கிடைக்கலியா.பாவி பெத்த புள்ளைய எனக்கு பகையாக்கிட்டியே. நீ உருப்படுவியா. நாசமா போவ.." கொட்டித் தீர்த்தார்.
முகம் வெளிற கேட்டுக்கொண்டிருந்தவள், "வேண்டாம்.என்னால யாருக்கும் தொந்தரவு வேண்டாம். நான் போறேன்." என்று முனகினாள்.இவர் ஆயாசமாய் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்.சற்று நேரத்தில் உள்ளே எதுவோ புரளும் ஓசைக்கு எட்டிப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உள்ளே..விட்டத்தில் கயிறு கட்டி அதில் அவள் கழுத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
பதறியடித்து எழுந்து ஓடினார். "பாவிமவளே. இதுதான் நீ தொந்தரவில்லாம போற லட்சணமா.என்னை செயிலுக்கு ஏத்தணும்னா நினைச்ச.." இவரது அலறலில் யாரெல்லாமோ வந்து எட்டிப்பார்த்தனர்.
விசயம் அறிந்து வந்த நெல்சன் மேலும் கீழுமாய் குதித்தான்."பாவி மனுசா.உனக்கு அவ என்னய்யா கெடுதல் செஞ்சா.இப்படி கொன்னு போட பார்த்தியே. நீயெல்லாம் ஒரு அப்பனா..சே..இனியும் இங்க இருந்தேன்னா விஷம் வச்சே கொன்னு போடுவ...போதும் நம்ம உறவு இன்னிக்கோட போதும்.."
இவருக்கு வாயடைத்து போயிற்று.நெல்சன் திரும்பி அவளை முறைத்தான்." நீ எதுக்கு சாகணும்.அடுத்தவன் நினைப்புக்கு ஏத்த மாதிரியெல்லாம் நாம வாழ முடியாது.தெரியுமில்ல.சாவ போறாளாம் சாவ. நீ என்னை நம்பிதானே வந்த.பிறகு என்ன.ராணி மாதிரி நான் காப்பத்த்றேன்.எதுக்கு பயப்படற."
மறுநாளே வாடகைக்கு வீடு பிடித்து தனியாய் கொண்டு வைத்தான். 'அந்த கிழவன் மூக்கில விரலை வைக்கிற மாதிரி நானும் ஆகிக் காட்டறேன் பாரு' வைராக்கியமாய் கறுவிக் கொண்டான்.கூலி கிடைத்தால் எந்த வேலைக்கும் போனான்.காசு பணத்திலே குறியானான்.
அடுத்த வாரத்தில் பெய்த அசுர மழையில் ஊரெல்லாம் ஒரே வெள்ளம்.குளம் நிரம்பி கரை உடைத்து விளைச்சல் பூமியை அடித்துக் கொண்டு போயிற்று.நெல்சனுக்கு மழையில் சும்மா கிடப்பது என்னவோ போலிருந்தது.அந்த சமயத்தில்தான் தண்டவாளத்தில் விழுந்த மண் சரிவை அகற்ற ஆள் தேடி வந்தார்கள்.கூலிக்கு ஆசைப்பட்டு அந்த மழையிலும் இவன் வேலைக்குப் போனான்.
ஆனால் துரதிஷ்டம்.அதுவே அவனது கடைசி வேலையாயிற்று.வேலை நடந்து கொண்டிருக்கையிலே மேலிருந்து மண் பிளந்து சரிய,உள்ளே மாட்டிக் கொண்ட மூவரில் இவனும் ஒருவனாகி,மாண்டே போனான்.
கமிஷன் புள்ளி இடி விழுந்த மாதிரி நிலைகுலைந்தார்.பிணத்தை தன் வீட்டுக்கே எடுத்து வந்தார். காரியங்கள் நடத்தினார்.பதறியடித்துக் கொண்டு வந்த அவளை தலைமுடி பற்றியிழுத்து தெருவுக்கு வீசினார்."இப்ப உனக்கு நிம்மதிதானே.ஓடுகாலி மவளே.இந்த மழையில கூட அவன நிம்மதியா இருக்க விடாம பணம்,பணம்னு பறந்தேல்ல.இப்ப என்னாச்சி.தொலைச்சி போட்டேல்ல... போ..அப்படியே ஒழிஞ்சி போ..என் மகனே எனக்கு இல்லேன்னு ஆன பிறகு நீ மட்டும் எதுக்கு?"
