Thursday, June 25, 2009

மரணத்தின் மரணம் எப்போது நிகழும்?


அலுவலகத்துக்கு புறப்படுவதற்காக வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு வெளிவரும்போதுதான் எதிர் வீட்டிலிருந்து அந்த குரல் கேட்டது.

“மாமா... மாமா... டாட்டா” டாட்டா என்பது தாத்தா என்பதாகக் கேட்டது. மழலை மொழியில்,குறுகுறு சிரிப்புடன் அந்த குழந்தை,கேட்டில் ஏறி குதித்துக் கொண்டிருந்தது.

குழந்தை என்றாலே கொள்ளை பிரியம் எனக்கு.அதிலும் அறிமுகமில்லாமலே சிரிக்கிற குழந்தையிடம் ஈர்ப்பு இன்னும் அதிகம்.தமிழ் தெருவில் குழந்தைகளே என் அபிமான நண்பர்கள்.அவர்களோடு உரையாடுதலே பிடித்தமான பொழுதுபோக்கு.விழாக்களில், நிகழ்ச்சிகளில் குழந்தைகளை தேடிப்பிடித்து பரிச்சயம் செய்து கொள்வதில் அலாதி பிரியம்.

விடுமுறை நாட்களில் என் நண்பர்கள் எல்லோரும் விளையாட வந்து விடுவார்கள்.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயல்பாய் இருக்கும் குழந்தையை அவ்வேளையில் என்னைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

நண்பர்களில் ஒருவரைக் கொஞ்சினால் மற்றவருக்கு கோபம் வரும்.உதட்டை பிதுக்கிக் கொண்டு, ஓரமாய் உட்கார்ந்து, தலை கவிழ்த்து, கண்ணை மட்டும் அடிக்கடி உயர்த்தி நம்மை பார்த்துக் கொண்டு, நாம் பார்த்தால் தலையை வெட்டிக்கொண்டு செல்லச் சிணுங்கலுடன்.. ... அட..அட..அட.. உடனே அவரைத் தூக்கி ‘என் செல்லமே’ என்று கொஞ்சாத வாழ்க்கையே பாழ்.

எதிர் வீட்டுக் குழந்தை ‘மாமா’ என்ற போதும் அப்படி ஒரு உணர்வுதான் தோன்றியது.

இதற்கு முன் அந்த குழந்தையை பார்த்ததில்லை.எதிர் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்திருக்க வேண்டும். உணவு ஊட்டும் தாய்க்கு போக்கு காட்டிக் கொண்டு ‘கிரில் கேட்’டில் தொங்கிக் கொண்டிருந்தான்.வெற்றுடம்பில் ஜட்டி மட்டும் போட்டிருந்தான்.கம்பி வளைவுகளுக்குள் காலூன்றி,வலக்கையால் மேல் கம்பியில் தொங்கி,மறு கை அசைத்து,வாயில் உணவு மிச்சங்களோடு ஈஈஈஈ... என்று புன்னகைத்ததில் என் மனசு குளிர்ந்து போயிற்று.

பதிலுக்கு நானும் கையசைத்ததில் குதித்து துள்ளிக் கொண்டே ஓடினான். அவன் தாய் பின்னாலேயே துரத்தினாள்.”ஓடாதடா செல்லம்.. கீழே விழுந்துடுவேடா”

அவன் தாயைப் பார்த்து கைகொட்டினான். “என்ன பிதிக்க முதியாதே” என்றான்.

மனசே இல்லாமல் கிளம்பி போனேன்.

இந்த வயதில் ஒரு நட்பை உருவாக்கிக் கொள்ள அவனுக்கு சுலபமாய் முடிகிறது. சந்தோசிக்க அவனுக்கு காரணமே வேண்டியிருக்கவில்லை.

சிறுவயதில் என் மகன் கேட்டது நினைவிருக்கிறது. “அப்பா மண் புழு என்ன சாப்பிடும். எப்படி சாப்பிடும். அதுக்கு தலை எந்தபக்கம் வால் எந்தபக்கம்” அடுக்கடுக்காய் கேள்விகள்.

பார்த்தவை தொடர்பாய் இப்படி யோசிக்கத் தோன்றியிருக்கிறது அந்த வயதில். அற்ப புழுதானே என்று நாம் யோசிக்காமல் விட்ட விசயங்கள் அவர்கள் கற்றுக் கொள்ளும் பாடமாயிருக்கிறது. மண் புழு பற்றி நான் தேடிப் பிடித்து தெரிந்து கொள்ள முயன்றது அதன் பிறகுதான்.

இப்படி நாம் விடைகளையே தேடிக்கொண்டிருக்க..... அவர்கள் அடுத்த கேள்விக்கு போய் விடுகிறார்கள்.அவர்கள் கேள்வியில்தால் விடைகள் விடுபட்டு வெளியே வருகின்றன.ஞானம் உடைபட்டு நறுமணமாய் எங்கும் பரவுகிறது.

மாலை அலுவல் முடிந்து வீடு வந்த போது தெரு பரபரப்பாயிருந்தது. கவலை தோய்ந்த முகங்களால் தெரு நிரம்பியிருந்தது. எதிர் வீட்டில் ஒரே கதறல் சத்தம்.பதட்டத்துடன் விசாரித்ததில் கிடைத்த தகவல் என்னை நொறுக்கிப் போட்டது. நிலைகுலைந்து போனேன்.அப்படியே பக்கத்து வீட்டு படியில் உட்கார்ந்து விட்டேன்.

திருமண நிகழ்ச்சிக்கு போய் விட்டு காரில் வரும்போது விபத்தில் சிக்கியதாம் எதிவீட்டு குடும்பம். மற்றவர்கள் காயங்களோடு தப்பிக் கொள்ள, முன் இருக்கையில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த அந்த குழந்தை... அந்த குழந்தை மட்டும்.... உயிரிழந்த செய்தி கலங்கடித்துவிட்டது. நெஞ்சு பாரமாயிற்று.

காலையில் மான்குட்டி போல துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த குழந்தை மாலையில் பேச்சு மூச்சற்று கிடப்பதைப் பார்க்க சகிக்க முடிய வில்லை. ‘என்னை பிதிக்க முதியாதே’ என்று அப்போது சொன்ன வார்த்தைகள் இப்போதும் காதில் ஒலிப்பது போல்......


நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு இரை தேடி அலையும் மரணத்திற்கு குழந்தைகள்தான் அகப்பட்டதா? இப்படி குதறி எடுத்து விட்டதே!.

இம்மாதிரி நேரங்களில்தானே நமக்கு கேட்கத் தோன்றுகிறது. மரணமே உன் மரணம் எப்பொது நிகழும்?

Sunday, June 21, 2009

சமையலறையும் அவளும்

வீட்டில் காலடி வைத்ததும் வழக்கமாய் எதிர் கொள்கிறவளைக் காணவில்லை.

சோர்வாய் போய் நாற்காலியில் விழுந்தான்.எதிர் நாற்காலியில் கால் நீட்டி,பின்கழுத்தில் கை செருகி மல்லாந்து கூரையை வெறிக்க...இந்நேரம் காபி வந்திருக்க வேண்டும்.ஆனால் வரவில்லை.

இவனுக்குள் கோபம் எழுந்து புரண்டு படுத்தது.

"யேய்"என்று கூவினான்.பதிலில்லை.எரிச்சலாயிற்று.எழுந்து அடுக்களை வரை வந்து எட்டிப்பார்த்தான்.அங்கேதான் சதா இருப்பாள் என்ற கணிப்பு பொய்த்தது." சே.முழுமாடு வீட்டை தொறந்து போட்டுட்டு எங்கதான் போய் தொலைஞ்சதோ."

எரிச்சலாய் உடைமாற்ற திரும்பியபோதுதான் கவனித்தான்.கட்டிலில் படுத்திருந்தாள்.இழுத்து தலை வழியே மூடிக் கொண்டிருந்தாள்.தூங்குகிறாளோ.

'எவ்வளவு கொழுப்பு.இங்கே ஒருத்தன் செத்து போய் வந்தது தெரியாத அளவுக்கு அப்படியென்ன தூக்கம்.'

வேகமாய் அருகே போய் போர்வையை விலக்கினான்.
அவள் படக்கென்று விழித்துக் கொண்டு எழப் போனாள்.முடியாமல் சுருண்டு விழுந்தாள்."லேசா உடம்பு வலிக்குதுன்னு படுத்தேன்.எப்படியோ தூங்கி..." என்று ஆரம்பித்தவள் வாய் நடுங்கியது.போர்வையை இழுது மூடிக் கொண்டாள்.

"என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா"

நெருங்கி அவளைத் தொட்டு பார்த்து திடுக்கிட்டான்.கொதித்தது.

'இழுத்து மூடிட்டு கிடந்தா எல்லம் சரியாயிடுமா.மருந்து கிருந்து வாங்கி தின்னு தொலைக்க வேண்டியதுதானே.'

ஏனோ அந்த சூழ்நிலை வெறுப்பேற்றியது.

இந்த பதினோரு வருஷமாய் நோய் வந்து அவள் படுத்ததில்லை.இவளுக்கெல்லாம் நோய் வருமென்று நினைத்து கூட பார்த்ததில்லை.இப்போது இப்படி கிடப்பது கலக்கமூட்டியது. இவளை எப்படி கவனிப்பது.உடனே சரியாகிவிடுமா.மருந்து மாத்திரை என்று செலவழிக்க வைத்து விடுமா.எழுந்து நடமாடுவதுவரை வீட்டு வேலைகள்...?கேள்விகள் விஷ்வரூபமாய் எழுந்து பயமுறுத்தின.

மில்லின் இயந்திர கோளாறுகளை சுலபமாய் பதட்டமில்லாமல் சரிசெய்ய முடிகிறது.இன்று முழுவதும் உற்பத்தி நிறுத்திய இயந்திர கோளாறு,இவனால்தான் சரிசெய்யப்பட்டது.அந்த உழைப்பின் களைப்பும்,மன உளைச்சலும் சேர்ந்து இப்போது தலை வலித்தது.ஒரு காபி குடித்தால் நலமாயிருக்கும்.அவள் படுக்கையிலிருந்து ஏதோ முனகுகிறாள்.கிட்டே போகவே எரிச்சலாயிருந்தது.

ஸ்கூல் முடிந்து வந்த பையன் "அம்மா...அம்மா.."என்று வாசலிலிருந்தே கூவினான். புத்தகப்பையை தூக்கி எறிந்தான்.

"ஏண்டா தெருவில இருந்தே கூப்பாடு போடுற."

இந்த நேரத்தில் அப்பா வீட்டில் இருப்பதை ஆச்சரியமாய் பார்க்கிறான் மகன்.

"இல்ல..வந்து..அம்மாகிட்ட..."

"ஏன் அப்பாகிட்ட சொன்னா செத்தா போயிடுவ.." இவன் கோபத்துக்கு பையன் பயந்தான்." எனக்கு பசிக்குது.." என்றான்.

ஏதாவது நொறுங்கு தீனி வாங்கி டப்பா டப்பாவாய் வத்திருப்பாள்.எங்கேதான் கொண்டு வைப்பாளோ.இவன் கண்ணுக்கு தென்படவேயில்லை.

"அதெல்லாம் பீரோவில இருக்கும்பா.." என்று உள்ளே திரும்பிய குழந்தை அம்ம கிடப்பதைக் கண்டு பதைத்தான். "ஏம்மா" என்று அருகில் போய் கட்டிக் கொள்ள...."ஏயப்பா இப்படி சுடுது.காய்ச்சலா?" என்றான்.

அவள் "ம்" என்று முனகினாள். நெற்றி சுருக்கினாள்.

"வலிக்குதாம்மா,தடவி விடட்டுமா.."

"வேண்டாம் செல்லம்.எல்லாம் சரியாயிடும். நீ போய் படி"

"யார் சொல்லி தருவா." என்றவன்,"சரிம்மா நீ படுத்துக்க."என்றபடி அப்பாவிடம் திரும்பினான்.

"அப்பா மாத்ஸ் ஹோம்வொர்க் மட்டும் சொல்லி தரீங்களா.."என்றான் மிரட்சியுடன்.

இவனுக்கு அலுப்பாயிருந்தது.கொஞ்ச நேரம் சாய்ந்து படுக்கலாம் என்று தோன்றியது. இந்த நேரத்தில் படிப்பு சொல்லிக் கொடுத்து...அதை புரிய வைப்பதென்பது.. சே... தலைவலியில் உயிர் போய்விடும்.

'சனியன் உடம்புக்கு ஏதாவது வரதுக்கு முன்ன மருந்த வாங்கி சாப்பிடாம ஏன் இப்படி உயிரை எடுக்கிறாளோ..மனுசன் இன்க செத்து வாரான். நிம்மதியா இருக்க முடியுதா' யாரிடமோ சொல்வது போல் வார்த்தைகளை உதறினான்.

அவள் ஏமாற்றமாய் இவனைப் பார்த்தாள்.கண்ணீல் நீர் பெருகியது.

"ஆமா..கொஞ்சம் வந்திட்டா போதும் உடனே ஒப்பாரி வச்சிரு.."

குழந்தை முகம் வெளிறிப் போய் நின்றான்.

வெளியே யாரோ காலிங் பெல்லை அழுத்தும் ஓசைக்கு எழுந்து போனான்.

வெளியே நின்றவன், " அம்மா இல்லீங்களா." என்றான்.

"ஏன் அம்மாதான் வேணுமோ..என்னை மனுசனா தெரியலியா."

வந்தவன் மிரண்டு பின்வாங்கினான்."இல்ல.. நான் பிறகு வாரேன்" என்று காணாமல் போனான்.

உள்ளே வந்து உட்கார பக்கத்து வீட்டிலிருந்து குரல் கேட்டது.இவன் வெறுப்பாய் எழுந்து போய் எட்டிப் பார்த்தான்.

பக்கத்து வீட்டு பெண்ணுக்கு முகம் தொய்ந்தது. "அவங்க இல்லியா." என்றாள்.

"அவ படுத்திருக்கா.என்ன விசயம் சொல்லுங்க."

"ஏன் என்னாச்சி"

"ஒண்ணூமில்ல கொழுப்பு." என்று படக்கென இவன் முகத்தை திருப்பிக் கொண்டதில் அந்த பெண் அறை பட்ட மாதிரி உணர்ந்திருப்பாள்.

சப்பென்று நாற்காலியில் வந்து விழுந்தான்.

