Thursday, March 28, 2013

புனித வெள்ளிவஞ்சகர்கள் சிரிப்பதுவும் மதுக்குளத்தில் நீந்துவதும்
வாழ்க்கை எல்லாம்
பஞ்சணையில் தூங்குவதும் பால்பழங்கள் அருந்துவதும்
பண்பு மிக்கோர்
வெஞ்சிலுவை ஏறுவதும் வெங்கொடுமை தாங்குவதும்
வேதம் என்றால்
நஞ்சிருக்கும் பாத்திரமே நல்லவரின் பாத்திரமோ
அறியோம் நாமே!
-கண்ணதாசன் –இயேசு காவியத்தில்.

Tuesday, March 19, 2013

ஆட்சிக்கு எதிராக …
எருசலேம்.

மர்ம முடிச்சுகள் நிறைந்திருந்த தலை நகரம். உத்தரவுகள் உற்பத்தியாகிற இடத்தில்  சூதும் சதியும் நிழலாய் படிந்து கிடப்பது போலவே தோன்றுகிறது.

சட்டத்தின் பேராலும், மதத்தின் பேராலும் அடக்கியாண்ட அதிகார வர்க்கத்தின், சதியாட்டங்களின் மையம் அது. 

பலதரப்பட்ட அரசியல் சூழ்ச்சிகள் ஒளிந்து விளையாடிய களம்.

அடிமைபட்டு கிடந்த யூதர்கள் தங்கள் அனைத்து விடிவும் இங்கேதான் நிகழும் என்று எதிர்பார்த்திருந்த இடம்.

இங்கேதான் இயேசு செல்கிறார். சிங்கத்தை அதன் குகையிலேயே போய் நேரிடுவதைப் போல.

பஸ்கா விழாவுக்குச் செல்லும் ஒரு பயணமாகத்தான் அது தொடங்கியது. இன்றைய பேரணிகளின் முன்னோடியாக அது இருந்திருக்க வேண்டும்.

பரிகாசம் செய்யும் பரிசேயர்கள், அதட்டும் அதிகாரிகள் எல்லாம் மீறி அவர் பின்னே திரண்டு எழுந்த மனிதர்களின் ஆர்ப்பரிப்புடன் அந்த பவனி போயிற்று.

வெற்றி பெற்று குதிரையில் வரும் மன்னனுக்கு இதுபோல் குருத்து கிளைகள் அசைத்து வாழ்த்து தெரிவித்து பவனி நடத்துவார்களாம். ஆனால் இவரோ எளிமையும் சாந்தமும் நிறைந்த வினோத அரசராக கழுதை மேல் அமர்ந்து முன்னே செல்கிறார்.

அவரோடு ஏற்றதாழ்வு இல்லாமல் அவர் நேசித்த அத்தனை தன்மையுடையோரும் கலந்து 
கொண்டிருந்தனர். அவர்கள் அசைத்துக் காட்டிய ஒலிவக் கிளைகள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஓர் அடையாளமாக இருந்தது.

ஏனெனில் நோவா கால வெள்ளப்பெருக்கில், இனி அழிவு இல்லை என்ற நம்பிக்கையை கொண்டு வந்த புறா ஒரு ஒலிவ மரத்தின் கிளையைதான் கவ்விக் கொண்டு வந்தது.

அவர் இப்போதே எதிரிகளை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றி அரியணை ஏறவேண்டும் என்றே 
பலரும் கருதியிருக்கக் கூடும். அந்த அளவுக்கு நொந்து போய் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பிய ஜனங்கள். அவரது மந்திரிசபையில் இடதும் வலதும் அமர வாய்ப்பு கூட கேட்கிறார்கள். ஆனால் அவருக்குத் தெரிந்திருந்தது. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் நீங்கள் குடிக்க இயலுமா? என்று கேட்கிறார். மக்களை அடக்கி ஆள்கிறவர்கள் தலைவர் அல்ல. என்கிறார். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அனைவருக்கும் பணியாளராய் இருக்கட்டும் என்றார்.

இந்த எருசலேமில்தான் இயேசு கோபப்பட்டு வெகுண்டெழுந்த நிகழ்சியும் அரங்கேறுகிறது. கோயில் ஏழைகளை சுரண்டும் இடமாக இருப்பதைக் கண்டு ஆத்திரம் கொள்கிறார். கோயிலை ஆக்கிரமித்திருக்கும் வியாபாரத்தனங்களை அடித்து துரத்துகிறார்.

கோயிலில் பலி செலுத்த செல்கிறவர்கள் சொந்தமாக பலிபொருள் இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாது. மாறாக அங்கே விற்பனைக்கு வைத்திருக்கும் பலி பொருளைதான் வாங்க வேண்டும்- பன்னாட்டு நிறுவனங்களைப்போல- அவன் சொல்லும் விலைக்குதான் அதை வாங்க வேண்டும். அதற்கான பணமாற்று பரிவத்தனையிலும் அநியாய கொள்ளை.  பலி செலுத்தாமல் போனாலோ தண்டனைக்குரிய பாவம்.  சமயத்தைக் காட்டி சாமானியனை சுரண்டும் போது கோபம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்.