அவள் நடு வீதியில் புழுதியில் புரண்டாள்.இவர் மனம் இறுகி கல்லாகியிருந்தது."அவன் பொண்டாட்டின்னு உறவைச் சொல்லி இந்தப் பக்கம் வந்த...உசிரோட திரும்ப மாட்ட..ஆமா..."
யிற்று.ஆறாண்டுகளாய் எல்லா உணர்வும் அற்று நடைபிணமாய் வாழ்ந்தாகிவிட்டது.வெளியே இறங்கவே பிடிக்கவில்லை.வாய் திறந்து பேசவே வரவில்லை.அடங்கி போய் கிடந்தார்.
ஆனால் அவள்...அவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்.என் புருசனுக்கு இல்லாத வீடு எனக்கு மட்டும் எதுக்குன்னு கேட்டாளாமில்ல.கொழுப்பு.வீராத்தோப்பு ஓலையை குத்தகைக்கு எடுத்திருக்காளாமில்ல.ஆள் வச்சி ஓலை முடைஞ்சி,வெளியூருக்கெல்லாம் லாரியில அனுப்பி சம்பாதிக்கிறாளாமில்ல.அந்த கொழுப்பு.உள்ளூர எரிச்சல் கொண்டேயிருந்தார்.அது,இன்று சொர்ணாத்தா சொன்ன வார்த்தைகளால் மேலும் பற்றியெரிந்தது.
முதலில் சொர்ணாத்தா தனக்குத்தானே முனகுவது போலதான் தொடங்கினாள்."பொட்டச்சிக்கு சம்பாதிக்கிறோம்னு திமிரு. எவளெவளுக்கோ வேலை குடுக்கிறா. நான் கேட்டா மட்டும் ஒரு நா வேலை தர மாட்டேங்கா.ராங்கிகாரி."
பாராக்கு பார்ப்பது போலிருந்தாலும்,இவர் காதை தீட்டிக் கொண்டார்."சின்ன குட்டிகளைதான் வேலைக்கு வப்பாளாம்.அப்பதானே அங்க நடக்க கூத்த கண்டுகிட மாட்டாளுக. நானாயிருந்தா நாக்கபுடுங்கிற மாதிரி கேட்டுபுடுவேன்ல.ஆனாலும் உமக்குன்னு ஒரு மருமவ.சொல்லவே ஒரு மாதிரிதான் இருக்கு.ஆனா மனசு கேட்கலை."
"சொல்லி தொலையேன் கிழவி.ஏன் பெரிசா நீட்டி முழங்கிற."
"அட..என்னத்தை சொல்லுகது.எவனோ ஒருத்தன் மெட்ராசுக்கு ஓலை லோடு ஏத்திட்டு போவானாம்.அடிக்கடி அவன் இங்க வாரதும்,இவ அவனோட உரசுறதும்...சொல்ல எனக்கு நாக்கு கூசுதுப்பா.."
" நிறுத்து" கையமர்த்தினார்.அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.' இப்படியே இதை இத்தனை காலம் விட்டு விட்டது தப்புதானோ' என்று தோன்றியது.ஆவேசமாக எழுந்தார்.அவள் வீட்டை நோக்கி நடந்தார்.
ஊருக்கு மேற்கே ஒதுக்குபுறமாய் இருந்தது அந்த வீடு.வீட்டின் மின் மைதானம் போல் பரந்த வெற்றிடம்.கிளை விரித்த வேப்பமர நிழலில் பெண்கள் ஓலை முடந்து கொண்டிருந்தனர்.ஒருபுறம் வெளியூர் அனுப்ப அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓலைக் கீற்றுகள்.இவர் வரவைக் கொண்ட பெண்கள் விறைத்து போய் எழுந்தனர். வீட்டில்,கதவு பூட்டியிருந்தது.அவளைக் காணவில்லை.'வெளியே எவனோடோ ஊர் மேய போய்ட்டாளோ..இல்ல..பூட்டிட்டு உள்ள கிடக்காளோ'
சுற்றும் முற்றும் பார்வையால் மேய்ந்தார்.கட்டு கட்டாய் அடுக்கி இருந்த ஓலை கீற்றுகள் உறுத்தியது இவரை.'எல்லாம் இந்த வியாபாரத்தால் வந்த வினை.பொம்பளையா லட்சணமா வீட்டில இருந்தா இந்த கெட்ட பேரு வருமா.'ஆவேசத்தை தணிக்க ஒரு வழி கிடைத்தமாதிரி உணர்ந்தார்.ஓலை கட்டுகளை நெருங்கினார். பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டி எடுத்தார்.சரக்கென்று தீக்குச்சி கிழித்து ஓலைகட்டுகளின் அடியில் பற்ற வைத்தார்.தீ நிமிஷத்தில் திகுதிகுவென பற்றி உயரே எழுந்தது.அனல் பறந்து முகத்தைச் சுட்டது.
குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவள் ,தீ சுவாலையைப் பார்த்து பதறிக் கொண்டு ஓடி வந்தாள்.முற்றத்தில் இவரையும்,இவர் மூர்கத்தையும் பார்த்து நிலைகுலைந்து போய் நின்றாள்.
அவளைக் கண்டதும் இவர் உஷ்ணம் கூடியது." கண்டவன்கூட கூத்தடிக்கிறதுன்னா எங்காவது போய் தொலையேன்.கண்ணு முன்ன கிடந்து என் மானத்தை ஏன் வாங்கிற.மூதேவி."அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.சிலை மாதிரி அசையாமல் நின்றாள்.
"ஒழுங்கு மரியாதையா நடக்கலை.உன்னையும் இது மாதிரிதான்...மனசுல வச்சுக்க." விரல் நீட்டி எச்சரித்தார்.
வெட்ட வெளியில் எழுந்து பரவிய தீயைப் பார்த்து ஊர் ஜனம் ஓடி வந்தது."என்ன ஓய் நினைசிருக்கேரு.ஊருக்குள்ள தீ பரவிச்சின்னா என்ன ஆகும்னு நினச்சி பார்த்தீரா." கூட்டத்தில் ஒருவன் முகம் காட்டாமல் குரல் கொடுத்தான்.
"கிழவனுக்கு வயசு ஆக அக புத்தி போறதப் பாரு."
'சின்ன பயல்களுக்கு துணிச்சல் கூடிப் போச்சி.பொட்டச்சிக்கு வக்காலத்து வாங்க எல்லாவனும் வந்திருவானுங்க.' நினைத்துக் கொண்டார்.பரசு ஓடி வந்தார். நிலைமை கண்டு அவசரம் காட்டினார்."லேய் போங்கல..முதல்ல போய் தீயை அணக்கப்பாருங்கல. பொறவு பேசலாம்."அவர் துரத்தலுக்கு கவனம் திசைமாறி,தீயை அணைப்பதில் முனைப்பு காட்ட_
அவள் இவருக்கெதிரே வந்து நின்றாள்.அந்த களேபரத்திலும் அமைதியாய் தெரிந்தாள்."உங்க மேல எனக்கு துளிகூட வருத்தமேயில்ல. நீங்க எது செஞ்சாலும் அது என் நன்மைக்குதான்.எல்லார் மாதிரியும் அடுக்களைக்குள்ள நானும் முடங்கி கிடந்த்ரக் கூடாதுன்னுதானே துரத்தி அடிச்சீங்க.எப்படியோ கையை காலை அடிச்சி கரை ஏறிட்டேன். எதிர் நீச்சல் பழகிப்போச்சி.அதுக்கு உங்களுக்குதான் நன்றி சொல்லணும்"
அவள் பேசியது இவருக்கு புதிராயிருந்தது." நம்புறவனுக்குதான் கடவுள். நம்பாதவனுக்கு அது வெறும் கல்லுதான். தெரியுமில்ல.அப்படிபட்டவங்களுக்கு நான் நல்லவதான்னு நோட்டீஸ் போட்டு சொல்லிட்டிருக்க முடியுமா.சொல்லுங்க."இவர் முகம் திருப்பிக் கொண்டார்.
" அதென்னமோ பொம்பளைன்னா உடனே கல்லை தூக்கிட்டு துரத்த வராங்க. நாங்க தப்பு செய்துதான் சாதிக்க முடியும்னு ஒரு நினைப்பு."குத்தி காட்டுகிறாளோ.அலட்சியமாய் திரும்பினார்."யாரோ எக்கெடு கெட்டா என்னன்னு இத்தனை நாள் இருந்த மாதிரி ஏன் உங்களால இருக்க முடியலை.தெரியும்..எனக்கு தெரியும்"
இவர் திடுக்கிட்டார்."உங்களால என்னை வெறுக்க முடியலை.முழுசா ஒதுக்கி தள்ள முடியலை.என்னதான் வெறுக்கிற மாதிரி நடிச்சாலும் மனசால என்னை மருமகளா ஒத்துக்கிட்டிருக்கீங்க.அந்த உரிமை இல்லேன்னா என்னை கண்டிக்க வந்திருப்பீங்களா. போதும்... அந்த சந்தோசமே எனக்கு போதும்."அவள் பளிச்சென்று விலகி நடக்க, தீ எல்லாவற்றையும் பொசுக்கிக் கொண்டிருந்தது.