'எல்லாருக்கும் அம்மா,அம்மாதான் வேணுமா.அப்ப எனக்கென்று என்ன மரியாதை. சம்பாதிக்கிற எனக்கே இவ்வளவுதான் மரியாதையா' கோபம் உடம்பெங்கும் பரவியது.

மறுபடி பையன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஏதோ கேட்க வந்தான்.புத்தகத்தை வாங்கி வீசி எற்ந்தான். “சனியனே நீ ஸ்கூல்ல ஒழுங்கா படிச்சிட்டு வராம இங்க வந்து ஏன் உயிரை வாங்குற.னீ படிச்சி கிழிச்சது போதும்.போய் படுத்து தூங்கு.” என்று முதுகில் அடித்ததில் இவனுக்கே கை வலித்தது.

பையன் ஓங்கி குரலெடுத்து அழ,இவனுக்கு கோபம் தலைக்கேறியது.”சத்தம் போடாத சனியனே” தலையில் குட்டினான்.

குழந்தை அழுது கொண்டே போய் கட்டிலில் விழுந்தான்.

இவனுக்கு எங்காவது ஓடிவிடலாம் போல் தோன்றியது...... இப்போது காபி குடித்தால் ஆசுவாசமாக இருக்கும்.என்ன செய்வது. அட.. நாம்தான் போட்டால் என்ன.காபி போடுவது பெரிய வித்தையா என்ன. பாக்டரியில் என்னென்னவோ பெரிய இயந்திரங்களையெல்லாம் இயக்குகிற தன்னால் இது கூட முடியாதா.என்று தோன்றவே அடுக்களைக்குள் நுழைந்தான்.

பால் இருந்தது.ஸ்டவ்வை பற்ற வைத்து சூடாக்கி விட்டால் போகிறது....தீப்பெட்டி..... தீப்பெட்டி எங்கே வைத்து தொலைத்தாளோ..ஒரு இடத்தில் ஒரு சாமான் இருக்கிறதில்லை.பத்து நிமிட தேடலில் கோபமும் வியர்வையும் பெருகியதுதான் மிச்சம்.

படுக்கையில் கிடந்தவளிடம் வந்து எரிச்சலானான். “தீப்பெட்டியை எங்கே வச்சி தொலைச்சே..”

“எதுக்கு.”

“எதுக்கா இருந்தா என்ன.”

“அந்த ஸ்டவ் மேலதான் இருக்கும்.”

இருந்தது.குச்சி உரசி பற்ற வைப்பதற்குள் வியர்த்தது.பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்தான்.சாதனை செய்து விட்ட மாதிரியிருந்தது..வெளியே கேட்டை யாரோ தட்டுவது போலிருந்தது.விழுந்தடித்துக் கொண்டு வாசலுக்கு ஓடினான்.பிச்சைகாரன்.”போ..போ..இங்க ஒண்ணுமில்ல...” விரட்டினான்.அவன் எதுவோ திட்டிக் கொண்டே போனான்.

மறுபடி உள்ளே வந்தால் பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்திருந்தது.அவசரத்தில் பாத்திரத்தை தூக்கப்போக கை சுட்டது..வெடுக்கென்று இழுத்துக் கொண்டான்.கை வலி உயிர் போயிற்று. சத்தம் கேட்டு பையன் வந்து எட்டிப்பார்த்தான். அப்பா ஏதோ வித்தை காட்டுகிறார் என்கிற மாதிரி பார்த்துக் கொண்டு நின்றான்.

“இத வச்சி பிடிங்க” பயந்து பயந்து ஒரு துண்டு துணியை எடுத்துக் கொடுத்தான்.

ஒரு வழியாக காபி போடும் சாகசம் முடிந்தது. வாங்கிக் குடித்த பையன் முகம் சுழித்தான்.ஏனென்று புரியாமல் இவனும் ருசி பார்க்க, குமட்டிக்கொண்டு வந்தது. காபி இப்படியா கசக்கும். இன்னும் கொஞ்சம் இனிப்புச் சேர்க்க வேண்டுமோ....

சேர்த்த பிறகும் ஏதோ கசாயம் மாதிரியானதுதான் மிச்சம்.

இவன் அப்பாடா என்று ஓய்ந்து நாற்காலியில் சாய்ந்தான்.ஒரு காபி கூட போட்டு குடிக்க சாமர்த்தியமில்லையா. நாக்கில் நீர் ஊறுகிற மாதிரி தினமும் போட்டுத் தருவாளே... அதில் அப்படி என்னதான் கலக்குவாளோ...

வாய்க்குள் நமநமவென்றிருந்தது தூரமாய் நின்ற பிள்ளை இவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ அப்பா..”

“என்னா...”

“கடையில போய் காபி வாங்கி வரட்டுமா.”

மைகாட்.. எனக்கு ஏன் தோன்றாமல் போயிற்று.எவ்வளவு எளிதான மாற்று வழி.இது கூட புரியாத முட்டாளா நான். தொழிற்சாலையில் இயந்திரங்களோடு பழகிப் பழகி புத்தியும் இயந்திரம் போலானதா..... யாராவது சாவி கொடுத்தால்தான் யோசிக்குமா...

சே... ஒரு காபி போடவே இவ்வளவு பாடுகளா.சமயலறயும் சாகச மேடைதானோ.

இப்போது நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. அதிகாலை ஐந்து மணிக்கே அடுக்களையின் உருட்டல் சத்தம் கேட்டு உறக்கம் கலைந்திருக்கிறான்.கோபமாய் கத்தியிருக்கிறான்.தரை பெருக்கி,பளிச்சென்று வாசல் தெளித்து கோலம் போட்டு, ஏழு மனிக்குள் காலை உணவு செய்து,குளிக்க வென்னீர் போட்டு,துணி அயர்ன் பண்ணி,குழந்தையை புறப்படச் செய்து... மதியத்திற்கு சாப்பாடு எடுத்து வைத்து.....எந்நேரமும் வேலை.... வேலைதான்....

இப்போது அவள் எழுந்து வந்தாள். அடுக்களை கிடந்த கோலத்தை பார்த்து புரிந்து கொண்டாள்.

“ நான்தான் பிளாஸ்கில காபி போட்டு வச்சிருந்தேனே.” என்று தளர்வாய் நடந்து வந்தாள்.பிளாஸ்கிலிருந்து சூடாய் ஊற்றிக் இவனிடம் நீட்டினாள். வாங்கி அருந்தியவனுக்கு தேவாமிர்தம் மாதிரி இருந்தது. இதுவரை அவள் தந்த எதையும் குறை சொல்லாமல் சாப்பிட்டதில்லை. இன்று நிறைவாய் பாராட்டலாம் போலிருந்தது.

அவள் நிற்க முடியாமல் கீழே உட்கார்ந்து, பின் அதிலேயே சுருண்டு படுத்தாள். பிள்ளை சட்டென்று அமர்ந்து அவள் தலையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டான். “அம்மா....அம்மா.. என்னாச்சும்மா.” என்றான் பதட்டத்துடன்.

வெடவெடக்கும் அவளைப் பார்க்க ,முதல்முறையாய், பரிதாபமாக இருந்தது. சாதாரண தலைவலி இவனுக்கு வந்தாலே வீட்டை இன்டன்சிவ் கேர் யூனிட் ஆக்கியிருப்பாள்.

ஆனால் அவளுக்கு இன்று.

பையன் அம்மாவை நெருங்கி, “ சாப்பிட்டியாம்மா? “ என்றான். அவள் நெகிழ்ந்தாள். பிள்ளையின் கையை இழுத்து பிடித்து முத்தினாள்.

இவன் விறைத்து போனான்.இந்த அனுசரணை தன்னிடம் ஏன் இல்லாது போயிற்று.அவளுக்கு ஆறுதலாய் ஏன் பேச வரவில்லை. முட்டாள்தனம் செய்து விட்டது போல் உறுத்தியது.

உயிரற்ற இயந்திரங்கள் செயலிழந்தாலே அதை சரி செய்வதுவரை பசி தூக்கம் மறந்து போயிருக்கிறது. ஆனால் இது உயிர்.இது பழுதானால்... அவள் இல்லாத வீடு இயக்கமில்லாது போகுமோ.....

இனி எல்லாம் ஒன்றிலிருந்து தொடங்க வேண்டுமோ.... எல்லாம் புதிதாய்....

நெருங்கி அவளிடம் போய் அமர்ந்தான்.அவள் இவனை இத்தனை நெருக்கத்தில் பார்த்து வியர்த்தாள்.பேசத்தோன்றவில்லை. நெற்றியை தடவினான். தலை முடியை விலக்கி குனிந்து முத்தமிட்டான்.

பிள்ளை முகத்தை பொத்திக் கொண்டு சிரித்தான்.

Tuesday, June 16, 2009

பூக்கள்

தெருவின் தொடக்கத்தில் ஒரு நீண்ட செவ்வக வடிவில் இருந்தது அந்த வீடு. சிமென்ட் பூச்சு பூசப்படாத வெளிச்சுவர். ஜன்னலேயில்லாமல் வெறுஞ் சுவர். எல்லைகள் பிரிக்கும் சுற்று சுவரும் அந்த வீட்டுக்கு இல்லை.

முன்புறம் மட்டும் வாசலை ஒட்டி ஒரு ஜன்னல். ஜன்னலின் கண்ணாடி கதவுகளில் ஒன்று, தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறு வீரர்களின் புண்ணியத்தில் உடைபட்டிருந்தது.

அதனூடே பார்வையை செலுத்தினால் எப்போதாவது தென்படும் அந்த வீட்டுப் பெண்ணின் முகம்.

மெல்லிய ஒப்பனை மாதிரி அவள் முகத்தில் சோகம் தடவப் பட்டிருக்கும்.ஜன்னலின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு, வீட்டுக்கு வெளியே, முற்றத்தில் அவள் நட்டு வளர்த்திய பூச்செடிகளையே பார்த்துக் கொண்டிருப்பாள். தெருவில் போவோர் வருவோர் யாரும் அவள் கண்களுக்கு புலப்பட்டதில்லை. அந்த பூக்களோடு கண்களாலேயே அளவளாவிக் கொண்டிருப்பாள்.

பூக்கள் எப்போதும் அழகுதான்.அதன் வண்ணங்களை வேறெதனுடனும் ஒப்பிட முடிவதில்லை. அதைப் போலவே அதன் வாசமும். அவற்றைப் போல இத்தனை அழகாய் யார் ஒப்பனை செய்து கொள்ள முடிந்திருக்கிறது.

பூக்களின் அசைதலை ஒரு குழந்தையின் கையசைப்பாய் உருவகப்படுத்தி அதில் மனம் மகிழ முடிகிறது.

வீடு போல் இல்லாத அந்த வீட்டுக்கு பூக்கள்தான் பெருமை சேர்த்தது. தெருவுக்குள் நுழைகிற அத்தனை பேரின் பார்வையும் முதலில் பதிவது அந்த பூக்களின் மீதுதான்.

வீட்டில் பெரும்பாலும் தனியாகவே இருப்பாள்.அவள் கணவனுக்கு பெரிய ஹோட்டல் ஒன்றில் சமையல் பணி. ‘விடிந்து போனால் அடைந்தால்தான்’ வரமுடிகிற வேலை.
பகல் பொழுதுகளில்,தெருவில் நடமாட்டம் குறைந்த நேரங்களில் அவள் வீட்டு முற்றத்தில்,செடி நடுவாள்.களைகள் பிடுங்குவாள். நீர் ஊற்றுவாள்.மொட்டாக இருக்கும் பூக்களை தொட்டு தடவிப் பார்ப்பாள். வாச மலர்களை இழுத்து கன்னத்தை உரசுவாள்.

எத்தனை விதமான பூக்கள்.நாலு மணி நேரத்தில் மடியும் பூக்கள், நாலு நாளில் உதிரும் பூக்கள், நாற்பது நாளாய் கருகாமல் சிரிக்கும் பூக்கள்....

கூர்ந்து பார்த்தால் மனிதர்களின் தன்மை பூக்களிலும் உணரமுடிகிறது. வெறும் பாவ்லா காட்டும் வெற்று மனிதர்கள் போல வாசமில்லாத பல பூக்கள் பெரிது பெரிதாகவே தென்பட்டன. அடக்கமாய், எளிமையின் வெண்மையாய் தெரிந்த பல பூக்களில் அற்புதமான நறுமணம் கசிந்து கொண்டிருந்தன. விளம்பர பிரியர்கள் போல சில பூக்களில் கண்ணை கூசும் நிறம்.

அவளுக்காகவே ஏதாவது ஒரு பூ புன்னகையுடன் காத்துக் கிடக்கும். சுற்றுச் சுவர் இல்லாததால் அவ்வப்போது ஆடு மாடுகள் செடிகளை கடித்து கதறடிக்கும். உயிரொன்று இழந்த தவிப்புடன் அவள் விலங்குகளை விரட்டுவதை அடிக்கடி பார்க்கலாம்.

துரதிஷ்டமான ஒரு நாளில் அவள் வீட்டில் பயங்கர சத்தம். கணவன் மனைவிக்குள் சண்டை.

அவள் அழுது கொண்டே வெளியே ஒடி வந்தாள்.வெறி பிடித்தவள் மாதிரி செடிகளை பிடுங்கி வீசி எறிந்தாள். பூக்களை பிய்த்து காலில் இட்டு நசுக்கினாள். சகதியோடு தலையில் அடித்துக் கொண்டாள்....

‘இப்ப நிம்மதிதானே.... இப்ப நிம்மதிதானே....’ அழுது கொண்டே அவள் கத்த.... வாசலில் சிவந்த கண்களுடன் கோபமாய் அவள் கணவன் நின்று கொண்டிருந்தான்.

Sunday, June 14, 2009

சுய பரிசோதனை

‘தமிழ் தெரு’ சில காலம் கவனிப்பின்றி கிடந்து போயிற்று. புதர் மண்டி, சாக்கடை நிரம்பி அசுத்தமாயிற்று.. கண்டதையும் கொட்டி அதை ஏன் குப்பைத் தொட்டியாக்கினேன்?

இப்படியெல்லாம் சில நாட்களாய் கேள்வி.

யோசிக்க வேண்டியிருந்தது.

திசையை தீர்மானிக்க வேண்டியிருந்தது.

இலக்கில்லாமலே நடந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.திசை தெரியாமல் பறப்பதில் பயனில்லை.