விவிலியத்தில் வேறெதன் பொருட்டும் இத்தகைய கோபத்தை இயேசு வெளிப்படுத்தியதில்லை.  

அவரது கோபத்துக்கு பிறகுதான் கொதித்துபோன ஆதிக்க  வர்க்கம் ‘இனி இவனை விட்டு வைக்கக் கூடாது’ என்று தீர்த்துகட்ட வழி தேடுகிறது.

ஆக இயேசுவின் பார்வையை இங்கே  நாம் புரிந்து கொள்ள முடியும்.

இயேசு எருசலேம் நோக்கி பயணித்த அந்த நிகழ்ச்சிதான் இப்போது குருத்தோலை பவனியாக [குருத்து ஞாயிறு] கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இயேசு துரத்திய அந்த வியாபாரதனம் அழிக்கப் பட்டு விட்டதா என்றால்….?

இன்றும் வியாபார வர்க்கம்தான் அதிகார மையங்களை உருவாக்குகிறது. கொள்கைகளையும், சட்டங்களையும் தீர்மானிக்கிறது. சாமானியனை சிலுவையில் அறைந்து கொல்கிறது.

Tuesday, March 12, 2013

அது அதுவாக…சித்தப்பா வீட்டில் ‘கன்னுகுட்டி’ உயரத்தில் ஒரு நாய் வளர்க்கிறார். தாடை அகன்ற, கழுத்து வீங்கிய, காது தொங்கிய, மூக்கு கறுத்த அந்த முகத்தைப் பார்த்தால் எவருக்கும் பயம் வரும்.
ஆனால் அது முன்னறையில் சோபாவில் ஒரு குழந்தையைப்போல சுருண்டு மடங்கி படுத்துக் கிடக்கும். அரைகிலோ கறியை தின்றுவிட்டு யார் போனாலும் வாலை ஆட்டிக் கொண்டு குழைந்து நிற்கும்.
இன்று போயிருந்தபோது, பால் பையை வாயினால் கவ்வி தூக்கிவர, நாயை வற்புறுத்திக் கொண்டிருந்தார் சித்தப்பா. அதை அதட்டுவதற்கு கையில் ஒரு குச்சியும் , ஒவ்வொரு முயற்சிக்கும் பரிசளிப்பதற்கு பிஸ்கட்டும் வைத்துக் கொண்டு ஒரு தீவிர பயிற்சியாளராக மாறியிருந்தார் சித்தப்பா.
காலையில் எழுப்பி விடுகிறதாம். அதன் சாப்பாட்டு தட்டை தூக்கி வருகிறதாம். இன்னும் என்னென்னமோ சாகசமெல்லாம் பண்ணுவதாக சித்தப்பா பெருமைப் பட்டுக் கொண்டார். விட்டால் ஐ.ஏ.எஸ் தேர்வை எழுத வைத்து விட்டுதான் ஓய்வார் போலிருந்தது.
ஒரு வேளை அதற்கு பயிற்சியளித்து, வித்தை காட்டி பிழைப்பு நடத்த போகிறாரோ?
நாய்க்கும் இந்த எண்ணம் வந்திருக்கும் போல.. அது  என்னை ஏறிட்டுப் பார்த்த பார்வையில் சித்தப்பாவைப் போல சலிப்பு தெரிந்தது.
“காலைல பேப்பர்லாம் எடுத்து வருதுடா.. ஆனா இதுதான்..சவம் பண்ண மாட்டெங்கு..” என்றார் அலுப்புடன்.
ஒரு நாய் நாயாக இருக்க முடிவதில்லை.. மனிதர்கள் உலகில்.

Wednesday, April 18, 2012

வெளங்கிரும்


வார்த்தைகள் ஒரு அடையாளம்.
சூழலை, இடத்தை, கலாசாரத்தை, மரபைக் காட்டும் அடையாளம்.
ஒரே மொழிதான் என்றாலும் வெவ்வேறு வட்டாரங்களின் சொல் பயன்பாடுகளுக்கு தனித்தன்மை உண்டு. மற்றவர் எளிதில் விளங்க முடியாதது.

’வெளங்கிரும்’ என்று சொன்னால் சட்டென்று பொருள் விளங்கி விடாது.
கன்யாகுமரி மாவட்டத்தில் இந்த வார்த்தையை சந்திக்க நேரிடலாம்.