Thursday, August 6, 2009

போ... வராதே...

பாத்திமா அழகானவள்.அலுக்காத குரலில் அமெரிக்கன் இங்கிலீஷ் பேசுவாள்.உச்சரிக்கிறபோது அவளது உதட்டு சுழிப்பும்,இமை மூடலும் இன்றேறக்குறைய எல்லா ஆண்களையும் விபத்துக்குள்ளாக்கும்.அவள் சிரிப்பு ஒரு சுருக்கு கயிறு.
அதில் மாட்டிக் கொண்ட சந்திரமோகன் "உங்க குரல் இனிமையா இருக்கு" என்றான் முதல் நாள்.அடுத்த நாள் " நீ இனிமையா பேசற." என்றான்.
மூன்றாம் நாள், "ஐ லவ் யூம் பாத்திமா..." என்று கிசுகிசுத்தான்.

முப்பத்து மூன்று நாட்களுக்கு பிறகுதான் மைதிலிக்கு தவிப்பு அதிகமாகிப் போனது.சந்திரமோகனை காணவில்லை.இப்போதெல்லாம் இப்படி சொல்லிக்கொள்ளாமல் போய்விடுதல் சகஜம்தான் என்றாலும் இத்தனை நாட்களாய் போனதில்லை.ஏதோ விபரீதமாய் நிகழப்போகிறதோ?அந்த ஆரம்ப விரிசல் இப்போது நிதந்தரமாகி விடுமோ?

மோகனுக்கு லிப்-ஸ்டிக் போட்ட மனைவி வேண்டும்.ஸ்லீவ்லெஸ் அணிந்து'பார்ட்டி'க்கு வரவேண்டும். எல்லோரோடும் கைகுலுக்கி ஆங்கிலத்தை நாசி வழியாகப் பேசவேண்டும்.பளீரென்ற பல்வரிசையில் கிறங்கடிக்கிற மாதிரி சிரிக்க வேண்டும்.இப்படியாக கனவுகள்.

மைதிலியையும் அவள் கண்களையும் பார்த்தபோது சம்மதித்து விட்டான்.தாலி கட்டிய இரவில் கட்டிலில் இருந்த அவன் ஆங்கிலம் பேச,இவள் நாணத்திலும் பயத்திலும் உறைந்து போய் நின்றாள்.அவன் கனவுகளையும் ஆசைகளையும் சொல்லக் கேட்ட போது, ' என்னடா இது வம்பு ' என்றாகிவிட்டது இவளுக்கு.எப்படி மறுப்பது என்று குழம்பி கடைசியாய் திக்கி திணறி இவள் சொல்லிமுடித்த போது அவன் பார்த்த பார்வை 'அட பட்டிக்காடே' என்றது.ஆக ஒரு வெறுப்பின் விதை முதல் நாளே விதைக்கப் பட்டு விட்டது.

அப்புறம் அதுவே வாடிக்கையாக...."இன்னிக்கு உங்க பிரெண்ட்...பேருகூட..என்னமோ..ஆங்.ஜார்ஜாமே.. கண்ணாடி போட்டுகிட்டு..உங்களை கேட்டு வந்தாரு. நான்தான் உட்காரவச்சி காபியெல்லாம் குடுத்து அனுப்பினேன்."

சந்தோசப்படுவான் என்று நினைத்து இவள் சொல்ல சந்திரமோகனுக்கு முகம் கறுக்க கோபம்."ஆமா பெரிய கொடை வள்ளல்.கதவு தொறந்திருந்தா கண்ட நாய்களும் நுழையும்...காபி கொடுத்தாளாம்..காபி.."


"என்னங்க அவர் உங்க ஃபிரெண்டுனு..."

"மண்ணாங்கட்டி.பொறுக்கிபய.."

"பார்த்தா அப்படி ஒண்ணும் தெரி-"
'--யலீங்க' என்று சொல்லி முடிப்பதற்குள் 'சப்'பென்று கன்னத்தில் அறைந்தான்.ஒரு ஆண் மகனின் கையின் வலுவை அன்றுதான் முதன்முதலில் உணர்ந்த அதிர்ச்சி.பேச்சு எழாமல் பிரமை பிடித்த மாதிரி நெடுநேரம் உட்கார்ந்து.....