தமிழ் தெருவுக்கு ஒரு நோக்கு இருக்க வேண்டும் அதற்கு ஒரு தனி தன்மை உருவாக்க வேண்டும்.

எனவே தெரு என்ற களத்துக்குள்ளே மட்டும் நான் உருண்டு புரளலாம் என்று தோன்றியது.

சிந்து சமவெளி காலத்திலிருந்தே தெரு, பண்பாடுகளின் பிரதிபலிப்பு கொண்டிருந்ததை உணர்ந்திருக்கிறோம்.

தெரு ஒரு சமூகம் இயங்கும் தளம்.ஒரு தெருவில்தான் எத்தனை நிகழ்வுகள். எத்தனை வேடிக்கைகள். எத்தனை உணர்ச்சிகள்.

மனிதர்களின் ஒழுங்குக்கும் ரசனைக்கும் தெருதான் கண்ணாடி.

தெருவின் அமைப்பு,அதை சந்திக்கும் வீட்டு வாசல்,முற்றம்,கழிவு நீரோடை,பராமரிப்பு இவற்றை பார்க்கிற போதே அந்த தெருவின் கலாச்சாரம் புரிந்துவிடும்.

இப்போது தெரு என்பது சாலைகளாகவும் நீண்ட,உயரமான சுற்று சுவர் எழுப்பிய வீடுகளாகவும் மாறி வருவது வேறுவிசயம்.

தெருவிலேயெ நாம் உணர்ந்து கொள்ள ஆயிரம் விசயங்கள் இருக்கின்றன.தெருவின் வீடுகள், விலங்குகள், மனிதர்கள்,விளையாட்டுகள்,விழாக்கள்,விபத்துகள்,உற்சாகங்கள் அனைத்தையும் இந்த வலைப்பூவில் இனி தரிசிப்போம்.

தெருவில் அடைந்து கிடந்த எல்லா குப்பைகளையும் அகற்றி விட்டு புதிதாய் இனி தொடங்கப் போகிறேன்.

யாரோ சொன்னதோ அல்லது எங்கோ சுட்டதோ என்றில்லாமல் நானே பார்த்த,பழகிய,உணர்ந்த, ....ந்த, ....ந்த, விசயங்களையே இனி எழுதப் போகிறேன்.

புறப்படுவோமா.....?

Saturday, June 6, 2009

வலி

சரக்கென்று ஒரு அரை வட்டமடித்து பஸ் நிறுத்தத்தை ஒட்டி இவளருகே வந்து முகாமிட்டது அந்த ஆட்டோ.

உள்ளேயிருந்து ஆபாசப்பாட்டும்,சிகரெட்டின் புகையும் கிளம்பி அந்த பகுதியே மாசுபட்டது.

இவள் சற்று விலகி நின்று கொண்டாள்.முந்தானையை இழுத்து தலைவழியே போர்த்திக்கொண்டாள்.உடையில்ஏழ்மையும் உடலில் வசீகரமும் கொண்டிருந்தாள். நாலு நாளாய் இருந்த காய்ச்சலுக்கு டாக்டரைப் பார்க்க வந்தவளுக்கு திரும்பிச் செல்ல இன்னும் பஸ் கிடைத்தபாடில்லை.

கூட்டமாய் வந்த பஸ் ஒன்று சற்று தொலைவிலேயே நின்று ஆட்களை இறக்கிவிட,இவள் துரத்திபோய் சேர்வதற்குள் புறப்பட்டு போனது.இயலாமையில் உடலெல்லாம் வலிக்க திரும்பி பழைய இடத்துக்குப் போக சலிப்பாய் இருந்தது.அதிலேயே நின்றாள்,தனியாக
.

ஆட்டோ சட்டென்று உயிர் பெற்று வேகம் காட்டி இவளருகே வந்து நங்கூரமடித்தது.இப்போது இவளுக்கு மெல்ல பயம் உருவாயிற்று.இவளையே குறி வைக்கும் மிருகம் போல ஆட்டோவிலிருந்து ஒருவன் இறங்கினான்.கண்களில் காமத்துடன் புகையை ஊதியபடி அருகினான்.

பாக்கெட்டிலிருந்து ருபாய் நோட்டை எடுத்து முகத்துக்கெதிரே நீட்டி,"வேணுமா" என்றான்."சீ..போடா.."என்று சொல்ல நினைத்தாள்.பயத்தில் தொண்டை அடைத்தது.அவன் திரும்பி ஆட்டொவை பார்த்து கண்ணடித்து விட்டு முகத்தில் அதிர்ச்சி காட்டினான்.

"அது என்னது..கன்னத்தில் கறுப்பா..." என்று கை நீட்டிமுன்னேற இவள் பின்னால் நகர்ந்தாள்.எதுவோ இடிபட்டது.திரும்பினாள்.பின்னால் இன்னொருவன் நின்றிருந்தான்.பயந்து விலகினாள்.

அழுகையாய் வந்தது.பஸ் ஸ்டாண்டில் நின்ற வயதானவர் அருகில் வந்து,"என்ன..என்ன பிரச்சனை இங்க.." என்றார்.அவரை அவன் உற்று பார்த்து விட்டு சொன்னான்.

"புருசன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ போய்யா பொத்திகிட்டு..."

இவள் திடுக்கிட்டாள்.புருஷனா..இல்லை..இல்லவேஇல்லை...என்று மறுக்க நினைப்பதற்குள் இவள் தோள் மீது அவன் கையைப் போட்டான்.இவள் பயத்தில் அலறினாள்.சத்தம் வரவில்லை.உடல் நடுங்கியது.எங்கும் வியர்த்தது.தொண்டையில் பயம் அடைத்து,தலை கிறுகிறுத்து,மூச்சையடைக்க,மயக்க மயக்கமாய் வந்து...சட்டென துவண்டு விழுந்தாள்.

சற்று தள்ளியிருந்த பெட்டிக்கடையிலிருந்த யாரெல்லாமோ சத்தமிட்டபடி ஓடிவர...ஆட்டோ நிமிஷத்தில் காணாமல் போனது.

"ன்னால முடியாதுன்னா முடியாதுதான், நீ ஆனதை பார்த்துக்க.."எதிரே நின்ற காண்டிராக்டரை கிருஷ்ணன் விரட்டிக் கொண்டிருந்தான்.'கொடுக்கல் வாங்கல் பிரச்சனை' என்று புரிந்தது.ஒரு வாரமாய் இந்த இழுத்தடிப்பு நடக்கிறது.

இவனுக்கு கிருஷ்னன் மீது வெறுப்பாய் வருகிறது.மனுஷன் ஏன்தான் இப்படி காசு காசு என்று பறக்கிறாரோ என்று கோபம்."ஏன் சார்.புது ஆபீசர் கெடுபிடி தெரிஞ்சுமா இப்படி..." என்றான் இவன்.

கிருஷ்ணன் சினத்துடன் இவனை முறைத்தான். "ராஸ்கல்..ஒரு பியூன் நீ..எனக்கு புத்தி சொல்ல வந்திட்ட..கவனிச்சிகிறேண்டா...உன்ன நான் கவனிச்சிகிறேன்.." என்றான் குரோதமாய்.

இன்று நேரமே சரியில்லை போலிருக்கிறது.காலையிலிருந்து எல்லாமே ஏறுக்கு மாறாய் தான் நடக்கிறது.காலையில் கண் விழித்துபார்த்தபோதே ,'ஐயய்யோ இவ்வளவு நேரமாகிப்போச்சா' என்று பதட்டம் தொற்றிக்கொண்டது.

'அந்த திமிரு பிடிச்ச கழுதை எழுப்பிவிடாம என்ன பண்ணிக்கிட்டிருக்கு,,' என்று எழுந்து போய் பார்த்தால் அடுக்களையில் சிமெண்ட் தரையில் சுருண்டு படுத்து கிடந்தாள்.பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து கிடந்தது.இவனுக்கு அசாத்திய கோபம் வந்தது.'யேய்' என்று காலால் தட்டினான்.திடுக்கிட்டு எழுந்தாள்.என்னமோ முனகினாள்.சரியாக கேட்கவில்லை

"யேய் என்ன பேசின..என்ன பேசின.."என்றான்.

"ஒண்ணுமில்லப்பா... நீங்க போங்க உங்க கலெக்டர் உத்யோகத்துக்கு.."

"கிண்டலாயிருக்கு இல்ல..பியூந்தானேன்னு இளக்காரம்.மூதேவி ஓங்கி மிதிச்சேன்னா செத்துபோயிடுவ பார்த்துக்க."

அவள் திடீரென்று ஓங்கி நெஞ்சில் 'டமார் டமார்' என்று அடித்துக் கொண்டாள்." நான் சாவணும்..சாவணும் செத்தாதான் உங்களுக்கு நிம்மதி." கீச்சு குரலில் அழுதாள்.
"ராட்சசி.என் உயிரை எடுக்கிறதுக்குன்னே வந்து வாய்ச்சிருக்கு.சனியன்." எரிச்சலோடுதான் அலுவலகம் கிளம்பி வந்திருந்தான்.இங்கு அதற்கு மேல் எரிச்சல். வீணாக கிருஷ்னனின் கோபத்துக்கு ஆளாகி...பாவி என்ன செய்யப் போகிறானோ.

பசி வேறு காதை அடைத்தது.வெளியே போய் ஒரு டீ குடித்து விட்டு தலைமை பொறியாளர் வருவதற்குள் திரும்பி விட வேண்டும் என்று அவசரமாய் வருகையில் என்ன துரதிஷ்டமோ வாசல் படியில் கால் சறுக்கி கீழே விழுந்தான்.மூக்கு நசுங்கி முகம் பிய்ந்திருக்கும்.நல்ல வேளையாக எதிரே வந்த காண்டிராக்டர் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

"பார்த்து மெதுவா போப்பா" என்றார்.இவன் எழுந்து கையையும் காலையும் உதறுவதுவரை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் ஏதோ நினைத்தவனாக ஓடிவந்தான்.

"அடிச்சிட்டானா,அந்த காண்டிராக்டர் உன் மேல கையை வச்சிட்டானா?இத இப்படியே விடக்கூடாது" என்று கத்தினான்.

காண்டிராக்டர் வெலவெலத்து போய் நின்றார்.இவனுக்கு எதுவும் புரியவில்லை.

"இல்லை சார் நான்தான் கால் தடுக்கி..."

" நீ வாயை மூடு.எனக்கு எல்லாம் தெரியும்.இன்னிக்கு உன் மேல கையை வச்சவன் நாளைக்கு என்னவெல்லாம் செய்வானோ.விடகூடாது இத.."

காண்டிரக்டரை எதற்கோ மடக்க பார்க்கிறான் என்று புரிந்தது.அலுவலகம் மெல்ல கவனத்தை வாசல் நோக்கி திருப்பியது.இவனுக்கு தவிப்பாயிற்று.பிரச்சனை விசுவரூபமெடுக்குமோ என்று கவலையாயிற்று.கிருஷ்னன் யாரோ மந்திரிக்கு உறவாயிற்றே .அவனை ஆதரிக்காமல் இருந்தால் என்ன ஆவது.சடுதியில் அலுவலகம் மொத்தமும் எழுந்தது.வெளியேறி வேப்பமர நிழலில் நின்று மாறி மாறி ஆலோசித்தது.நடப்பது எதுவும் புரியாமல் இவன் சிலையானான்.

"என்ன மணி உனக்காக நாங்க வெளிய நிக்கிறோம். நீ என்னடான்னா வாசலை விட்டு வெளியே வரமாட்டேங்க.." வந்து இவனை இழுத்துக் கொண்டு போனார்கள்.

" உனக்கு ஒண்ணுன்னா விட்டுருவோமா..தமிழ்நாடு முழுக்க இத கொண்டு போகணும்.." இவனுக்கு கவலையாயிற்று.சற்று நேரத்தில் கிருஷ்னனை காண்டிராக்டர் அணுகினார்."பார்த்தேயில்ல.என்னை பகைச்சா பிரச்சனை இன்னும் பெரிசாகும்."

"விடுங்க சார்.அப்படி தனியா வாங்க பேசுவோம்." தனியே கூட்டிப் போய் ரகசியமாய் கையில் ஒரு பொட்டலத்தை திணித்தார்.பணமாக இருக்கும்.அவன் எதிபார்த்ததும் அதுதானே.

அந்த நேரம் பார்த்து தலைமை பொறியாளரின் ஜீப் உள்ளே நுழைந்தது.வெளியே கூட்டத்தைப் பார்த்து தயங்கி நின்றது.இவன் போய் வணக்கம் சொன்னான்.

"என்ன மணி பிரச்சனை" இவன் பதில் சொல்லத் தெரியாமல் தவித்தான்.

"மணிக்காகத்தான் சார் இந்த பிரச்சனை" யாரோ சொல்ல வெலவெலத்து போனான்.எங்கிருந்தோ கிருஷ்னன் ஓடி வந்தான்.

"மணி நேத்து போட்ட தண்ணி தெளியலை போலிருக்கு.தள்ளாடி விழுந்திட்டு,காண்டிராக்டர் அடிச்சி போட்டாருன்னு சொன்னான்.சரி நம்ம ஆளாச்சேன்னு உணர்ச்சி வசப்பட்டோம்.இப்ப விசாரிச்சாதான் உண்மை தெரியுது.காண்டிராக்டர் இவனுக்கு அஞ்சோ பத்தோ குடுக்கிறதில்லையாம்.இப்படி நாடகமாடி பழிவாங்கியிருக்கான்..

"கிருஷ்னன் சொல்லிக்கொண்டே இவனைப் பார்த்து கண்ணடித்தான்.கழுத்து வெட்டப்பட்ட பலிகடா போல துடிப்பு எழுந்தது.பாவி.'உன்னை கவனிச்சிகிறேண்டா'என்று சொன்னதன்அர்த்தம் இதுதானோ.

கிருஷ்னன் ஒரு கல்லில் மூன்று நான்கு மாங்காய்கள் அடித்து விட்டது போல் தோன்றியது.கிருஷ்னனை எதிர்த்து பேச யாருக்கும் துணிவு வரவில்லை.அதையே ஆமோதிப்பாய் அர்த்தப்படுத்திக் கொண்டு அதிகாரி இவனை அருவருப்புடன் ஏறிட்டார்.