’விளங்கிவிடும்’ என்பதுதான் சற்று நசுங்கி ‘வெளங்கிரும்’ வடிவில் நடமாடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.. வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு சிலதை இழந்து இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பாடம் நடத்துகிற ஆசிரியர் ‘விளங்கிச்சா’ என்று கேட்டால் ‘புரிந்ததா’ என்று கேட்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். ‘வெளங்கிரும்’ என்று சொன்னால்  அதன் அர்த்தம் ‘புரிந்துவிடும்’  என்று புரிந்து கொள்ள தோன்றினாலும் அதன் பொருள் அதுவல்ல.

மேன்மையடையும், உருப்பட்டுவிடும்,சிறந்து விளங்கும் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொனி அதுவல்ல. வஞ்சப்புகழ்சி குடும்பம். எதிர் கட்சி இருக்கை. நல்லவன் வேடத்தில் இருக்கும் கெட்டவன்.
’நாசமா போயிரும்’  என்பதான வாழ்த்துக்கு இணையானச் சொல். நக்கல் தொனி.

அப்பனுக்கு எதிரே மகன் ’தண்ணி’யடித்தால்‘வெளங்குவியா?’
அந்த மகனிடமே வாங்கி அப்பன் அடித்தால்..’வெளங்கிரும்’.

Monday, April 9, 2012

எல்லாருக்கும் நாப்பது. உனக்கு மட்டும் முப்பது

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தின் நுழைவாசலருகே நடைபாதையில் அந்த பாட்டி இருப்பார். மஞ்சள் பூசி குளித்த முகம். சுத்தமான கதர் புடவை.

சாக்கு பை விரித்து சப்போட்டாவும், கொய்யாவும் பரப்பி வைத்திருப்பார்.வெயில் காலங்களில் வெள்ளரி பிஞ்சு. கைக்கருகே ஒரு  அட்டைபெட்டி இருக்கும். அதற்கு மேலே ஒரு தராசு. எளிமையான தொழிலதிபர்.

பக்கத்திலே  இருக்கிற பெரிய பழக்கடையில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற  சட்டை போட்ட பழங்களையே வாங்கி பழக்கப் பட்டது.அதுதான் அந்தஸ்து என்று புத்தியில் ஏற்றப்பட்டிருந்தது. ஏதோ ஒரு நாளில் நல்ல பழங்களாக எடுத்துக் கொள்ள விரும்பி நானே அந்த கடையில் பொறுக்கியெடுத்த போது கடைக்காரன் கடுப்புடன் வெடித்தான் “ வந்துட்டாரு தொர.. நவுரு.. நவுரு” 
சுய கௌரவத்தின் கன்னத்தில் அறை விழுந்தது. வெளியேறிய போது மெழுகு பூசிய பழங்களும் கசந்தன.
அதன் பிறகான ஒரு நாளில்தான் பாட்டியின் பரிச்சயம்.
”வீட்டு தோட்டத்தில விளைஞ்சது மக்களே.. ஒரு கிலோ போடட்டா..” என்பாள்.
”ஒரு துண்டு தின்னு பாக்கியா”  கனி தனி சுவையாய்தான் இருக்கும்.
”எல்லாருக்கும் நாப்பது. உனக்கு மட்டும் முப்பது. எத்தனை கிலோ வேணும்” சொல்வதற்குள் தராசை தூக்கி எடை போட தயாராகி விடுவாள்.

நாமே தொட்டு பழங்களை தேர்ந்தெடுக்க நினைத்தாலும் ஏற்கெனவே பட்ட அடியில் விலகியே நின்றேன்.
ஆனால் பாட்டி நமக்காக நல்ல பழ்ங்களை,பெரிய காய்களாய் தேர்ந்தெடுத்து தராசில் போடுவாள். சிலதை எடுத்து பார்த்துவிட்டு ’இது ஆகாது ’ என்பதாய் ஒதுக்கி வைப்பாள். சிலசமயம் பக்கத்து அட்டை பெட்டியில் மறைவாய் வைத்திருக்கும் பழங்களை எடுத்து கரிசனையாய் தருவாள். ’பிள்ளையளுக்கு கொண்டு குடு’ என்று எடை போட்ட பின்னும் ஒன்றிரண்டை சேர்த்து தருவாள். சினேகமாய் சிரிப்பாள்.

அரைகிலோ வாங்கபோன என்னிடம் ரெண்டு கிலோ விற்ற பாட்டி மார்கெட்டிங்கில் எந்த பட்டமும் பெற்றதாக தகவலில்லை.
பாட்டியின் வியாபாரம் சில மணி நேரத்துக்குள்ளே முடிந்து போய்விட்டது. கடையை காலி செய்து விட்டு கிளம்பி விட்டாள்.

பாட்டியின் வியாபாரம் சில மணி நேரத்துக்குள்ளே முடிந்து போய்விடும். கடையை காலி செய்து விட்டு கிளம்பி விடுவாள்.