இப்படிதான் முப்பத்துமூன்று நாட்களுக்கு முந்தின இதெ மாதிரி ஒரு தினம்.காலையில் குழாயடிக்கு தண்ணீர் எடுக்க மைதிலி போனபோது, படுக்கையிலிருந்து எழுந்த சந்திரமோகன் கத்தினான்."மைதிலி..மைதிலி.."

பதில் வராமல் போகவே எழுந்து வந்தவனுக்கு,குழாயடியில் இவன் யாருடனோ பெசிக்கொண்டிருப்பது பார்வையில் பட-ஆவேசமான ஆவேசம்.இறங்கி போய் தலைமுடியை பற்றியிழுத்து, பாதசாரிகளும்,கூட்டமாய் பெண்களும் பார்த்துக் கொண்டிருக்க ,முதுகில் ஓங்கி அடித்தான்.

"மூதேவிக்கு காலையிலே பெரிய வேலை.குடத்தையும் எடுத்திட்டு வந்திட்டா.பல் தேய்க்க பிரஸ்ஸை எடுன்னா..ஆளை காணலை.."மைதிலிக்கு அவமானமாயிருந்தது.சே!என்ன கீழ்தரமான மனிதர்."அப்பவே கட்டில் பக்கம் எடுத்து வச்சிட்டேன்" என்று பொங்கி வரும் அழுகையை அடக்கமுடியாமல் இவள் சொல்ல....

"சே.வீடா இது. நரகம்.காலையிலே அழுது வடிஞ்சிகிட்டு..உயிரை எடுத்திரும்பா..சனியன்."

இப்படியாக ஒரு கலவரத்தை ஏர்படுத்தி விட்டு போனவன் சாயுங்காலம் வரும்போது முற்றிலும் மாறியிருந்தான்.மகனை இழுத்து வைத்து பாடம் சொல்லிக் கொடுத்தான்.இவளுக்கு கூடமாட ஒத்துழைத்தான். உறங்குகிறபோது கிசுகிசுப்பாய் கூப்பிட்டான்."மைதிலி.."

"பக்கத்திலதானே இருக்கேன் சொல்லுங்க.""ஸாரிடா.முரட்டுதனமா நடந்துட்டேன் இல்ல..."மைதிலிக்கு துக்கம் வந்தது."பைப் கனெக்சன் கேட்டிருக்கேன்.வந்ததுன்னா பிரச்சனை இல்ல.அப்படியே ஒரு கார் வாங்கிட்டம்னா நானும் லேட்டா கிளம்பி ஆபிஸ் போனா போதும்ல..வாங்கிடவா.."

"தேவைன்னா வாங்குங்க..எதுக்கு என்னை கேட்டுகிட்டு..."

"வாங்கிடலாம் ஆனா கொஞ்சம் பணம்...உங்க அண்ணன்கிட்ட கேட்டு..."மைதிலி முறைத்தாள்."...அதுகூட வேண்டாம்.உன் நகையில கொஞ்சம் எடுத்தாலே போதுமே. என்ன சொல்ற.."இவளுக்கு புரிந்தது.இதற்குதான் இந்த வேட்டை நாய் நாக்கை தொங்க போட்டுக்கொண்டிருந்ததோ.

"அப்படி ஒரு கார் நமக்கு தேவையில்ல."பயந்து பயந்துதான் சொன்னாள்.

"பாத்தியா பாத்தியா பேச்சு மாறுது.சும்மா பீரோலதானே வச்சிருக்க. அவசரத்துக்கு உதவலேன்னா அது எதுக்கு.."

"அவ்வளவு பெரிய அவசரமா இப்போ வந்திருக்கு."சந்திரமோகன் அதற்குமேல் பேசவில்லை.'உங்கிட்ட பேசி பிரயோஜனமில்லை' என்றபடி படுத்தான்.இவளுக்கு பரிதாபமாககூட இருந்தது.'வீணாக அடம் பிடிக்கிறேனோ'

உறங்குமுன் " நாலு மணிக்கு எழுப்பி விடு.மெட்ராஸ் போனும் " என்று சொல்லியதை நம்பி, எழும்பி இவள் பார்த்தபோது அவனையும் காணவில்லை.பீரோவிலிருந்த நகைகளையும் காணவில்லை.