"சே மனுசனாய்யா நீ.என்னிக்குதான் திருந்த போறீங்க. டிசிப்ளின் இல்லாதவங்களை நான் சும்ம விடப்போறதில்லை" என்றவர்."இந்தாம்மா சாரதா.சீட்டுக்கு போய் ஒரு மெமோ டைப் பண்ணு "என்றார்.பேச நாவெழாமல் இவன் இடிந்து போய் உட்கார்ந்தான்.

சோர்வாய் சைக்கிளை உருட்டிக் கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.மனசு ரணமாகி இருந்தது.தியேட்டர் பக்கம் வந்த போது பஸ் ஸ்டண்ட் அருகே நிறைய கூட்டமிருந்தது.சில போலீஸ் தலைகள்.

"பட்ட பகல்லயே பஸ்சுக்கு நின்ன பொம்பளய நாசம் பண்ண பார்திருக்கானுகளே.உருப்படுமா இந்த நாடு."எதிரே வந்தவர் புலம்பிக் கொண்டே நகர,இவன் அலட்சியமாய்விலகி நடந்தான்.

வீட்டுக்கு போகவே பிடிக்கவில்லை.பார்வதிபுரம் மேம்பாலம் வந்ததுமிறங்கி, நிழல் பொதிந்திருந்த அதன் கைப்பிடி சுவரில் ஏறி அமர்ந்தான்.பாலத்துக்கு கீழே ரயில் ஒன்று பேரிரைச்சலுடன் கடந்து போயிற்று.பாக்கெட்டிலிருந்து பீடி எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.

சாலையில் கண்ணுக்கு எட்டிய தோரம் வரை அனல் பறந்து கொண்டிருந்தது.மாட்டு வண்டி ஒன்று 'கடக்முடக்' ஓசையுடன் வந்து கொண்டிருந்தது.வண்டி நிறைய பாரம் இவன் மனதைப் போல.மாடு இழுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.

"ஏ மணி பஸ் ஸ்டாண்ட்வரை போய் ஒரு பாக்கெட் கோல்டு பில்டர் வாங்கிட்டு வந்திருப்பா"

"வடசேரியில போய் நல்ல நெய் மீனா வாங்கி வீட்டுல கொண்டு குடுத்திட்டு வந்திரு.தேடிட்டே இருப்பா.ஒன் அவர்ல வந்திருவேல்ல."

"ஞாயிற்றுக்கிழமை சும்மாதானே இருப்ப.வீட்டில ஒட்டடை அடிக்கணும்னு சொன்னா...வந்திரு.. நம்ம வீட்ல சாப்டுக்கலாம்."

ஒரு வார்த்தை மறுத்து பேசியிருப்பானா.எல்லாவற்றுக்கும் 'சரி சார்.சரி சார்'என்று தலையாட்டியது தப்புதானோ.குடும்பத்தையே மறந்து முழு மூச்சாய் உழைத்ததின் பலன் இதுதானோ...'சுளீர்' என்று எழுந்த சாட்டையொலியில் நினைவு கலைந்தான்.வண்டிக்காரன் மாட்டை விளாசிக் கொண்டிருந்தான்.

"என்ன மணி எங்க போயிட்ட.உன்னை எங்கெல்லாம் தேடுறது."அரக்க பரக்க வந்த பக்கத்து வீட்டு ஆள் மூச்சிரைத்தான்.

"ஏண்ணே.என்ன எதுக்கு தேடினிய.."

"உடம்பு சரியில்லாதவளை தனியா விட்டிருக்கியே.என்னப்பா நீ...இப்ப பாரு என்னவேல்லாம் நடந்து போச்சி."பதட்டமானான்.

"உடம்பு சரியில்லையா.யாருக்கு."

"என்னப்பா தெரியாதவன் மாதிரி பேசற.அங்க ஊரே திரண்டு கிடக்கு...பொண்டாட்டிக்கு ஒன்னுன்னா பார்க்க மாட்டியா. என்ன மனுஷன் நீ...போ பேசிட்டு நிக்காம முதல்ல அந்த புள்ளையப் போய் பாரு."

இவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தலைதெறிக்க விரைந்தான்.

ருத்துவமனையின் பொதுவார்டுக்கு வெளியே நிறைய கூட்டம்.பார்த்த முகங்கள்,பழகாத நபர்களென்று யார் யாரோ நின்றிருந்தார்கள்.அருகில் வந்து ஆறுதல் கூறினார்கள்.

அப்பாவியாய் உள்ளே நுழைந்தான்.வார்டின் கடைசிக் கட்டிலில் கழிவறைக்கருகே சந்திரா கிடத்தப்பட்டிருந்தாள். நாற்றம் மூக்கை அரித்தது.கட்டிலைச் சுற்றி அயலார் பெண்கள் கூட்டம்.எல்லோருக்கும் முன்பே தெரிந்திருக்கிறது.

சந்திரா தலைவழியே மூடிக்கொண்டிருந்தாள்.ஒரு பெண் விசிரி வாங்கி வந்து விசிறிக் கொண்டிருந்தாள்.இன்னொருவர் காபி கொண்டு வந்து'குடிம்மா.கொஞ்சம் தெம்பு வரும்' கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

இந்த கூட்டத்தில் அவளிடம் போய் என்ன சொல்வது. திகைப்பாயிருந்தது.நர்ஸ் வந்து கூட்டத்தை விலக்கி,சந்திராவின் இடுப்பில் ஊசியை செருகிவிட்டு போனாள்.

"நிமிர்ந்து ஒரு ஆள் முகத்தை பார்த்து பேசமாட்டா.அவளை போய் இந்த பாடு படுத்தியிருக்கானுவளே. பாவிபயலுக."

" நாடே சீரழிஞ்சிப் போச்சி. இவனுகள கண்டதுண்டமா வெட்டிக் கொல்லணும்."

"பட்டபகல்ல நடந்திருக்கு.ஒரு கல்ல தூக்கி எறிஞ்சாவது அவன பிடிச்சிருக்கலாமே"

ஆறுதல் படுத்துகிறவர்களின்வார்த்தைகளே துக்கத்தை மேலும் தூண்ட.இவனுக்கு ஏனோ கண்ணீர் பெருகியது.கட்டிலை நெருங்கி பொய் 'சந்திரா' என்று கூப்பிட்டு பார்த்தான்.அவள் திடுக்கிட்டு உதறி எழுந்தாள்.கண்களில் பயம் உறைய சுற்றிலும் பார்த்தாள்.கட்டில் முனையில் சுவரோரமாய் ஒண்டினாள்.இவன் கலவரமாய் பார்த்தான்.

காலையில் அவளோடு மல்லுக்கு நின்றது நினைவுக்கு வந்தது.சுகவீனத்தால்தான் விழுந்து கிடந்தாளோ... நான் ஒரு முரடன். எப்படியெல்லாம் நோகடித்துவிட்டேன்.மறுகி மறுகிதான் கிடந்திருப்பாளோ.பட்டால்தானே எல்லாம் புரிகிறது.தனக்கு வலித்தால்தான் அடுத்தவனின் வேதனை உணர முடிகிறது.அடிபட அடிபடத்தான்மனிதனுக்கு பாடங்கள் கிடைக்கிறதோ?

மெல்ல மெல்ல ஒவ்வொருவராய் நகர,இவன் கட்டில் விளிம்பில் போய் அமர்ந்தான்.இவள் பயத்தை எப்படி தெளியவைப்பது. ஆண்டவனே என்று பெருமூச்சு விட்டான்.சற்று நேரத்துக்கெல்லாம் எல்லோரும் வெளியேறியிருக்க,மெல்ல அவள் தலையை வருடினான்.என்ன நினைத்தாளோ சட்டென்று துணியை விலக்கி எழுந்து வந்து இவன் மடியில் தலைவைத்து அழுதாள்.பூனைகுட்டி மாதிரி சுருண்டு படுத்தாள்.இவன் கையை இழுத்து நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள்.இவனுக்கு அன்றெல்லாம் பட்ட வலிகள் ஏனோ அந்த நிமிடத்தில் காணாமல் போன மாதிரி இருந்தது.

தேடல்

அவசரமாக எழுப்பப்பட்டேன்.

யாரோ ஒருத்தி முத்தம் தர தயாராயிருந்த கனவு தடைபட்டது.விழி திறந்து பார்த்தபோது அம்மா தெரிந்தாள்.வெளியே எதையோ சுட்டிக் காட்டினாள்.

எழுந்து அவசரமாக பார்வையை ஜன்னல் வழியாக வீசினேன்.அங்கே காலை பத்திரிகை படித்தபடி இருப்பது..."ஓ மைகாட்...ஜெனிபர்.." வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து வந்தேன்.கழுவாத என் முகத்துக்கு 'குட் மார்னிங்' சொன்னாள்.

"ஏம்பா விடியறதுக்குள்ள வந்திருக்க..எனி பிராப்ளம்''

" மண்ணாங்கட்டி மணி இப்ப எட்டரை."

நான் மறுவார்த்தை பேசாமல் அவசர அவசரமாய் பல் தேய்த்து,குளித்து,சாப்பிட்டு....எல்லாம் முடித்து ஜெனிபரிடம் போய் "கிளம்பலாமா?" என்ற போது மணி ஒன்பதாகியிருந்தது.

ஜெனிபர் மௌனமாகவே நடந்தாள்.முகத்தில் சோகம் இருந்தது. இருந்தாற்போல் "செத்து விடலாம் போல் இருக்கிறது"என்றாள் மொட்டையாக. கால் பெருவிரலை குதிரை குளம்பு மிதித்த மாதிரி பதறிப் போனேன்
.

"இதை சொல்லத்தான் காலையிலே வீட்டுக்கு வந்தியா?" ஜோக் சொல்லிவிட்ட மாதிரி சிரித்தேன்.அவள் அழுவாள் போலிருந்தது.சிரிப்பை நிறுத்தி விட்டு கேட்டேன். "மறுபடியும் ஏன் இப்படி நினைப்பு வருது.."மௌனமாக இருந்தாள். நான் ஒரு பாரத்தை சுமப்பது போல் உணர்ந்தேன்...

இவளும் சரி இவள் பேச்சுகளும் சரி எப்போதுமே எனக்கு புதிராகத்தான் படுகிறது.முதன்முறையாக என் வீட்டுக்கு வந்தபோதும் இப்படித்தான்..ஒரு பெண்ணை எந்த முறையில் வரவேற்பது,உபசரிப்பது என்று நான் விழித்துக் கொண்டிருக்கையிலே " வீடு ஏன் இவ்வளவு அலங்கோலமா இருக்கு.."என்றாள்.அவமானமாயிருந்தது.

"இப்படி இருந்தாதான் அன்னியோன்யமா இயல்பா இருக்கும்.பளிச்சினு இருந்தா ஆபீஸ் மாதிரியில்ல தோணும்..." நான் உளறுவதைக் கேட்டு தெருவுக்கு கேட்கிற மாதிரி சிரித்தாள்.பாதியில நிறுத்திவிட்டு கேட்டாள்..."உனக்கு தெரியுமா...அப்பா அம்மா பாசத்தை நான் அனுபவிச்சதேயில்ல..."

"ஏன்..இறந்திட்டாங்களா?"

"இருக்காங்க.."

"ஐ'ம் சாரி.."

"அவங்க இறக்கலையேன்னுதான் கவலைப்படணும்"

"மைகாட்..ஏம்பா அப்படி நினைக்கிறே..?"

"உனக்கு எல்லாமே பொண்ணுங்களா பிறந்தா வெறுப்பு வராதா!"

''தெரியலை"

"எங்க அம்மாவுக்கு அது நிறைய உண்டு. நான் ஏழாவது பெண்." சொல்லிவிட்டு ஏனோ சிரித்தாள்.

நான் பாதி புரிந்தும்,புரியாமலும் மௌனமாக இருந்தேன்.மறுநாள் அலுவலகம் வந்தபோது கேட்டாள்."உங்க பேமிலி பார்க்க சந்தோசமாயிருக்கு.அடிக்கடி வரவா?"மறுத்துவிடக் கூடாதென்ற தொனி கேள்வியில் இருந்தது"சரி" என்றதும் சந்தோசமானாள்.

திடீரென்று நினைத்துக் கொண்டவள் போல "பெத்தவங்களை வச்சிட்டு ஹாஸ்டல்ல தங்குற வாழ்க்கை இருக்கே...சூசைட் பண்ணிக்கலாம்னு தோனுதுப்பா.."என்று முதல்முறையாய் அப்போதுதான் சொன்னதாக ஞாபகம்.

இந்த அளவுக்கு நினைக்க தோன்றுகிறதென்றால் நிறையவே நொந்திருப்பாள் என்று தோன்றியது.ஆகவேதான் அனுசரணையாய் பேசுகிறவர்களிடம் பிரியமாய்,உரிமையாய் நடந்து கொள்கிறாள் என்று நினைத்தேன்.

ஐம்பது வயது கடந்த சேதுராம் சாரிடம் "இருங்க உங்க மீசையில இருக்கிற ஒரே ஒரு கறுப்பு முடியையும் எடுத்திடறேன்.."என்று நெற்றியில் கைவைத்து முகம் நிமிர்த்தி,வலது கையால் மீசை முடியை பட்டென இழுத்தது இந்த உணர்வோடுதான்...ஆனால் கிளுகிளுப்படைந்த அந்த சேதுராம் அவளை ஒரு சல்லாப சிங்காரியாக சித்தரித்து ஊழியர்களிடம் கதை கதையாய் அவிழ்த்து விட....துடித்து போய் விட்டாள் ஜெனிபர்.டேபிளில் கவிழ்ந்து கதறி அழுதாள்.மறுநாள் அலுவலகம் வரவில்லை.ஹாஸ்டலில் போய் விசாரித்த எனக்கு அதிர்ச்சி...'ஜெனிபர் தூக்கு மாட்டிக் கொள்ளப்போனாளாம்'

இயலாமையுடன் படுத்திருந்தவளை நெருங்கினேன்.மௌனமாக வெறித்தாள்.கண்களில் நீர் திரண்டிருந்தது.

"முடியலைப்பா.என்னால சகிச்சிக்க முடியலை.."என் கையை பற்றிய அவள் கரங்கள் நடுங்குவதை உணர முடிந்தது.தாய் மடிக்காக ஏங்குகிற ஒரு குழந்தையின் தவிப்பு தெரிந்தது அவளிடம்."துரத்துகிறார்களே என்று ஓடிக்கொண்டிராதே... நில்...துரத்துபவர்களும் நின்று போவார்கள்.உன் சங்கடங்களை விட சந்தோசங்களையே நினை..சாவின் நினைப்பு உனக்கு வராது.." நிறைய சொன்னேன்.சமனித்தாள்.