பாட்டியின் சொந்த தோட்டம் வீட்டுமனையாக கூறுபோட்டு விற்கப்படாதிருப்பதாக.
நடைபாதை  நகர நிர்வாகத்தால் விரட்டியடிக்கப்படாமல் இருப்பதாக.
அவள்  ஆரோக்கியம் நீடித்திருப்பதாக.
நாளையும் பின்னும் பல நாளும் அவள் வந்து போயிருக்க.... பிரார்த்தனை செய்கிறது மனசு.

Tuesday, April 3, 2012

சிலுவை மரம்.
அதிகார வர்க்கம் சிலுவைக்கு கையளித்தபோது.. ஏறக்குறைய அவர் அனாதையானார்.

ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நின்றது அவர் செய்த குற்றம்.
ஆதிக்க வெறியர்களின் வஞ்சகத்தை உரித்துக் காட்டியது பெரும் பிழை.
எளியோரின் உரிமை வாழ்வுக்கு குரல் கொடுத்தது மாபெரும் சதி.

எப்படி பொறுக்க முடியும்.
ஒரு தச்சனின் மகனுக்கு எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல். எமக்கு நிகராக  நீயாக முடியுமா..?
ஆணையிடுகிற அமைப்பையே கேள்விக்குள்ளாக்கினால்.. விட்டு விட முடியுமா..?

எனவே வெறுப்பின் முள்முடிகளாலும் பழிவாங்கும் ஆணிகளாலும் துளைத்தெடுத்தோம்.

நிருபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் மேல் சிலுவையை தூக்கி வைத்துவிட்டு பிலாத்துகள், தங்கள்  கயமைத்தனத்தை கைகழுவிக் கொண்டார்கள்.

அவர் கொடுத்த ‘ அழைப்பை’ அடுத்த கணமே ‘ஏற்றுக் கொண்டு’  பின் தொடந்தவர்களே இப்போது ஆளுக்கொரு திக்கில்.

உடன்வந்தோரும் நெருக்கடிகளுக்குப் பயந்து மறுதலிக்கவே செய்தார்கள்.

வழிந்த இரத்த வியர்வையை வலிந்து துடைக்க வந்த வீரமிக்க பெண்டிர் விதிவிலக்கு.

முடியாட்சிகள் போய் குடியாட்சிகள் வந்த பின்னும் வரலாறுகள் மாறவே இல்லை.
சகிப்புத்தன்மையும்,  நீதிக்காக போராடும் குணமும் கொண்டோரை அப்போதிலிருந்தே  சிலுவையில் அறைவதே நமக்கு பழக்கமாயிருந்திருக்கிறது.

உயிர்ப்பு, மூன்றாம் நாள்தான் என்பது தெரியாமலே வாழ்க்கை போய்கொண்டேயிருக்கிறது.
[புகைப்பட உதவி: google images]

Monday, November 28, 2011

பாம்பு


 செக்கசெவேலென்று குருதிபடிந்த போர்களம் போல் காட்சியளித்தது வானம். வெட்டுண்டு உருண்டு விழும் தலைபோல் கதிரவன் ,மேற்கில் விழுந்து கொண்டிருந்தான். போதையேறி தடுமாறிக் கொண்டிருப்பவனைப் போல கடற்பரப்பு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. விம்மி புடைக்கும் அந்த கடல் மார்பில் பாய்மர படகுகள்  உரசிக் கொண்டிருப்பது நிழற் சித்திரமாய் ரசிக்க வைக்கிறது.

அந்த அழகை ரசிப்பார் யாரும் இல்லை இப்போது. சொன்னதையே சொல்லும் குடிகாரனைப்போல கரையில் திரும்ப திரும்ப வந்து மோதும் அலைகளோடு விளையாட யாருக்கும் ஆர்வமில்லை. எங்கும் துக்கம் தோய்ந்த முகங்கள்.பயம் நிரம்பிய விழிகள். கூடபுரம் மக்கள் தங்கள் நிம்மதியை தொலைத்து பல ஆண்டுகளாயிற்று. எல்லாம் அந்த புதரால் வந்த வினை.

கூடபுரத்தின் குடியிருப்புகளை ஒட்டிதான் அந்த புதர் இருந்தது. அடர்த்தியான உயரமான புதர். உள்ளே என்ன இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு காடு மாதிரி விரிந்து கிடந்தது. சிலர் வருவதும் போவதும் ரகசியமாய் நடந்து கொண்டிருந்தது. அதன் அருகே செல்ல யாரும் விடப்படவில்லை. ஏதோ ஓர் ராஜாங்க விசயம்.யாரும் நெருங்க துணியவில்லை.

இப்படி இருக்கையில்தான் சில நாட்களுக்கு முன்பு நாய் ஒன்று அந்த புதரைப் பார்த்து நீண்ட நேரமாய் குரைத்துக் கொண்டிருந்தது.  ‘என்னடா  இது   நம்  நாய்  இப்படி  விடாம  கத்திக் கொண்டிருக்காதே’  என்ற ஐயத்தில் நாயின் சொந்தகாரனான உதயவர்மன் புதரை எட்டிப் பார்த்தான். புதருக்குள்ளே ஏதோ அசைவது மாதிரியிருந்தது. எட்ட நின்று உற்று  பார்த்தவனுக்கு மூச்சே நின்றுவிட்டது சிலகணம்.