ந்திரமோகன் அலுவலகம் மதிய உணவு நேரத்தில் கலகலப்பாக இருந்தது.டெஸ்பாட்ச் ரங்கசாமியிடம் ஆல்பர்ட் கேட்டான்..." அப்புறம்" கதை கேட்கும் ஆர்வத்தோடு குரல் வந்தது.

" அப்புறம் என்ன.இவனை அவ மயக்கி கல்யாணமும் பண்ணிகிட்டா. நம்ம பாத்திமாவை தெரியாதா..அவ எப்பவும் போல அப்படி இப்படிதான் நடப்பா.இவனுக்கு பொறுக்க முடியலை.சொல்லிப் பார்த்தான். கேட்கலை. கண்டிச்சான்.அவ போடான்னு சொல்லிட்டு போயிட்டா."

"அய்யய்யோ.."
"அதுக்கு ஏன் வருத்தபடற.அந்த பொண்ணு மைதிலிய நினைச்சாதான் பாவமா இருக்கு.இந்த பாவிபய அவ நகைகளைகூட எடுத்திட்டுபோய் அவளுக்கு குடுத்திருக்கான் போல.. நே த்துதான் பார்த்தேன்.எல்லா விசயத்தையும் சொல்லி கேஸ் போடும்மான்னு சொல்லியிருக்கேன்."

ன்று காலைசன்னலில் கண்ணாடி வைத்து தலை வாரிக்கொண்டிருந்த மைதிலிக்கு தெருவில் தயங்கி தயங்கி நடந்து வரும் சந்திர மோகன் தெரிந்தான்.நெஞ்சு படபடத்தது. நாலு பெரை கூப்பிட்டு அடிக்க சொல்லலாம் போல தோன்றியது.சர்வசாதாரணமாய் வாசல் கடந்து நுழைந்தவனை " நில்லுங்க அங்க" என்று அதிர கத்தினாள்.

அவன் வியப்போடு "மைதிலி" என்றான்.

"என்ன வேணும் உங்களுக்கு.எதுக்கு வந்தீங்க இப்ப.உயிரோட இருக்கமான்னு பார்க்கவா."

"என்னை மன்னிச்சிடு மைதிலி."

"அதனால என்ன லாபம். நானும் இன்னொருத்தன் கூட போயிட்டு ஆசையெல்லாம் தீர்ந்து அலுத்து போய் வந்து மன்னிச்சிடுங்கன்னு சொன்னா ஏத்துகிடுவீங்களா.கேட்கிறேன் வேசிதனத்தை ஆம்பிளைங்க செய்தா மட்டும் சரியாயிடுமா என்ன."

"என்னடி நீ ரொம்பதான் பேசிட்டு போற..விட்டேன்னா மூஞ்சி பேந்திரும்.."

"ஐயா உங்களோடு பேசணும்னு யாரும் உங்களை வருந்தி அழைக்கலை. அப்படியே பேசாமா வந்த வழியே போயிருங்க."

"என்ன சும்மா துரத்துற. நான் உன் புருசண்டீ.."
"வெட்கமாயில்ல உங்க வாயால அத சொல்றதுக்கு.எந்த முகத்தோட உன் கூட இனி வாழ முடியும். அடுத்தவன் புருசன்கூட இருக்கிற மாதிரியில்ல எனக்கு தோணும்.என்னால அது முடியாதுப்பா.போயிட்டு வாங்க.வேண்டாம் போயிட்டு.. வரவேண்டாம்" கதவை இழுத்து சாத்திக் கொண்டாள்.

Tuesday, August 4, 2009

கூட்டுப் புழு

ப்பா! பதினாறு வருடங்கள்.

இந்த அழுக்கடைந்த அடுக்களையே உலகமாகி, அதன் துர்நாற்றமே சுவாசமாகி, அதன் இருட்டே வாழ்க்கையாகி.... அந்த கொடிய நரகம் இன்றோடு முடிந்து விடப் போகிறதா?

சே! என்ன கேவலமான அடிமை வாழ்க்கை.இந்த ஊர் எப்படி இருக்கும்.அதன் தெருக்கள்.மனிதர்கள்,அவர்கள் வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கும் என்று எதுவுமே தெரியாத சிறை மாதிரி.....