ஆனால் இன்று மறுபடியும் தற்கொலை எண்ணம் ஏன் வந்தது."ஜெனிபர் சொல்லு...என்ன நடந்தது.."மீண்டும் கேட்டேன்.

"சிவா என்னை கைவிட்டுட்டது" என்றாள் விசும்பலாய்.

"நிசமாவா?" நம்பமுடியவில்லை.சிவா இவள் காதலன். இவ்வுலகில் எதையும்விட அவனை அதிகமாய் நேசித்தாள்.அவனுக்காக குங்குமம் வைத்திருக்கிறாள்.விரலைக் கீறி இரத்தமெடுத்து போட்டோவில் கையெழுத்திட்டு அவனுக்கு கொடுத்திருக்கிறாள்.அவன் பெயருக்கு ஸ்டிக்கர் செய்து வாங்கி கைப்பையின் உட்புறம் ஒட்டி வைத்திருக்கிறாள்.எல்லாம் அவனுக்காக...அவன்...அவனே கைவிட்டு விடுவதென்றால்...

சில்லறைக்காக ஒருமுறை கண்டக்டர் கத்தியபோதே பஸ்ஸிலிருந்து குதித்து தற்கொலை செய்யப்போனவள்...இந்த இழப்பை எப்படி...எப்படி தாங்குவாள்."பாரு ஜெனி..இது ஒரு சாதாரண விசயம்.." நான் தொடங்கியதும், " நீ அனுபவிச்சாதான் தெரியும்... " கை நீட்டி தடுத்தாள்.

பஸ் வந்தது.கூட்டத்தோடு கூட்டமாய்தொற்றிக்கொண்டோம்."வாழ்க்கையில் சின்ன அம்சம்தான் காதல்...அதுவே வாழ்க்கைனு நினைச்சாதான் சிக்கல்.."'தத்துபித்தென்று'என்ன உளறுகிறான் என்று நினைத்திருப்பாள்.

" நீ எழுதிற சாதி.அப்படித்தான் இலக்கியமா பேசுவ! இப்ப சிக்கலே நான் உன் கூட பேசுறதுதான்..."

"புரியலை..."

" நான் உன் கூட பழகுறதை தப்பா யாரோ சிவாகிட்ட சொல்லியிருக்கு.அதான் என்னை..."

என் நட்பு ஏ.கே 47னால் துளைக்கப்பட்டதாய் உணர்ந்தேன்."விடு.அப்படி நம்பிக்கை கெட்டவனோடு இணைவதே பெரும்பாவம்.."

சொல்லிவிட்டேனே ஒழிய எனக்கே பொறுக்கவில்லை. பாவி இப்படி சொல்லி விட்டானே.வேலையில் ஈடுபட மனம் மறுத்தது.அவ்வப்போது நிமிர்ந்து பார்த்த ஜெனிபர் நெற்றியை சுருக்கினாள்.மதிய இடைவேளையில் ,"இப்படி டல்லாயிடுவேன்னு தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்கவே மாட்டேன்." என்றாள்.

" நம்மை பத்தி நமக்கு தெரியும்...யாரு என்ன சொன்னா என்ன... நிம்மதியா பழைய மாதிரி இரு.."என்று ஆறுதல் படுத்தினாள்.ஒருவகையில் என்னை ஆறுதல் படுத்துகிற அளவுக்கு தெளிவாகி விட்டாள் என்ற நினைப்பு இதமாய் இருந்தது.

"ண்டா. அவ பின்னாடி சுத்திட்டிருக்க...கேவலமாயிருக்கு..." என்றாள் அம்மா. 'அது உன் மனசின் வரையறை என்றால் புரிந்து கொள்ளவா போகிறாள்.

"லவ் பண்றியோ.."மறுத்து தலையசைத்தேன்.

"பின்னே?'

"பிரெண்ட்."

"என்னன்னு நம்புறது.ஊரு அப்படி இப்படி பேசுதே."

"அது நீ இருக்கிறதே பாவம்னு நினைக்கும்.அதுக்காக செத்துரமுடியுமா."

"சுத்தி வளைச்சி என்னை சாவுன்னு சொல்ற..அதானே...அதானே உன் ஆசை.. நேத்து வந்த பொட்டச்சிக்காக பெத்த அம்மாவையே செத்து போன்னு சொல்ல வந்திட்ட...ஆண்டவனே.."அம்மா நீண்டதாய் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

நான் சொன்னதை இப்படி கூட அர்த்தப்படுத்த முடியுமா? என்று யோசித்தபடியே,செய்வதறியாமல் நான் நின்ற சரியாய் அந்த வினாடியில் ஜெனிபர் வந்தாள்.அம்மா அழுகையை நிறுத்தி அவளை ஏறிட்டாள்.

'ஏண்டி உனக்கு ஊரு உலகத்தில வேற பயலுகளே கிடைக்கலியா.."ஜெனிபர் பேயை பார்த்துவிட்டவள் மாதிரி மிரண்டாள்.அம்மாவின் இந்த அதிரடி என்னையும் நிலைகுலைய வைத்தது.

"அம்மா என்ன ஆச்சி உனக்கு.என்ன இருந்தாலும் என்னை பேசு.அவளை திட்ட உனக்கு உரிமையில்லை."என்று சொல்லி பார்த்தேன்.கேட்டால்தானே..?

"...கொஞ்சம் லட்சணமா இருந்தா விடமாட்டியா.துரத்திகிட்டே திரியுற..."மூச்சு விடாமல் அம்மா கத்திக் கொண்டிருக்க நான் அவள் கையை பற்றி ஆவேசமாய் வீட்டிற்குள் இழுத்தேன்.

"அடிடா.. நல்லா அடி..கஷ்டப்பட்டு உன்னை ஆளாக்கிவிட்டேன் பாரு...தெருவில போற மினுக்கி உனக்கு பெரிசா போயிட்டா இல்ல...அடி..ஏண்டியம்மா இப்ப உனக்கு சந்தொசம்தானே..."அம்மா இன்னதுதான் என்றில்லாமல்சரமாரியாக ஏசிக்கொண்டிருக்க...தெரு கூடி சுவாரசியமாக வேடிக்கை பார்க்க..சிலைபோல் நின்றிருந்த ஜெனிபர் என்னை நிமிர்ந்து நோக்கினாள்.விழியில் நீர் திரண்டிருக்க...ஆவேசமாய் திரும்பி கூட்டத்தை பிளந்தபடி ஓட அரம்பித்தவள்தான்.எங்கே போனாள்..என்ன ஆனாள்...இன்னும் தேடிகொண்டுதான் இருக்கிறேன்.
__________________

தலைமுறை

சுள்ளென்ற வெயில்.வெறுமை ரீங்காரமிடும் பொழுது.இரண்டு நாளாய் ஊணுறக்கம் இழந்த களைப்பு. நடந்து நடந்து தலை கிறுகிறுக்க...சட்டென்று நட்ட நடு வெளியில் தரையில் உட்கார்ந்து விட்டேன்.உச்சி முதல் பாதம் வரை வியர்த்து வழிந்து..குளித்த மாதிரியாயிற்று.

மனசுக்குள் 'எங்கே..எங்கே'என்ற கேள்வியின் அரிப்பு.பார்வையெல்லாம் அவன் போலவே....மாய தோற்றங்களாகி...தேடுதல் எத்தனை சிரமமானது.இப்போதுதான் புரிகிறது.

அது சரி.யாரைத் தேடுகிறேன்.சொல்லவில்லையே.அருண்.உங்களுக்குத் தெரிந்திருக்காது.என் ஒரே மகன். அவனை..மூன்று நாட்களாக காணவில்லை.

முதலில்,வழக்கம் போல பின்னிரவில் வந்து வராண்டாவில் படுத்திருப்பான் என்று நினைத்து இருந்து விட்டேன்.மறுநாள் மதியம் வரை தேடத் தோன்றவில்லை. நேரம் ஆக ஆக என் மனைவியின் அங்கலாய்ப்பு அதிகமாக, "கழுதை வேறெங்கு போயிரப் போகுது.தாத்தா வீட்டுக்குதான்
போயிருக்கும்."என்று சமாதானப்படுத்தினேன்.

ஆனால் மாலையில் வந்து நின்ற தாத்தா,விசயம் அறிந்து குதியாய் குதித்தார்."நீங்க புள்ளையைப் போட்டு பாடாய் படுத்தியிருப்பிங்க.அதான் எங்காவது ஓடிப் போயிருக்கும்.ஒரு நிமிசம் இருக்க முடியாம பிள்ளையை நைநைனு நச்சரிச்சா வீட்டில இருக்க எப்படி மனசு வரும்.இப்ப எங்க போச்சோ...என்ன ஆச்சோ..." அவரது கத்தலில் எனக்கெ எங்காவது ஓடிப்போய்விடலாம் என்று தோன்றியது.ஒரு விசயம் மட்டும் உறுதியானது.அருண் எங்கேயோ ஓடிவிட்டான்.

சட்டையை மட்டிக் கொண்டு விசாரித்துக் கிளம்பினேன்.அருணின் கூட்டாளிக் கூட்டமே ஒரு மாதிரியானது.விதவிதமாய் தலைமுடியை அசிங்கமாய் வெட்டிக்கொண்டு,ஒவ்வா நிறத்தில் சட்டையும்,லுங்கியும்,வாயில் புகையும் சிகரெட்டும்...என்னைப் பார்த்ததும் விறைத்தான்கள். "அவன் இப்ப எங்க கூட வரதேயில்ல.." மொத்தமாய் கை விரித்தான்கள். இவனுகளே ஏடாகூடமாய் ஏதாவது பண்ணி தொலைத்திருப்பான்களோ.

ஆறு,குளம்,பாழடைந்த கிணறு எல்லாம் தேடிவிட்டு சோர்வாய் வீட்டுக்கு வந்தேன்.மாமனாரின் தொணதொணப்பு தொடங்கிற்று.

"இப்படி உட்கார்ந்தா ஆச்சா..போய் கண்டுபிடிங்களேன்...ஆங்..உங்களுக்கு என்ன கவலை.எப்ப போய் தொலைவான் நிம்மதினு நினைச்சிருப்பீங்க.இப்படி ஒரு மனுசனா..'

தலையே வெடித்தாலும் பதில் பேச முடியாது.பேசினால் பழைய சங்கதி ஒன்றை குத்திக் காட்டுவார்.அது நான் செய்த தவறுதான்.

அருண் அப்போது ஆறாவது படித்துக் கொண்டிருந்த நேரம்.முதல் முறையாக காணாமல் போயிருந்தான்.பள்ளிக்குப் போகாமல் வீராத்தோப்பில் ஒளிந்திருந்து விட்டு வருவதை காலையில் கண்டித்திருந்தேன்.அன்று பள்ளிக்குப் போனவன் வீடு திரும்பவில்லை.வீட்டில் ஒரே கதறல்.அக்கம் பக்கம் பரபரத்தது.ஆளாளுக்கு ஐடியா என்ற பெயரில் பயமுறுத்திய போது...கையை பிசைந்து கொண்டு நின்றேன். கோபம். 'ராஸ்கல்.வரட்டும்'கறுவினேன்.

ஸ்கூலில் போய் விசாரித்து வரலாம் என்று கிளம்ப,எதிரே மாவுமில் வாட்ச்மேனுடன் அருண் வந்து கொண்டிருந்தான்.

"என்ன சார்.புள்ளைய காணமின்னு தேடமாட்டீங்களா."பதில் சொல்வதை தவிர்த்தேன்."...எங்க மில் சுவரோரமா இருந்து அழுதுட்டு இருந்தான்.கிட்டக்க போய் பார்த்தா..இவன்."

வாட்ச்மேன் சொல்ல எனக்குள் கோபம் எகிறியது.அருண் சட்டையை கொத்தாய் பிடித்து தூக்கினேன்.மில்காரன் கத்தினான்,

"சார்,அடிக்காதீங்க.பாவம் குழந்தை மிரண்டு போய் இருக்கு."

" நீங்க போங்க சார். நான் பார்த்துக்கறேன்."

"இல்ல...குழந்தை...."

"அட.விட்டாச்சுல்ல...போய்யா உன் வேலையை பார்த்துகிட்டு.."

"ஆமா பெரிய இவுரு.குழந்தைகிட்ட வீரத்தை காட்டிட்டு...தூ...இவனெல்லாம் ஒரு ஆம்பளை.."

வாட்ச்மேனின் அவமதிப்பு பெரிதாய் உறுத்தியது.அது உள்ளுக்குள் ஜ்வாலையாய் பரவி...கண்மூடித்தனமாக விளாசினேன்.விக்கி விக்கி மூச்சுமுட்ட அழுதான்.வீசியெறிந்துவிட்டு குப்புற போய் படுத்தேன்.

அன்று இரவில் மனைவி என்னை உலுக்கி எழுப்பினாள்.குழந்தை உடம்பு தூக்கிதூக்கி போட்டது.ஜுரத்தில் உளறியது. "நான் படிக்க போலப்பா..சார் அடிக்காருப்பா.." எனக்கு துணுக்குற்றது.என்ன காரியம் பண்ணி விட்டேன். நொந்தேன்.

அள்ளி போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.ஆறு நாட்கள்.அனேக வசவுகள்.பணச்செலவுகள்...அவனை மீட்டெடுப்பதற்குள் நான் ரணமாகிப்போனேன்.

அன்றிலிருந்துதான் எல்லாரும் பேச்சுக்கு பேச்சி என்னை தூக்கி எறிவது என்றாயிற்று.அதிலிருந்து அவனை எதற்கும் கடிந்து கொள்வதில்லை.அப்படி ஒரு முடிவிற்கு வந்தேன்.ஒரு விசயம்.இந்த எனது கொள்கை அருணுக்கு மட்டும் ரொம்ப பிடித்து போயிற்று.ஏனென்றால் அன்று முதல் நான் அவனோடு பேசிக்கொள்வதேயில்லை.அது அவனுக்கு ரொம்ப சௌகரியமாயிற்று.

தட்டு தடுமாறி பத்தாவது வரை எட்டியவன் அதை தாண்ட மறுத்தான். தனிகல்லூரியில் படிக்கப் போனான்.படிப்பைத் தவிர சகல கலைகளும் கைகூடின.சினிமா,சிகரெட்,கூடா நட்பு...வெளியே வராண்டாவில் படுக்கை எடுத்து வைத்திருப்பான்.இரவில் பூனை போல் வந்து படுப்பான்.புகைவாசம் காட்டிக் கொடுக்கும்.