 உள்ளே சுருண்டு மடங்கி பசியோடு பாம்பு ஒன்று படுத்துக் கிடந்தது. ராட்சச பாம்பு. சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பாம்பு எதிரே நாயைக் கண்டதும் உற்சாகமாகி, பிரமாண்டம்மான வாயைத்திறந்து கத்திக்  கொண்டிருந்த நாயை ‘லபக்’என்று விழுங்கி பெருமூச்சி விட்டது. உதயவர்மன் பயந்து அலறிக் கொண்டே ஊருக்குள் ஓடினான்.

சத்தம் கேட்டு கூட்டம் கூடியது. ‘அந்த புதரில் ஆபத்து இருக்கிறது.  ஆபத்து ’ என்று கத்தியவனை மற்றவர்கள் பொருட்படுத்தவே இல்லை.
‘கிறுக்குத்தனமா எதையாவது உளறிக் கொண்டிருக்காதே. மன்னர் காதில் விழுந்தால் தொலைந்தோம். பேசாமலிரு. மன்னரிடம் சொல்லி நாம் முறையிட்டு பார்ப்போம்’.
அதற்குள் புரவிகளில் வந்த காவலர்கள் கூட்டத்தை விரட்டியடித்தனர். கூட்டம் பயந்து மிரண்டு ஓடி கலைந்தது.

அதன் பிறகு, மக்கள் வீடுகளில் வளர்க்கிற கோழி ,ஆடு,மாடு போன்ற பிராணிகள் காணாமல் போகத் தொடங்கியதிலிருந்து அனைவரின் நிம்மதியும் கரைந்து போனது. யாரும் மூச்சுவிடவே பயந்தார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் தின்று கொழுத்துக் கொண்டிருந்தது பாம்பு.

எல்லாம் அடித்து தின்றபிறகு இனி ஆளையும் அடிக்கலாம் என்று நம்பிக்கை அதற்கு வந்ததும் ஒரு நாள் ‘புஸ்ஸ்ஸ்ஸ்ஸெ’ன்று தலையை உயர்த்திக் கொண்டு சீறியது. சந்தோசத்தை வெளிக்காட்டிய அந்த பிரமாண்ட சீற்றம் ஊரையே உலுக்கிப் போட்டது. நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த குடிமக்கள் அந்த சத்தத்தை கேட்டதும் அலறியடித்துக் கொண்டு வீதிக்கு வந்தார்கள். கூட புரத்தில் ஏதோ நடக்கப் போகிறது என்பதற்கு எச்சரிக்கை மணியாக இருந்தது அந்த சத்தம்.

‘புக்கிசிக்கி’ என்ற தூர தேசத்து யாத்திரிகனின் பயணக் குறிப்புகளும் மக்களிடம் பரவத் தொடங்கியிருந்த காலம் அது.அவரது குறிப்பில் இது போன்ற பாம்புகள் மிகவும் கொடியன என்றும், அது இருந்த இடத்திலிருந்து பல காத தூரத்துக்கு விசத்தை கக்கி எதிரிகளை அழித்து விடும் என்பதும் அது விடும் மூச்சு காற்றில் புற்பூண்டுகள் கருகிவிடும் என்பதும் வாழிடங்களை விட்டு மற்ற உயிர்களை துரத்திவிட்டு,பலுகிபெருகி நிலமெங்கும் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆக்கிவிடும் என்னும் உண்மைகளும் வெளிவந்தவண்ணமிருந்தன.

மற்ற பகுதிகளில் விரட்டியடிக்கப்பட்ட இந்த பாம்பை இந்த இடத்தில் மட்டும் விட்டு வைக்க என்ன காரணமிருக்கும். என்ற ஐயம் எல்லோரிடமும் எழுந்தது. 

பாம்பின் அந்த சீற்றத்தைக் கேட்டதுமே உதய வர்மனுக்கு , தான் எதிர்பார்த்த ஆபத்து நெருங்கிவிட்டது என்பதை தெரிந்து போயிற்று.  “ இந்த புதர் நமக்கு வேண்டாம்” என்று கூச்சல் மக்களிடம் மனங்களிலும் குரல்களிலும் எழுந்தன.

மெதுவாக தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு சூழ் நிலையை உன்னிப்பாக கவனிக்கத்தொடங்கினான் உதய வர்மன். காட்டின் மையத்தில் பாம்பின் தலை தெரிந்தது.பிரமாண்டமான தலை. ஒன்றல்ல இரண்டு தலை. இரண்டு பாம்புகளோ. அப்படிதான் இருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டான்.