பார்க்க வேண்டியவைகள பார்க்கக் கூடாமலும்,பேசத்தெரிந்தும் யாருடன் பேசுவது என்று தெரியாமல் மௌனத்தை சேமித்து..... இதெல்லாம் முடிந்து விடப் போகிறதா.அப்பப்பா.... இன்று ஒரு நாளையும் சகித்துக் கொள்ள வேண்டும். பிறகு.....வள் மூன்று வயதிலேயே இந்த வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து விட்டவள். வீட்டுக்காரம்மா கதைகதையாய் சொல்வதிலிருந்து தெரிந்து கொண்டதுதான் இது.புருசனால் கைவிடப் பட்ட இவளது தாய்- அதாவது இந்த வீட்டின் பழைய வேலைக்காரி – இவளை அனாதையாய் இங்கே விட்டுவிட்டு ஓடிவிட.....“அந்த கழிசடை போனதுபோல இந்த எழவும் எவன் கூடயாவது ஓடிப்போயிடக் கூடாதே”-என்று பக்கத்து வீட்டுக்காரியிடம் பேசிப் பேசியாவது அந்த எஜமானி இவளை பராமரித்து வந்திருக்கிறாள்.அவளுக்கு சம்பளம் இல்லாத ஒரு வேலைக்காரி கிடைத்துவிட்ட ஆதாயம்.


இந்த வீட்டுக்கார அம்மாவின் குணமே அலாதியானது.“ஏண்டி நாயே.வென்னீர் போடச் சொன்னா அங்க எவனை பார்த்து இளிச்சிட்டு நிக்கிற...” என்று சொல்கிறவள் பிறகு ரகசியமாய் கூப்பிட்டு, “ அந்த பயலுக ஒரு மாதிரிடி.. . நீ கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடந்துக்க.” என்று தாய்க்குரிய பரிவுடன் சொல்லி வைத்திருக்கிறாள்தான்.


ஆனால் கேட்கிறபோதே மனசொடிந்து போகிற மாதிரியான அவளது பேச்சு சட்டென்று வெறுப்பைதான் தருகிறது.“உங்கிட்ட எத்தனை தரம்டி சொல்றது அடுக்களையை விட்டு வெளியே வராதேன்னு... மயக்கிடாதேடிம்மா.... என் பிள்ளைகளை....”இவளுக்கு இதயத்தை தேடி எடுத்து நெருஞ்சியால் குத்திய மாதிரி இருக்கும்.

அன்றொரு நாள்.கோவில் திருவிழாவில் நடன நிகழ்ச்சி நடந்த போது, “மைதிலி வீட்டை பத்திரமா பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு அனைவரும் போய்விட .... இவளுக்கும் ஆசை வருகிறது. அதென்ன டான்ஸ்..நாமளும் பார்த்தாதான் என்ன.... வீட்டைப் பூட்டிக்கொண்டு அவர்களுக்கு பின்னாலேயே சென்று....ஆட்டம் பார்க்க பார்க்க சந்தோசமாயிருக்க அதிலேயே ஒன்றிப்போனாள். எல்லாம் முடிந்து மனமில்லாமலே வீடு வந்த போது வாசல் நடையில் எல்லோரும் விழித்துக் கொண்டு காத்திருக்க.... பகீரென்றாகிப் போனது. பழுக்கக் காய்ச்சிய கம்பி அன்று ஏற்படுத்திய தழும்பு தொடையில் இன்னும் இருக்கிறது.

இப்படி இவள் வாழ்வின் இருண்ட பகுதியையே பார்த்து பழக்கப்பட்டவள்.எங்கு போனாலும் கண்ணைக் கட்டி கடிவாளம் மாட்டப்பட்ட பிராணி மாதிரியான பிரமை....

சமீபகாலமாகத்தான் விடியற்காலையில் வரும் பால்காரனின் சைக்கிள் மணியோசையில் ஒரு நம்பிக்கை பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது.


பால் வாங்குகிற நிமிட நேரத்திலேயே இவளுக்காக அவன் நிரம்ப கவலைப்பட்டான்.” நீ எப்படிம்மா இந்த நரகத்துக்குள்ள வாழற.....” என்று வியந்திருக்கிறான்.