"ஏண்டா இப்படி ராத்திரியெல்லாம் சுத்தறே. எங்கெல்லாம் தேடறது."

"நானென்ன பச்சைகுழந்தையா தானே வரமாட்டனா"

"அதுக்காக உன் இஷ்டத்துக்கு வரது போறதா..

"அப்பா..வேணாம்.மிரட்டாதீங்க..சொல்லிட்டேன்."

'மிரட்டாதீங்க' என்று என்னை மிரட்டுகிறான் கோபம் வந்தது.காட்ட முடியாது.கூடாது.காட்டினால் அப்பா என்றும் பாராமல் எதிர்க்கத் தோன்றும்.சண்டை வரும்.அப்படி ஒரு சந்தப்பத்தை நாமாகத் தரக்கூடாது.

இதெல்லாம்விட மேலாக என் மனைவி.ஒரு நாலு நாளைக்கு மௌனவிரதம் அனுஷ்டிப்பாள்.முகத்தை திருப்பிக் கொண்டு காப்பி நீட்டுவதும்,சாப்பாட்டு தட்டை 'டங்'கென்று தட்டி கூப்பிடுவதும்...இதை விட கன்னத்தில் நான்கு அறை தந்து விட்டிருக்கலாம் என்று தோன்ற வைத்துவிடும்.

அதோடு இன்னொரு தொந்தரவும் இருக்கிறது.செய்தி எப்படிதான் எட்டுமோ தெரியாது.அடுத்த பஸ்ஸில் அவள் அப்பா வந்திறங்குவார். "எத்தனை ஆபீசருங்க கியூவில நின்னாங்க.போயும் போயும் ஒரு குமஸ்தாவுக்கு வாழ்க்கைபட்டு என் பொண்ணு என்ன நிம்மதிய கண்டா...தப்பு பண்ணிட்டேன்.."

எதற்கு இந்த உபத்திரவம்.பேசாமல் இருந்து தொலைப்போம் என்று வழக்கமாயிற்று.அதுவே இப்போது வினையாயிற்றோ.

இப்பொது அவனை எங்கு போய் தேடுவது.இப்படி கிடந்து தவிக்க விட்டு விட்டானே.'சவம் போனா போகட்டும்' என்று இருக்க முடியுதா.மனசு கிடந்து குமையுதே.என்னதான் கெட்டு குட்டிசுவரானாலும் மனசின் தவிப்பு இந்த பிள்ளைகளுக்கு எங்கே புரிகிறது.

வியர்வையை துடைத்துவிட்டு எழும்பி நடந்தேன்.எதிரே வந்த அலுவலக நண்பன் என் தோற்றத்தைக் கண்டு ஒரு டீ வாங்கி தருகிற அளவுக்கு பரிதாபப்பட்டான்."பேசாம போலிஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் குடு.அப்படியே பேப்பர்ல போடு."ஆலோசனை சொன்னான்."ஒரு அவசர சோலி.வரட்டா." காணாமல் போனான்.

ஸ்டேஷனுக்கு போனபோது பயமாயிருந்தது. "பையன் பேர் என்ன" என்று கேட்டதே கலக்கமூட்டியது.

"அருண்.வயசு பதினேழு.மூணு நாளா காணலை."அந்த அதிகாரி தனக்குள்ளே சொல்லிப்பார்த்துக் கொண்டார்.ஏற இறங்க பார்த்துவிட்டுச் சொன்னார்,"அந்த மூலைல ஒருத்தன் இருக்கான்.அவனான்னு போய் பாரு."இருட்டு மூலையில் கூர்ந்து பார்க்க,குத்துகாலிட்டு,குனிந்து இருந்தவன்... அட..அவனேதான்.

படாரேன்று பாரம் இறங்கிய மாதிரி இருந்தது.காணக்கிடைத்தலும் சந்தோஷம்தானே.ஓடிப் போய் கட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.அவன் நிமிர்ந்து பார்த்தான்.படக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டான்.

திடீரென்று அந்த கேள்வி எழுந்தது.'இவன் எப்படி இங்கே'"திருட்டு கேசு.பஸ் ஸ்டாண்ட்ல மாட்டினான்.."

"இல்ல சார் இவன் அப்படிப்பட்ட பையன் இல்ல."

அதிகாரி முறைத்தார், "அப்ப நான் பொய் சொல்றனா.உங்களுக்கு இந்த பையனை பத்தி என்ன தெரியும்."

தலைகுனிந்தேன்.அருண் திரும்பிப் பார்த்து என் தலைகுனிவை ரசித்தான் போலிருக்கிறது.

"லோக்கல் ஆளுங்கதான் பிடிச்சு கொண்டு வந்தானுங்க.அவனுக அடிச்சி கை காலெல்லாம் வீங்கியிருக்கு.பாருங்க ஒரு சொட்டு கண்ணீர் விட்டானா கேளுங்க. நாங்க எத்தனை விசாரிச்சாலும் முறைச்சிட்டு இருக்கான்.சரியான கிரிமினல்தான் இப்படி இருப்பான்."

"சார் திருடற அளவுக்கு அவன் போமாட்டான் சார்.."

"திரும்பவும் அப்படித்தானே சொல்றீங்க.டேய் வாடா இங்க. நீங்களே கேட்டுப் பாருங்க."அருகில் வந்தவனைப் பார்த்து நெஞ்சு பதறிற்று.உடம்பெல்லாம் அடிபட்டு அங்கங்கே வீங்கி போயிருந்தது.புறங்கையில் தடித்து..கொப்புளம் போல...

"என்னடா செய்த.பயப்படாம உள்ளத சொல்லிரு.."

நிமிர்த்து என்னை பார்க்கவே இல்லை.போலிஸ் அதட்டலுக்கு பிறகுதான் வாய் திறந்தான்.

" நைட் ஷோ பாத்திட்டு பஸ் ஏற வடசேரி வந்தேன்.பஸ் ஸ்டாண்டில ஒருத்தன் பக்கத்தில இருந்த பையை எடுத்துக் கேட்டான்.குடுத்தேன்."

"அட பாவி அவன் கேட்டா..அப்படியே குடுத்திடறதா.."

"கேட்டீங்களா.இவனுக எல்லாம் ஒரே குரூப்.ஆனா காட்டி குடுக்க மாட்டானுக."

போலிஸ் மேட்டர்.கையாள்வது எனக்கு பழக்கமில்லை.தவித்தேன்."இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்க சார்."

"விட்டுடறேன்.இவன் பையை குடுத்தது யாருன்னு சொல்லிரட்டும்.விட்டுறேன்."

"சொல்லேண்டா."

"எனக்கு தெரியாது."

"இவனை நாங்க விசாரிச்சிகிடறோம். நீங்க போங்க சார்."

என்ன செய்வது.எனக்கு எதுவும் ஓடவில்லை.அவமானத்தால் சிறுத்து போயிற்று.வெளியேறினேன்.கால் போனப்போக்கில் நடந்தேன்.சுற்றி நடப்பது எதுவும் புலனாகவில்லை.திடீரேன்று என்னை உரசியபடி ஒரு பைக் வந்து நின்றது."என்னப்பா கண்ணே தெரியாத மாதிரி போய்கிட்டிருக்க." கேட்டவனைப் பார்த்ததும் எனக்கு ஜீவன் வந்தது போல் இருந்தது. செல்வபாபு.ஒண்ணா படிச்சவன்.இப்ப கட்சி ஆள்.அவனை பிடித்துக் கொண்டேன்.குமுறலை கொட்டித் தீர்த்தேன்."ப்பூ..இவ்வளவுதானா.இதுக்க இப்படி பித்து பிடிச்ச மாதிரி அலையிற.கவலையை விடு. நீ இப்ப என்ன பண்ற. நேரா வீட்டுக்கு போ.ஒரு ஐயாயிரம் ரூபா ரெடி பண்ணு.அப்படியே சாயுங்காலம் ஆறு மணிக்கு இங்க வந்து நில்லு.மத்ததை நான் பார்த்துக்கறேன்." என்றான்

"ஐயாயிரமா" நான் வாய் பிளந்ததை கண்டு நகைத்தான்."ஆமாம்பா, நீ சொல்ற மேட்டருக்கு கொஞ்சம் செலவு இருக்குப்பா." போய் விட்டான்.

வீட்டுக்கு வந்து விசயத்தை சொன்னால் 'ஓ'வென்று மனைவி அழுதாள்.பணம் வேண்டும் என்றறிந்ததும் மாமனார் குதித்தார்."ஒரு ஐயாயிரம் பணம் கூட எடுக்க துப்பில்ல. என் மக எப்படிதான் குப்பை கொட்டுறாளோ." சம்பந்தமில்லமல் ஆவேசப்பட்டார்.

எப்படியோ பணம் புரட்டி அரக்க பரக்க ஆறு மணிக்கு போய் நின்றால் செல்வபாபுவைக் காணவில்லை.ஆறு,ஆறரை ஆயிற்று.ஏழாயிற்று.கிலி பிடித்தது.பாவி ஏமாற்றிவிட்டானா. நகத்தை கடித்து துப்பி விசனப்பட்டுக் கொண்டிருந்தேன்.பசியில் காது அடைத்து,மனசுக்குள் பரபரப்பு எழுந்தது.பைத்தியம் பிடித்துவிடும் என்ற கட்டம் வந்ததும் ஜிபும்பா மாதிரி பாபு வந்தான்.மணி ஏழரை..."என்னப்பா பண்றது.வரவழியில ஒரு லோக்கல் மேட்டர்.பைசல் பண்றதுக்குள்ள நேரம் ஆகிப்போச்சி...சரி..சரி பணத்தை எடு..பையன் பேரு என்ன சொன்ன.."சொன்னேன்.பணத்தை மடியில் செருகிக் கொண்டான்.உள்ளே நுழைந்தான்.

அவனுக்கும் அங்கு வேறு பல வேலைகள் இருந்ததோ என்னவோ,யாரிடமெல்லாமோ தனித் தனியாகப் பேசினான்.சுற்றி சுற்றி அவன் காட்டிய பாவ்லாவிற்கு என் பதட்டம் அதிகரித்தது.நாற்பது நிமிஷத்திற்கு பிறகு அருணுடன் திரும்பி வந்தான்."அப்பப்பா. கேசு பெரிய சிக்கல்பா..ஏதோ நான் தலையிட்டதுனால சால்வ் ஆச்சு.இல்லேன்னா மேட்டர் பெருசாயிருக்கும் தெரியுமா."திருப்தியாயிருந்தது.

"பெரிய ஆளுப்பா நீ' என்றேன்.திரும்பி அருணை பார்த்தேன்.வேறெங்கோ வெறித்துக் கொண்டிருந்தான்."பாரு.உனக்காக எவ்வளவு பெரிய ஆளு..வேலையெல்லாம் விட்டுட்டு வந்திருக்காரு.ஒரு தாங்ஸ் சொல்லேண்டா."

அவன் திரும்பி பாபுவை பார்த்த பார்வையில் நட்பு தெரியவில்லை

"..சரி..பையனை விரட்டாதே.வீட்டுக்கு போங்க தேடிட்டு இருப்பாங்கல்ல."

வீட்டுக்கு வந்தால்..அவனுக்கு ஆரத்தி எடுக்காத குறைதான்."இனியாவது புள்ளையை பத்திரமா பாருங்க.கண்டதுக்கும் ஏசி தொலைக்காதீங்க." மாமனாரின் உபதேசம்.எனக்கு தாங்க முடியாத கோபம்,

"மரியாதையா வாய மூடிட்டு இருக்கணும் எல்லாரும்.சத்தம் போட்டீங்க என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..." கோபமாய் கத்தினேன்.மீறினால் என்ன செய்வதென்று உண்மையிலே எனக்கு தெரியாதுதான்.ஆனால் ஆச்சரியம்.எல்லாரும் கப்சிப். "வீட்டில இருந்துகிட்டு ஆளாளுக்கு அதிகாரம் பண்றீங்க.எனக்கு ஒத்தாசையா ஒரு துரும்பை எடுத்து போட்டீங்களா.வந்திட்டாங்க பெரிசா.."

அப்படியே போய் சாய்வு நாற்காலியில் மல்லாந்து படுத்தேன்.ஆயாசத்தில் கண்கள் மூடின.திடீரென்று என் பக்கத்தில் யாரோ நிற்பது போல் பிரமை தட்ட..விழித்தேன்.அருண் நின்றிருந்தான்."சாரிப்பா" என்றவன் கடைசியாய் செய்த செயலுக்குதான் நான் இன்னும் திகைத்து போய் கிடக்கிறேன்.

என்னை கட்டிகொண்டு என் கன்னத்தில் அவன் தந்தது ஒரு...ஒரு...முத்தம்

என் நினைவாகச் செய்யுங்கள்.

திடுதிப்பென்று ஒரு எதிர்பாராத நேரத்தில் மழை துவங்கியதும் இவன் அரண்டுதான் போகிறான்.'இதென்ன கொடுமை' என்று வேதனை மண்டிற்று.

மழை சுகம்தான்.வாடிய பயிருக்கும்,வறண்ட பூமிக்கும் மழை சுகம்.ஆனால் வெயில் நம்பி பிழைப்பவனுக்கு...இந்த மழை சுகமல்ல...சோகம்.இவன் ஒதுங்க மறந்து யோசிக்கிறான்.

இந்த மழையிலும் குடை பிடித்த ஜனங்கள் கோயிலுக்கு போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.என்னமோ தெரியவில்லை.இந்த திருவிழா காலத்தில் மட்டும் மக்களுக்கு வருகிற பக்தியே அலாதியானதுதான்.

ஆயினும் இவன் கடவுளை நம்பிதான் பிழைக்க வந்திருக்கிறான்.திருவிழா தலங்களில் கடவுள்தான் இவன் மூலதனம்.வண்ண வண்ண பொடிகளும் கரித்துண்டும்தான் உபகரணம்.

இவன் முறையாய் ஓவியம் கற்றவனில்லை.பொழுதுபோக்காக கிறுக்கி,அழித்து,திருத்தி...மீண்டும் கோடு கிழித்து..பழகிப் பழகி...தனக்குத் தானே குருவானவன்.