குடிமக்கள் தவிப்பும் பயமுமாக கத்திக் கொண்டேயிருந்தார்கள். இன்னும் விழித்துக் கொள்ளாமல் போனால் நமக்கும் நாயின் நிலைதான் என்று திகில் அவர்கள் முகங்களில் விரவி கிடந்தது. எனவேதான் அந்த பாம்பை அடித்து துரத்தி விடவேண்டுமென்று புதரைச் சுற்றி கூடியிருந்தார்கள்.  அரண்மனை காவலர்கள் அவர்களை ஒரு படையாக வந்து சூழ்ந்தார்கள்.

 “அது அரசாங்கமே வளர்க்கிற பாம்பு. தூர தேசத்திலிருந்து கொண்டுவந்து விட்டிருக்கிறோம்.அதை விரட்டக் கூடாது. நமது சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாப்புக்காக அந்த பாம்பை நாம் மன்னர் வளர்க்கிறார். கஜனாவில் பாதியை அதற்கு செலவழித்திருக்கிறோம். அது இங்கு இருப்பதை அறிந்தாலே எதிரிகள் பயந்து ஓடிவிடுவார்கள். ஆகவே பேசாமல் அதை வளரவிடுங்கள். கலைந்து போய்விடுங்கள்’ என்று எச்சரித்தார்கள்.                 [தொடரும்]Thursday, October 6, 2011

கொள்ளி


பிறந்த நாள், கல்யாணம் ,சாவு, எதிலாவது பாஸானது, எதையாவது வாங்கினது, சேர்ந்ததுக்கு, பிரிஞ்சதுக்கு இப்படி எல்லாத்துக்கும் பொதுவா ஒரு சடங்கு இருக்கு தெரியுமா..? வேறென்ன.. ‘குடி’க்கிறதுதான்.


குடிப்பது இப்போது ஒரு சமூகக் கடமை.

யாரும், எப்போதும், எங்கே வேண்டுமானாலும் குடிக்கலாம்; தப்பில்லை என்கிற மனோபாவத்திற்கு வந்துவிடுதலே நாகரீகமாகக் கருதப்படுகிறது.

அப்பாவும் பிள்ளையும் , அண்ணனும் தம்பியும் சேர்ந்தே குடிப்பது நமது நாகரீக வளர்ச்சியின் இன்னொரு அடையாளம்.

சாலையோரத்தில் நின்றபடியே ஊற்றிக் கொண்டு வாகனத்தை ஓட்டிச் செல்வதை இயல்பாகப் பார்த்துக் கொண்டு கடந்துவிட முடிகிறது.

கல்விசாலைகள் அருகிலும், கோயில்கள் பக்கத்திலும், குடியிருப்புகளுக்கு நடுவிலும் அரசாங்கம் வெட்கமே இல்லாமல் சாராயம் விற்கிறது. அடுத்த சந்ததிகள் வரை தயக்கமே இல்லாமல் அதைக் குடித்து நாட்டின் வருவாயைப் பெருக்கி தேசபக்தியை காட்டிக்கொள்கிறது.

அத்து மீறும் ஒரு சமூகம், குடும்பம் பேணாத ஒரு தலைமுறை, குற்றங்கள் மீது ஆர்வம் கொண்ட இளையோர் என்று வளர்ந்து கொண்டிருப்பதை சுரணையில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவர்களிடமிருந்து பிடுங்கி அதில் கொஞ்சத்தை இவர்களுக்கே ‘இலவசங்கள்’ வழங்கி ஓட்டுகளை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன அரசுகள்.

பிரபலமான நவீன இலக்கியவாதிகள் குடிப்பது எவ்வளவு ரசனைக்குரியது என்று நவீனங்கள் படைக்கிறார்கள். பிளாக் எழுதுகிறார்கள். வழிமுறைகள் சொல்லித்தருகிறார்கள். விசயங்கள் சந்தோசமாய் பின்பற்றப் பட்டு விடுகின்றன.

************

நேற்று அலுவலகத்தில் இருந்த போது ஜன்னல் வழியாக எதிரேத் தெரிந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது. காற்றில் எழும்பி மலை முழுவதற்கும் அது பரவிக் கொண்டிருந்தது. புதர் மண்டி கிடக்கும் அந்த மலை பூமி சடசடவென்று அழிந்து கொண்டிருந்தது. அணைக்கமுடியவில்லை.

மாலை வீட்டுக்கு கிளம்புகிற போது அறியமுடிந்த செய்தி இதுதான்.

ஓரளவு, தீ ,மலை உச்சி நோக்கி நகர்ந்தபின் ஓடிவந்தார்களாம் நாலுபேர். பக்கத்துக் கல்லூரி மாணவர்கள். தலை முடியெல்லாம் தீயில் கருகி இருந்ததாம். விடுமுறையைக் கொண்டாட புதர் மறைவுக்குப் போனார்களாம். குடி போதையில் சிகரெட் பற்ற வைத்தவன் விட்டெறிந்த தீக்குச்சிக்குதான் மலை இரையாயிற்றாம்.