“ நீ இருக்கிற அழகுக்கும் திறமைக்கும்,இங்க கிடந்து அவதிபட வேண்டிய அவசியமில்லை.” என்று உருகியிருக்கிறான்

“உன்னை எப்படி நடத்துறதுன்னே இவங்களுக்கு தெரியலை.”என்றெல்லாம் சொல்லியவன் கடைசியில் கேட்டே விட்டான் அவள் எதிர்பார்த்ததை.“ நீ என்கூட வந்திடறயா..... எங்காவது போய் பிழைச்சுக்கலாம்”


இவளுக்கு ஜிவ்வென்று எங்கோ பறப்பது மாதிரி உணர்வு.“ நான் ஒண்ணும் வசதி படச்சவனில்லை ஏதோ கிடைக்கிறதை வச்சு சாப்பிடலாம்....இப்படி நீ தனியா கிடந்து தவிக்க வேண்டியதில்லை. என்ன சொல்ற....” என்ற போது இயந்திரத்தனமாய் இவள் தலையாட்டிவைக்க.....அவர்கள் ஓடிப்போக இன்றைய இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இவளுக்கும் இந்த துக்கங்களையெல்லாம் சகித்துக்கொண்டு,வெளி உலகே மறந்து போய்,மற்ற மனிதர்களோடு தானும் சிரிக்க முடியாமல், அதட்டலும் அதிகாரமுமே வார்த்தையாக..... வேண்டாம்.... இந்த சிறைவாழ்க்கை வேண்டாம். இதையெல்லாம் உதறிவிட்டு எங்காவது ஓடி விடுதலே உத்தமம் என்கிற மனநிலை வந்திருந்தது.


“ சுவத்தில என்னடி சினிமாவா காட்டுறாங்க.வாய பிளந்து பாத்திட்டிருக்க.... ஸ்கூல்ல இருந்து குழந்தைக வர நேரமாச்சே.ஏதாச்சும் சாப்பிட செய்தியா முண்டமே....”வீட்டுக்காரம்மா இப்படி சொல்லிவிட்டு சும்மா இருக்கமட்டாள்.வழக்கம் போல தலையில் ‘ நறுக்’கென்று குட்டுவாள்.அல்லது பின் புஜத்தில் அழுத்தமாய் கிள்ளுவாள்.அதன் வலி மூளைக்குத் தாவி குபுக்கென்று கண்ணீர் திரளும்..இன்று அந்த அழுகை வரவில்லை.நான்தான் இன்று இரவு போய்விடப் போகிறேனே.அப்புறம் உங்களால் பேச முடியாதே.என் ராஜகுமாரனோடு சுதந்திரமாக உலவப் போகிறேனே என்ற மகிழ்ச்சி..


இரவு ‘தடக் தடக்’ என்று அடித்துக் கொள்ளும் மனசோடு அடுக்களையின் ஈரமில்லாத ஒரு ஓரத்தில் படுத்துக் கிடந்தாள்.


சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே ‘விசில்’ சத்தம் கேட்டது. அவன்தான்.....அந்த பால்காரன் தான்.


ஏற்கெனவே சுருட்டி வைத்திருந்த துணிமூட்டையை எடுத்துக் கொண்டு பின்புற இருளில் கலந்தாள்.சிறிது தூரம் நடந்ததும் அவன் நிற்கிற இடத்துக்கு வர முடிந்தது.


“யாரும் பார்க்கலியே” அவன் அவசரமாக கேட்க, தலையசைத்தாள்.பதினாறு வருட கொடுமை இப்போதே முடிந்து விட்ட சந்தோசம் இவளுக்கு....


சற்று தூரத்தில் ஆட்டோ ஒன்று காத்திருக்க உள்ளே அமர்ந்தார்கள்.அது ஏதோ ஒரு தொலைதூரத்திற்கு புறப்பட.....அவள் குலுங்கி குலுங்கி அழுதாள். அவளுக்கே காரணம் புரிய வில்லை....துக்கமா..... சந்தோசமா.....


“ என்னம்மா ஆச்சி.ஏன் அழுவுற.....” என்றவன் ,” இந்தா இந்த மாத்திரையை போட்டுக்க. உடம்புக்கு தெம்பா இருக்கும்.” என்று நீட்டினான்.

சாப்பிட்ட நாலாவது நிமிடத்தில் அந்தரத்தில் பறப்பது போல இருந்தது. அடுத்த இருபதாவது நிமிடத்தில் நினைவுகள் அற்று போயின.

அடுத்த நாள் காலையில் ஒதுக்கு புறமாயிருந்த பஸ் நிலையத்தில் கிடந்தவளை பார்த்து ‘இந்த பிச்சைக்காரி ஏன் இத்தனை அலங்கோலமாக கிடக்கிறாள் ‘ என்றுபடி ஒதுங்கி போனவர்கள் பலர். வேடிக்கை பார்த்தனர் மற்றும் சிலர்.
________________

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More