இவன் ஆரம்ப கால முயற்சிகள் ஒரு திருப்திக்காக மட்டுமேயிருந்தது.எந்த நோக்கமும் இருந்ததில்லை.பிச்சைக்கார முடவனுக்கு பெரிதாய் என்ன நோக்கமிருந்துவிடப் போகிறது.ஒரு நாள் சாலை ஓரத்தில் ஏதோ ஒரு படத்தை வரைந்துவிட்டு அருகில் மர நிழலில் ஒய்வாய் சாய்ந்தவன் விழித்து பார்த்தபோது அவன் ஒவியம் பணம் சம்பாதித்திருந்தது.ஏதோ சில புண்ணியவான்கள் இவன் திறமைக்காக விட்டெறிந்த சில்லறைகள்...பிறகு...அதுவே தொழிலாயிற்று. நடக்க முடியாத ஊனத்தை மறந்தான்.சக்கர வண்டியால் உந்தி நகர்ந்து செல்லும் வேதனை மறந்தான்.பிச்சை எடுப்பதைக் காட்டிலும் இதில் ஒரு நிறைவு உணர்ந்தான்.திறமையின் வெளிப்பாட்டில் ஒரு திருப்தி இருந்தது.ஆகவே கரித்துண்டும்,கலர்பொடிகளுமாய் கூட்டம் கூடுகிற எங்கும் சென்றான்.

இதோ...இந்த திருவிழா கூட்டத்திலும்...கோயிலின் பிரதான பாதையில் நூறு மீட்டருக்கு முன்னே சாலையில் மழை ஈரத்தை ஒற்றியெடுத்து கோடு கிழிக்க ஆரம்பிக்கிறான்.அந்த பகுதி வாகன பொக்குவரத்தை அடியோடு நிறுத்தி விட்டது இவனுக்கு வசதியாய் போயிற்று.

இவன் கிழித்த கோட்டை தொந்தரிக்காமல் ஜனங்கள் விலகி ஓரமாய் செல்வதைப் பார்க்க இவனுக்கு பெருமையாய் இருக்கிறது.என்னதான் ஆனாலும் மனிதன் ரசனையை இழந்து விடவில்லை என்று நினைத்துக் கொள்கிறான்.

ஆலயத்தின் பிரார்த்தனை,வியாபார கூக்குரல்களையும் மீறி ஒலிக்கிறது."இது என் இரத்தம்.இதை என் நினைவாகச் செய்யுங்கள்"இவன் அப்போதே தீர்மானிக்கிறான்.சிலுவையில் தொங்குமந்த ஏசுவின் உருவம்.அவர் சிந்திய ரத்தம்.இவற்றையே சித்திரமாக்கி விடுவதென்று.

அதென்னமோ தெரியவில்லை.இவனுக்கு அந்த சிலுவை மரத்தை வரைகிறபோது மட்டும் மிகவும் நெகிழ்சியாகிவிடுகிறது.அந்த கொடூர நிலையை கனத்த நெஞ்சுடந்தான் வரைய வருகிறது.தொங்கும் அந்த வேதனை முகம்,அதில் குத்திய முள் கிரீடம்,கை துளைக்கும் ஆணிகள்,ஈட்டி பிளந்த மார்பு...அவற்றில் வடியும் இரத்தம்...அவனுக்கு இந்த ஏசு கடவுளை மிகவும் பிடித்துபோனது.அவர் பட்ட கொடுமைகள் இவனுக்கு வலித்தன.அவர் சிந்திய இரத்தம்...வரையும் போது கை நடுங்கும், நெஞ்சு படபடக்கும்.

இவன் இந்த மதம்தான் என்றில்லை.எந்த மதம் என்று கூட தெரியாது.ஆனாலும் இந்த இயேசு இவனை நிரம்ப பாதித்திருக்கிறார்.

இப்போது இவனைச் சுற்றி கும்பல் கூடி விடுகிறது.இவன் சிலுவையில் சோர்ந்து தொங்கும் இயேசுவை வரைந்து விலாவில் ஈட்டி செருகும் காட்சி வரைகிறான்.ஈட்டி குத்தும் போது வலிக்காதா?கண்ணீர் வராதா?இவன் மாதிரிக்குப் பார்த்த எந்த படத்திலும் இயேசுவுக்கு கண்ணீர் வரவில்லை...ஏனென்று புரியவில்லை.

ஜனங்கள் இவனைப் பாராட்டும் வார்த்தைகளையும், சில்லறைகளையும் வீசிவிட்டுச் செல்ல...இவன் தன் பலகை வண்டியை இழுத்துப்போட்டு ஒரமாய் உட்காருகிறான்.வரைந்த ஓவியத்தை உற்று நோக்குகிறான்.ஒரு கரித்துண்டு வரைந்த கோடுகள் இத்தனை உணர்ச்சிகரமானவையா..?அதோ அந்த முகத்தைப் பார்க்க பரிதாபம் பொங்குகிறதே..இந்த ஈட்டி செருகுகிறவனின் முக குருரம்...ஓ! என்றென்றும் நஞ்சிருக்கும் பாத்திரம்தான் நல்லவருக்கு வாய்த்திருக்கிறது...ஆயாசமாயிற்று.வாழ்க்கை தியாகங்களின் அர்த்தம் புரியாமல் போகிறது.

பார்த்துக் கொண்டேயிருந்தவனுக்கு திடீரென்று அந்த வித்தியாசம் புரிந்தது...விலா காயத்தில் இரத்தம் நிறம் வரைய வில்லை..அட..எப்படி மறந்து போயிற்று.ஆலயத்துக்கு செல்வோர் எல்லாம் இவனையும் இவன் படத்தையும் பார்த்துவிட்டு மெச்சுவதும்,காசு போடுவதுமாகச் சென்றுக் கொண்டிருக்க-திடீரென்று பின்னால் பேச்சுக்குரல் கேட்கிறது.

"ஆமாண்ணே..இன்னிக்கு இந்த திருவிழா யார் தலைமையில நடந்திருக்கவேண்டியது.உன் தலைமையில..ஒரு ஓட்டிலே உன் பதவிப் போச்சி.."

"அத வுடு. நேத்து முளைச்ச ஒரு பரதேசிப் பய.. நான் இருக்க வேண்டிய இடத்துல இருந்துட்டு... அவனுக ஒழுங்கா எந்த காரியமும் நடத்தவிடக் கூடாது.பேரவையோ மண்ணாங்கட்டியோ... அது நடந்தா நம்ம தலமையிலதான் நடக்கணும்...என்ன சொல்ற.."

"அதானே.."

"இன்னும் என்ன பார்த்துட்டு நிக்கற...புகுந்து வெளையாடுங்க. போடுற அடில எல்லாவனும் என் கால்ல வந்து விழணும்..."

கும்பல் கூச்சலும் ஆவேசமுமாக கோயிலை நோக்கி விரைய... இவனுக்கு விபரீதம் புரிந்தது..ஏதோ நடக்கப் போகிறது.மனிதனுக்கு மதம் பிடித்து விட்டது. உடனடியாக இடத்தை காலி செய்யவேண்டும்.

இவன் நினைத்துக் கொண்டிருக்கையிலே கூட்டம் அலைமோதியது. முன்னோக்கி நகர்ந்த கூட்டம் பின்னோக்கித் திரும்பியது. "போலீஸ் அடிக்கிறாண்டோய்" என்றொரு கூச்சல்.பக்த கூட்டம் அலறியடித்து ஓட ஆரம்பிக்க...இவன் செய்வதறியாது திகைத்தான்.கூட்டம் இவனைக் கடந்து ஓடிக்கொண்டிருக்க இவன் படத்தில் விழுந்த காசுகளை பொறுக்க குனிகிறான்.சரெலென்று எவனோ இவனை மிதித்துக்கொண்டு தாண்டிப் போக.. நச்சென்று முகம் குப்புற விழுந்து இரத்தம் கொட்டிற்று.வடிந்த இரத்தம் இயேசுவின் ஈட்டி குத்திய காயத்தை ஈரப்படுத்திற்று.சுதாரித்து எழுவதற்குள் மீண்டும் எவனோ மிதிக்க...மேலும் இரத்தம் கொட்டி...எங்கும் பரந்து....

நாளைய பத்திரிகையில் முழு விவரங்கள் தெரியவரலாம்.

அப்பா

ப்பா சாகக் கிடக்கிறாராம்.நெஞ்சு வலியால் துடிக்கிறாராம்.' எதேச்சையாய் பார்த்த இவன் ஊர்காரர் சொன்ன பொது கவலை வரவில்லை.'எக்கேடு கெட்டால் என்ன?நல்லா அனுபவிக்கட்டும்'என்று தோன்றியது.அந்த மனுஷன் தான் செத்தாலும் என் மூஞ்சில முழிக்காதேன்னு சொல்லிட்டாரே...படட்டும்.அவர் புத்திக்கு இப்படித்தான் படனும்.'மனசுக்குள் கோபம் கோபமாய் வந்தது.
ஆனால்,கூடவந்த இவன் மனைவி சாந்திக்குதான் பொறுக்கவில்லை.'இந்த சமயத்தில கூட போய் பார்க்கலேன்னா நாம மனுசங்களே இல்ல.'என்று நச்சரிக்கத் தொடங்கினாள்.எரிச்சல் வந்தது.வேண்டா வெறுப்பாய் தலையாட்டி வைத்தான்."போவோம்.ஆனா ஒரு கண்டிசன்.நான் அந்த மனுஷன் முகத்தில முழிக்க மாட்டேன்."

தோ..விரையும் பேருந்தில் சிலுசிலுக்கும் காற்றுக்கு கண் மயங்கி கிடக்கையிலும்...மனசுக்குள் புழுக்கமாய் அந்த நினைவுகள்.இத்தனை நாள்களாய் மறந்து இருந்த அந்த கசப்பு.இப்போது நினைத்தாலும் வலிக்கும் அந்த காயங்கள்...பசுமையாய் இப்போதும் நினைவிருக்கிறது.
விரிந்து பரந்த ஐக்கானகுளம்.மறுகால்,அதில் குதித்து மூழ்கி எழும் சுகம்.எல்லாம் கண்ணில் நிழலாடுகிறது.
திடீரென்று காட்சி மாறுகிறது.
குளக்கரையில், மாட்டை அடிக்க பயன்படுத்தும் சாட்டையுடன் அப்பா.இவன் அவசரமாய் கரையேறி...ஈரமாய் நகர..இழுத்துப் பிடித்து பளீரென்று சாட்டையால் விளாசி...தீ சுட்ட மாதிரி வலி.'தண்ணில குதிச்சு விளையாடினா உருப்படுவியா நாசமத்துப் போறவனே.எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா நாய்க்கு பிறந்தவனே...'ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அடி.நண்பர்கள் பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருக்க , பட்ட அடியை விட, அவமானம் அதிகம் வலித்தது.
பாட்டிதான் ஒரே அரவணைப்பு.'அப்பனா அவன்.மிருகம்.புள்ளைய இப்படியா அடிக்கிறது.காட்டுமிராண்டி!'பாட்டி இப்படி பேசுவது பிடித்திருந்தது.அந்த வார்த்தைதான் அப்பா மீது வெறுப்பை வளர்த்தது.அந்த உறவே பொய்யாய் தோன்றச் செய்தது.சிறை மாதிரி வாழ்க்கை.மாயானம் போல் வீடு.எல்லாமே கசந்தது.
பாட்டி மரித்தபின் இந்த கசப்பு இன்னும் அதிகமாயிற்று.அப்பாவை மறக்க வேண்டும்.எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
அப்போதுதான் அந்த வாசஸ்தலம் அறிமுகமானது.ஊர் எல்லையில் சாலையோர பாலத்தில் எப்போதும் காணும் இளவயசுக்கூட்டம்.வெட்டிப் பேச்சுகளோடு சுகமாய் பொழுது போயிற்று.எல்லாம் மறக்க முடிந்தது.நல்லது கெட்டது எல்லாம் கற்றுக் கொடுத்த அவர்கள் சிநேகம் தவிர்க்க முடியாது போயிற்று.அப்பாவின் கோபத்தையும் மீறி அந்த இடம் ஈர்த்தது.
அப்படி சகஜமாகிப் போன ஒரு நாளில் தான் அந்த துரதிஷ்டம் நேர்ந்தது.இவன் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நாள் அது.சென்னைக்கு ஒரு இண்டர்வீயுவுக்கு போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தான். சாயங்காலம் வழக்கமான இடத்துக்கு அவர்களை தேடிப் போன போது ஆளுக்கொரு சைக்கிளில் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
"என்னடா.எங்க கிளம்பிட்டீங்க." என்ற போது யாரும் பேசத் தோன்றாமல் நின்றனர்.சுந்தர்ராஜன் கண் சிவந்திருந்த்தான்.குடித்திருந்தானோ என்னவோ...
"முதல்ல சைக்கிளில் ஏறு.போய்க்கிட்டே பேசுவோம்..."ஏறியவன்,"சொல்லு" என்றான்.
"உனக்கு அசோக்நகர் பழனியை தெரியுமில்ல."
"ஆமா.அவனுக்கென்ன..."
"அவனுக்கென்னவா..திமிரு..நம்ம ரவியை பின்னி எடுத்திட்டான் தெரியுமில்ல..."
"ரவியையா....எதுக்குடா..என்ன பண்ணினான்."
"உனக்குத்தான் தெரியுமே.எலெக்சன்ல கள்ள ஓட்டுப் போட பழனி வந்தப்போ ரவி புடிச்சி உட்டுட்டான்ல...அந்த கோபம்...சுங்காங்கடைகாரனை அடிச்சா எவன் கேட்பான்னு நினைப்பு...விடக்கூடாதில்ல...." அருள்மணி ஆவேசப்பட்டான்.
இவர்கள் போனபோது பழனி தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான்.சுந்தர்ராஜன் இங்கிருந்தே கத்தினான்."டேய் பழனி.....பொறுக்கி நாயே.."
திரும்பிப் பார்த்த பழனி கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டே ஓடி வந்தான்.சுந்தர்ராஜன் நெருங்கி போய், "நீ என்ன பெரிய ரவுடியா..பிச்சிபோடுவேன் பிச்சி...ராஸ்கல்.ரவியை ஏண்டா அடிச்ச.." என்றான்.
சலசலப்பு கேட்டு பக்கத்து வீடுகளில் மனிதர்கள் எட்டிப்பார்த்து வெளியே வர,பழனி குரல் உயர்த்தினான்."ஆமாண்டா.அப்படிதான் அடிப்பேன்.எங்க தெரு பொண்ணுங்க வெளியே வர முடியல்லை.சுத்தி சுத்தி கிண்டலடிக்கிறான்...ஆமா...இப்ப உனக்கு என்ன செய்யணும்..."
"படவா....அடிச்சிருவியா நீ..."எதிர்பாராமல் அருள்மணி,பழனியின் சட்டையை எட்டிப்பிடிக்க...ஆவேசத்திலிருந்த இரு கோஷ்டிக்கும் இது சிக்னல் கொடுத்த மாதிரியிருந்தது.படபடவென்று அடித்துக்கொண்டனர்.
சுற்றி நின்றவர்கள் சுதாரித்து,குறுக்கே புகுந்து விலக்கி விடுவதற்குள் இருபக்கமும் ரத்த காயங்கள்.ஆவேசத்துடன் பிரிந்தனர்."இதோட முடிஞ்சிட்டதுன்னு நினைக்காத...மவனே உன்னை ஒரேயடியா முடிச்சிட்டுதாண்டா மறுவேல.." போதையிலிருந்த சுந்தர்ராஜன் கோபமாய் மிரட்டிவிட்டு வந்தான்.
ந்த பழனி மறுநாள் காலையில்,தாமரை நிறைந்த கழுவன் குண்டு குளத்தில் பிணமாக மிதந்து கொண்டிருந்ததான்.
அதிர்ச்சியானார்கள்.
போலிஸ் விசாரணை பத்து மணிக்குள் இவர்களை அடையாளம் காட்ட, நாயைப் போல அள்ளிக் கொண்டு போனார்கள்.
குளத்தில் பிணம்.கொலையாளிகள் கைது.சட்டை கழட்டிய உடம்புடன் படம் போட்டு மாலை பத்திரிகை செய்திவந்தது.