தீ எரியக் காரணமானவன் செம போதை. எழுந்து நிற்க முடியவில்லை. தீ சுற்றி பரவ பெருத்த உடம்பு கொண்ட அவனை தூக்கிவரவும் முடியாமல்… இவர்கள் மட்டும் தப்பிவிட.. தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொண்ட அவனை கரிக் கொட்டையாகத்தான் பார்க்க முடிந்தது.
Photo: google images

Thursday, September 8, 2011

விருந்து… விளையாட்டு.. கோலாகலம்..


மூன்று மாதம் தொடர்ந்து மழை. எங்கும் வெள்ளம். ஏரிகள் நிறைந்து வழிந்தன. காயல் நுரைத்து பொங்கியது. பெரும்பாலும் கரையோரங்களில் அமைந்த குடியிருப்புகள், நகரங்களைச் சுற்றி இன்னும் தலை துவட்டாத மரங்கள் செடிகள் கொடிகள்.. எங்கும் பச்சை பசேல்.

மழை ஓய்ந்த இந்த மாதம் துவங்கிவிட்டது உற்சாகக் கொண்டாட்டங்கள்.
கடந்த சில நாளாய் குமரி மாவட்டத்தில் பூக்களின் விலை தாறுமாறாய் ஏறிப் போனது. வீடுகளில், வெளிகளில்  எங்கும் பூக்களை பார்க்க முடியவில்லை. மொத்தமாய் கேரளாவுக்கு சென்றுவிட்டன.

ஓணம். மலையாளிகளின் மகோன்னத விழா. கேரளாவின் அரசுவிழா. கொல்லம் வருடத்தின் முதல் மாதமான சிங்கத்தில் தொடங்குகிறது. பத்து நாள் சிறப்பிக்கப்படும் இந்த அறுவடை விழா, சாதி மத வேறுபாடின்றி எல்லா மலையாளிகளாலும் கொண்டாடப்படுகிறது. உடமைகளை விற்றாவது ஓணம் கொண்டாடுவது கலாச்சாரமாக உள்ளது.


ஓணம் கொண்டாடுவது பற்றி பல கதைகள் நிலவி வந்தாலும் பிரபலமான ஒரு கதை மகாபலி ராஜாவுடையது. அவர் பூமியை ஆண்ட ஒரு அசுரன். அவர் தர்ம சிந்தையும், தாராள மனமும் கொண்ட சக்ரவர்த்தி. ஏற்ற தாழ்வுகள் இல்லாத நீதிமானின் ஆட்சி. குற்றங்களே நடைபெறவில்லை. நீதிமானாக இருந்தார் மகாபலி. அவரது ஆட்சியில் மக்கள் கவலையின்றி சுபிட்சமாக இருந்தனர். அதனால் மன்னனை போற்றி புகழ்ந்தனர்.

 மகாபலியை பூலோக இந்திரன் என்று மெச்சுவது தேவலோகத்தில் இந்திரனுக்கு உறுத்தியதாம். தன் பதவிக்கு ஆபத்து என்று உணர்ந்து கொண்ட இந்திரன் மகா விஷ்ணுவின் உதவியை நாட.. அவர் ஏழை பிராமணனின் வேசத்தில் வாமன அவதாரமாக வந்தார். மகாபலியிடம் தனக்கு மூன்று அடி நிலம் கேட்டாராம். அவன் ஒப்புக் கொண்டதும் விச்வரூபமெடுத்து  நிலத்தையும் வானையும் இரண்டு அடிகளால் அளந்தாராம். மூன்றாவது அடிக்கு என்ன செய்வது. மன்னன் தன் தலையைக் கொடுத்தானாம். அதை மிதித்து அவனை பாதாள உலகுக்கு அனுப்புவதற்கு முன் தன் மக்கள் சந்தோசமாயிருப்பதை வருடந்தோறும் வந்து பார்க்கும் அவர் விருப்பத்தை வரமளித்தாராம்.

அந்த வருகையை எதிர்  நோக்கிதான் வாசலில் பூ கோலம். மன்னரின் பாதம் தரையில் படலாமா.. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான பூக்கள். புதிது புதிதான டிசைன். விருந்து… விளையாட்டு.. கோலாகலம்.. வாணவேடிக்கை எல்லாம் மகிழ்சியோடு இருப்பதை வெளிப்படுத்தவே.

முதல் நாள் அத்தம் தொடங்கி பத்தாம் நாள் திருவோணம் வரை கொண்டாட்டங்களின் இன்னோரு முக்கியமான அம்சம் ஓண சத்யா என்றழைக்கப்படும் விருந்து.  வாழை இலையில் 11 முதல் 13 கூட்டு வகைகளுடன் பாயாசம் பப்படம் உட்பட பிரமாதமாய் விருந்து.சொந்தம் பந்தம் அயலார் என சேர்ந்து தரையில் அமர்ந்து உண்ணுவது பாரம்பரியம். முடிந்தவரை பிறர்க்கு உணவளித்து பசிபோக்கும் தர்ம சிந்தையை வளர்ப்பதே இதன் உட்போருள்.

ஓண காலம் கேரளாவின் சுற்றுலா பெருகும் காலம். பாம்பு வள்ளங்களில் நூற்றுக் கணக்கானோர் துடுப்பு பிடிக்க நடைபெறும் படகுப் போட்டி விமரிசையானது. 

தெருக்களில்,ஆலயங்களில், தொலைக்காட்சிகளில் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் பரபரக்கின்றன.  கேரளத்தை ஒட்டிய குமரி மாவட்டத்திலும் அந்த மகிழ்சி தொற்றிக் கொண்டிருக்கிறது. இங்குள்ள உயர் கல்வி நிலையங்களில் பெருமளவில் பயிலும் கேரள மாணவர்களால் பயிலகங்களில் அத்தப் பூ கோலப் போட்டிகள் நடக்கின்றன. பாரம்பரிய வெள்ளை முண்டு உடுத்து மாணவிகளும் பட்டு வேட்டி சட்டை அணிந்து மாணவர்களும் ஓணத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். கலகலப்பான கலை நிகழ்சிகள் அரங்கேறுகின்றன. நீண்ட விடுமுறை விடப்படுகிறது.

மகிழ்சியாய் இருப்பதே மகிழ்சியை கொண்டுவரும். நம்பிக்கைகள் அதற்கு பயன்படுமானால் வரவேற்போம். வாழ்த்துவோம்.

ஓணம் நல்வாழ்த்துகள்.

Sunday, September 4, 2011

அரசு கேபிள் வந்தது… DTH வளருது.இப்போது தெருக்கள் அமைதியாக இருக்கிறது. சாத்திய ஜன்னல் வழியாக கசிந்து கொண்டிருக்கும் டீ.வி.யின் அலறல்கள் இல்லை. படபடப்பில்லாமல் சமையல் வேலைகள் நடைபெறுகின்றன. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் பார்வை குறைபாடு மெல்ல மெல்ல நீங்கி வருவதாக தகவல். விருந்தினர்கள் முழு மனதோடு உபசரிக்கப் படுகிறார்கள். சரியான நேரத்துக்கு சாப்பிடமுடிகிறது.


இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது.

இந்த மக்கள் மீது அம்மா அரசு கொண்டுள்ள அக்கறையின் விளைவாகதான் இந்த மாற்றங்கள் என்று சொன்னால் மிகையில்லை. குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் தொடங்கப் பட்டதிலிருந்து மக்கள் டீ.வி யை மூடிவிட்டார்கள். மாற்றங்கள் படிப்படியாக வரத் தொடங்கி விட்டன. ஒரு குடும்பத்தின் ஏகாதிபத்தியத்தை அப்புறப்படுத்தி பல்லாயிரம் குடும்பங்களுக்கு நிம்மதி கிடைக்க வழி வகுத்திருக்கிறது இந்த அரசு.

1 கோடியே 45 இலட்சம் இணைப்புகள் கொண்ட 34,344 ஆபரேட்டர்கள் அரசுடன் இணைந்து இந்த சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் 8 எம்.எஸ். ஓ களின் 400 ஆபரேட்டர்கள் தங்களது 75 ஆயிரம் இணைப்புகளோடு ஜோதியில் கலந்திருக்கிறார்கள். மாவட்டத்தில் ஒளிபரப்பாகும் 60 சானல்களில் 12 உள்ளூர் சானல்கள். 10க்கும் மேற்பட்ட மலையாள சானல்கள். 20 பிறமொழி சானல்கள். பெரும்பாலானவை ஒரு துணுக்கை ஜவ்வாக இழுத்து 24 மணி  நேரமாகக் காட்டும் செய்தி சானல்கள். இன்னும் பாதி சினிமா இசை…

விருப்பமில்லா சானல்களை வலுக்கட்டாயமாக திணித்து இவைகளுக்கு 70 ரூபாய் கட்டணமா என்று இப்போது கேட்க முடியாது.
கட்டண சானல்கள் ‘விரைவில்’ வரப் போகிறதாம். அந்த விரைவு எப்போது என்று தெரியாததால்  வினையை விலை கொடுத்து வாங்குவது மாதிரி DTH சேவையை நாடி அவசர அவசரமாக நகர்வோரை என்ன செய்வது. இவர்கள் அரசுக்கு ‘மாதத்துக்கு 60 கோடி வாருவாயை’ வர விட மாட்டார்கள் போலிருக்கிறது. ஒருவேளை ஏகபோகமாய் சம்பாதிக்க  அரசு மறைமுகமாக DTH  நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறதோ என்னவோ..?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More