அப்பா அதிர்ச்சியில் உறைந்து போனார்.
விசாரிக்க வந்த நிருபரிடம்,"அவன் என் புள்ளையே இல்ல.கொலைகார பய.இதுவும் செய்வான்.இன்னமும்செய்வான்.அவனப்பத்தி என்கிட்ட கேட்காதீங்க.அவனுக்கும் எனக்கும் எந்த உறவுமில்ல."என்று ஆவேசப்பட,அதுவும்மறு நாள் பேப்பரில் செய்தியாயிற்று.
கொஞ்ச நஞ்சமிருந்த உறவும் அன்றே அறுந்து போனது.

ப்புறம்...அந்த ஏழு மாத இருட்டு.யாருமில்லாத தத்தளிப்பு.அறிமுகமாகாத சூழ்நிலை.ஆட்கள் பார்க்காது முகத்தைமூடி...கோர்ட்..மறுபடி ஜெயில்.
கசப்பின் உச்சம் இங்கேதான் உணரமுடிந்தது.

எட்டாவது மாத துவக்கத்தில் பழனியின் கூட்டாளி ஒருத்தன் கொலையாக,வழக்கு திசைமாறிற்று.இரண்டு மாத தேடல்வேட்டையில் அகப்பட்டவன்,பழனி கொலையையும் ஒத்துக்கொள்ள..'அப்பாடா'என்றிருந்தது.வெளியெ விட்டதும் ஊருக்குப் போக வெறுப்பு வந்தது.

பிறகு என்ன...மதுரைக்கு லோடு ஏற்றி வந்த லாரியில் பயணமாகி..செண்டிரல் மார்கெட் வந்து,சுமை தூக்கி,ஏலம்நடத்தி,ஆதரவளித்த சாந்தியை மணந்து..ஒன்பது ஆண்டுகளில் சிறு வியாபாரியாகி...

தோ வந்தாயிற்று.

வயசான மாதிரி சிதிலமடைந்திருக்கிறது.உள்ளே நெருக்கடியாய் நிறையபேர்.இவன் வாசலிலேதங்கிவிட,குழந்தையுடன் உள்ளே நுழைந்தாள் சாந்தி. அம்மாவின் ஒப்பாரி,தங்கையின் முகச்சுளிப்பையும் மீறி,குழந்தையின் 'தாத்தா' என்ற குரலுக்கு,அப்பா எழமுற்பட்டார்."படுத்தேயிருங்க"தங்கையின் அதட்டல்.

"ஆஸ்பத்திரிக்கு போனிங்களா...என்ன சொன்னாங்க?" சாந்தியின் கேள்விக்கு, நெடுநேரத்துக்கு பின்தான் ஒரு பயந்தகுரல் பதில் சொல்லிற்று. "போக வேண்டாம்னு அவரே சொல்லிட்டார்."

சாந்திக்கு கோபம் வந்தது.என்ன மனிதர்கள்.'எப்போ சாவார்.எப்போ தூக்கலாம்'என்று காத்திருக்கிற மாதிரி...அவசரமாய் வெளியே வந்தாள். "ஆட்டோ பிடிச்சிட்டு வாங்க.ஆஸ்பத்திரிக்கு போலாம்." இவனுக்கு உத்தரவிட்டாள்.

இவன் வேண்டா வெறுப்போடு கிளம்ப,உள்ளே அம்மா ஒப்பாரியை நிறுத்தி விட்டு கத்தினாள்." நாங்களா கூட்டிட்டுபோக மாட்டோம்னு இருக்கோம்.மனுஷன் எங்கேயும் வரமாட்டேன்னு அடம் பிடிச்சா...என்ன செய்யிறது.."

இவன் ஆட்டோவோடு வர,"வாங்க..வந்து ஒரு கை பிடிங்க.." என்றவளை முறைத்தான்.

இவன் முக மாற்றம் கண்டு சாந்தி அருகில் வந்தாள்.இவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள்.'உங்கரோஷத்தைக் காட்ட இது நேரமில்ல.உங்க பிள்ளை இதுமாதிரி நிலமையில உங்களை வெறுத்திச்சுனாதாங்குவீங்களா?."
அவள் குரலில் இருந்த கோபம் இவனுக்கு திகைப்பூட்டியது."...செத்த பாம்பை அடிக்கிறது ஒண்ணும் வீரம் இல்ல.மன்னிக்கதான் நிறைய தைரியம் வேணும்.மூணாம் மனுஷன் மாதிரி ஒதுங்கி நிக்காம வாங்க."

இவனுக்கு உள்ளுக்குள் கோபம் எழுந்தாலும் எதுவும் பேசத் தோன்றவில்லை.தயக்கமாய் உள்ளே நுழைந்தான்.

கட்டிலில் படுத்துக் கிடந்த அப்பா கண் விழித்தே இருந்தார்.தேகம் மெலிந்து கன்னம் குழிந்து..அடையாளமேதெரியவில்லை. நெஞ்சை பிடித்துக் கொண்டு மூச்சுக்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தவர் கண்களில்,இவனைப்பார்த்ததும் ஒரு பிரகாசம். இவன் அருகில் போய் தூக்கி நிறுத்த,மறுப்பு சொல்லாமல் எழுந்து வந்தார்.

ஆட்டோவில் போகும்போது,அப்பா,கரையில் எடுத்துப் போட்ட மீன் போல வாயை பிளந்து பிளந்து மூச்சுவிட்டார்.நெஞ்சை அழுத்தி பிடித்துக் கொண்டு...கண்கள் செருக..'பாவி சும்மா கிடந்தவரை கூட்டிப் போய் கொன்னு போட்டியே கொலைகாரபயலே.' யாரோ சொல்வது போல் பிரமை.
அப்பா இவன் தோளில் சாய்ந்து கொண்டார்.ஆட்டோ குலுக்கலில் அவர் வேதனை அதிகமாவதை உணர முடிந்தது.ஆறுதலாய் எதுவும் சொல்ல சங்கோஜமாயிருந்தது.காதருகே என்னமோ முனகுகிறார்.குனிந்து உற்றுக் கேட்டான்.

"இத்தனை நாளா நீ வருவேன்னுதாம்பா உயிரை கையில பிடிச்சிட்டு இருந்தேன்.இப்பதான் நிம்மதி ஆச்சி.இந்தஉசிரு...இந்த உசிரு..உன் மடியில்தான் போவணும்.என்னை...என்னை..வெறுத்திடாதே மக்களே..என்னை விட்டு போயிராதே ராசா..."மேலே பேசமுடியாமல் அப்பா திணற..இவனுக்கு சிலீரென்று எதுவோ உடைந்து பெருக்கெடுத்தது போல் இருந்தது.இப்படி இவர் பேசக் கேட்பது புதிது.

அடிக்க வருகிற எதிரியை எதிர்க்கலாம்.ஆனால் காலில் விழுந்து கதறினால்...?

'அப்பா'என்று மனசுக்குள் கேவல் எழுந்தது.

ருத்துவமனையில் இவர் நிலைமையைப் பார்த்து அவசரமாய் இயங்கினர்.அந்த அகால நேரத்திலும்முணுமுணுக்காமல் டாக்டர் வந்தார்.அப்பாவை பூப்போல தூக்கிக் கொண்டு அவசர பிரிவிற்குள் நுழைந்தனர்.கண்ணாடி கதவுக்கு இந்தப் பக்கம் நின்று பார்த்த போது உள்ளே அப்பாவை சுற்றி இயந்திரங்களும், நர்சுகளும்பரபரப்பாக... அவர் முகம் தெரிந்த போது ஆக்சிஜன் பொருத்தி இருப்பது தெரிந்தது.தண்ணீரில் மூழ்குகிறவன்மாதிரி தவித்தார்.

சற்று நேரத்தில் டாக்டர் வெளியெ வந்தார்.கோபமாய் ஏறிட்டார்.." நீங்க படிச்சவங்கதானே.ஆரம்பத்திலே வரதுக்கென்ன.இனி என் கையிலே எதுவுமில்ல.என்ன வேணா நடக்கலாம்."

நர்ஸ் வந்து கையெழுத்து வாங்கிக் கொண்டாள்.இவனுக்கு முதல் முறையாக அப்பாவுக்காக அழத்தோன்றியது.விசயம் அறிந்து சாந்தி இடிந்து போய் உட்கார...ஆயாசமாய் அண்ணாந்து பார்த்தான்.சுவரில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் வாசகம் கண்ணில் பட்டது.' மன்னியுங்கள்.மன்னிக்கப்படுவீர்கள்.'
பொருள் பொதிந்த வார்த்தைகள்.புத்தியில் பளிச்சென்று ஒட்டிக்கொண்டது.

"டாக்டர், நான் உள்ளே போய் பார்க்கலாமா.."
அனுமதித்ததும் அப்பாவின் அருகே போய் அமர்ந்தான்.எல்லாம் முடிந்து போய் கிடக்கும் அந்த உடல்...பார்க்கபரிதாபமாயிருந்தது.

இயந்திரங்களின் இயக்கம் படித்துவிட்டு இன்ஜெக்சன் போட்டனர்.அரைமணி நேரத்திற்குப் பின் இவர்கள் தனிமையில் விடப்பட,அப்பாவை தூக்கி மடியில் கிடத்திக் கொண்டான்.'மன்னிக்கிறதுக்கு ரொம்ப தைரியம் வேணும்' சாந்தி சொன்னது நினைவில் வந்து போனது.

"அப்பா" மெதுவாய் கூப்பிட்டான். "இப்ப எப்படி இருக்கு"கண் மூடித் திறந்தார்.அர்த்தம் புரியவில்லை. நெஞ்சு பாரமாயிற்று.'என்னை பெற்றவர் எப்படிஎதிரியானார்.'குழப்பத்துக்கிடையே இப்போது யோசனை வந்தது.
அப்பாவுக்கு உண்மையில் என்மேல் நிறைய அன்பு இருந்திருக்குமோ, நான் என் மகனிடம் வைத்திருப்பதைப்போல.தகப்பன் எப்படி பகைவனாயிருக்க முடியும்,இல்லையா?ஏனோ அவருக்கு அன்பை வெளிக்காட்டதெரிந்திருக்கவில்லை.பாட்டி வெறுத்தாள்.அவளுக்கு என்ன கோபமோ அவள் சொன்னதால் நானும்வெறுத்தேனோ.!அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

உணரப்படாத அவர் அன்பை அனுபவிக்க வேண்டும் போல் ஆசை எழுந்தது.குனிந்து பார்த்தான்.அப்பா கண்மூடிக் கிடந்தார்.இ..ழு..த்..து மூச்சு விடுகையில் உடல் நடுங்கியது.

இவருக்கு நிறைய துயரிழைத்து விட்டேன்.எந்த நிம்மதியையும் தரவில்லை.
'அப்பா உங்களுக்கு ஒண்ணும் ஆகாது.தைரியமாக இருங்க. நான் இருக்கேன்.உங்க கூடவே இருக்கேன்.இனிவிட்டுட்டு போகவே மாட்டேன்.எதுக்கும் கவலை படாதீங்க.உங்களை புரிஞ்சிக்காம ரொம்பஅவமானப்படுத்திட்டேன்.உங்க அக்கறையை கோபம்னு தப்பா நினைச்சிட்டேன்.என்னை மன்னிச்சிடுங்கப்பா...'
இப்படியெல்லாம் பேசத் தோன்றியது.பேசினால் அவருக்கு ஆறுதலாய் இருக்கும்.ஆனால், நா எழவில்லை.குறுக்கேசுவர் எழுப்பி தடுத்த மாதிரியான உணர்வு.தொண்டையில் அழுகை முட்டி மோத..விழியிலிருந்துவழிந்த கண்ணீர் ஒருசொட்டாய் அப்பாவின் புறங்கையில் விழுந்தது.
திடுக்கிட்டு அப்பா நிமிர்ந்தார்.இவன் முகம் பார்த்து பதைத்தார்.இவன் கையை எடுத்து நெஞ்சோடு சேர்த்துஅழுத்திக் கொண்டார்.அந்த ஒரு பிடிப்பே எல்லா தடைகளையும் உடைத்து எறிந்த மாதிரி உணர்வேற்படுத்த...
இவனுக்கு சிலிர்த்தது.இது போதும்.அப்பா புரிந்து கொண்டார். நெஞ்சு நிம்மதியாக...மனசுக்குள் ஆத்மார்த்தமாய்வேண்டுதல் எழுந்தது.'இறைவா,என் அப்பாவை காப்பாற்று'
[டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி-1998-ல் இரண்டாம் பரிசு பெற்ற கதை]

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More